
நாட்டின் வடபுலத்தில் பிறந்து, தமிழ் இலக்கிய வானம்பாடியாக உருமாறி வரிசையாக இலக்கிய பெட்டகங்களை படைத்து வருபவர் முனைவர் க. சுபாஷிணி.
தமிழர் புலம்பெயர்ந்து வாழ்ந்த – வாழ்கின்ற நிலத்திற்கெல்லாம் பறந்து பறந்து அங்கெல்லாம் பொதிந்து இருக்கின்ற, வரலாற்றுத் தரவுகளை தேடித் தேடி பதித்து, ஏறக்குறைய 2,500 ஆண்டுகள் தமிழரின் பெருமையையும் தொல்முன்மையையும் தொகுத்து தமிழர் புலப்பெயர்வு என்னும் பெயரில் நூற்பெட்டகமாக உருவாக்கி இருக்கிறார்.

மலேசியத் தமிழர்கள் மட்டும் அல்லாமல் உலகவாழ் தமிழர் அனைவரும் படித்து அறிய வேண்டிய எண்ணற்ற தகவலை இணைத்து பழந்தமிழர்தம் ஆட்சி முறை, கடல் வாணிபம், போர்க்கலை, கடற் பயணம், கூட்டு வாணிகம், கூட்டு சமுதாய வாழ்க்கை முறை என தமிழறர் பண்பாடும் மேன்மையும் மிளிரும் வண்ணம் எல்லாவற்றையும் பதிய வைத்து இந்த நூலை சுபாஷினி தயாரித்திருக்கிறார்.
இந்த நூல் மலேசியத் தமிழ் இயல் எழுத்தாளர் சங்கத் தலைவர் பொன் கோகிலம் ஒருங்கிணைப்பிலும் பச்சைபாலன் போன்ற ஏனைய தமிழாய்ந்த அறிஞர்தம் துணையோடும் இப்பொழுது தலைநகரத்து துன் சம்பந்தனார் மாளிகையின் தான்ஸ்ரீ கே.ஆர்.சோமா அரங்கத்தில் வெளியீடு கண்டு வருகிறது.

மஇகா தேசிய துணைத் தலைவரும் எய்ம்ஸ்ட் பல்கலைக்கழக இணை வேந்தருமான டத்தோஸ்ரீ சரவணன் சிறப்புரையாற்றி இந்த நூலை வெளியீடு செய்து வருகிறார்.
தேசிய நில நிதி கூட்டுறவு சங்க நிர்வாக இயக்குனர் டத்தோ பா. சகாதேவன், சொலல்வல்லான்- சோர்விலன் என்னும் வள்ளுவர் வார்த்தைக்கு இணங்க வாழ்கின்ற டான்ஸ்ரீ க. குமரன், காவல்துறை மேனாள் ஆணையர் ஆ. தெய்வீகன் போன்றோர் மேடையை அலங்கரிக்க கல்வியாளர் முனைவர் என் எஸ் ராஜேந்திரன், மூத்த பத்திரிகையாளர்கள் டத்தோ எம்.ராஜன், வித்தியாசாகர் கல்வியாளர் மு. கணேசன் உள்ளிட்ட ஏராளமான தமிழ்ப் பெருமக்களும் தமிழ் ஆர்வலர்களும் அரங்கு நிறைந்திருக்க, இந்த நூல் தற்பொழுது சரவணன் தலைமையில் வெளியீடு கண்டு வருகிறது.
முனைவர் சுபாஷினியின் தமிழ்ப்பணியும் தமிழ் இலக்கியப் பணியும் மேன்மேலும் சிறக்க குமரி நல்லாள் வாழ்த்துகிறாள்!
விரிவான செய்தி வாய்ப்பு இருந்தால் பின்னர்..


