Saturday, June 6, 2026

மலேசியாவில் உண்மையான ஒற்றுமை!விசாரணை ஆணையம் அமைக்க அன்வாருக்கு துணிவுண்டா?

-பொன்.வேதமூர்த்தி

மலேசியாவில் நிலவும் இன-மத நல்லிணக்க யதார்த்த நிலையை ஆராய ஒரு அரச விசாரணை ஆணையத்தை நிறுவ வேண்டும் என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-MAP மற்றும் ஹிண்ட்ராப் இயக்கத் தலைவர் பொன்.வேத மூர்த்தி, மத்தியக் கூட்டரசை கேட்டுக் கொண்டுள்ளார்.

இதன் தொடர்பில் நேற்று திங்கட்கிழமை பிரதமர் அன்வாருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மலேசியா, 2057இல் சுதந்திர நூற்றாண்டு விழாவைக் கொண்டாட இருக்கும் நிலையில், நாட்டில் நிலவும் இன மற்றும் மத பிரதிபலிப்பை, உள்ளதை உள்ளபடி அறிய துணிச்சலான நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது. உண்மையான ஒற்றுமை நிலையை, அரசியல் மேலாதிக்கம், நீண்ட காலமாகவே திரையிட்டு மறைத்துவருகிறது; எனவே, உண்மை எதுவோ அதை மறைக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மௌனம் காப்பது ஒற்றுமையின் அடையாளம் அல்ல. முறையான சமத்துவ மின்மை, வரலாற்று அநீதி, மற்றும் கலாச்சார புறக்கணிப்பு போன்றவை பிரிவினையை இன்னும் ஆழப்படுத்துகின்றன.

மலேசியாவின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பியதில் முக்கிய பங்கு வகித்த இந்திய, சீன மக்கள் உட்பட அனைத்து சமூகங்களின் பங்களிப்பை பிரதிபலிக்கும் வகையில் நம் கல்வி முறை சீர்திருத்தப்பட வேண்டும். தேசபற்று, வெறும் அடையாள ஒத்திகையாக மட்டும் அமைந்துவிடக் கூடாது; அர்த்தமுள்ள கல்வி, சமயங்களுக்கு இடையேயான உரையாடல்-உறவாடல் மற்றும் கலாச்சார புரிதல் மூலம் ஒற்றுமையை வளர்க்க வேண்டும்.

இந்திய அடித்தட்டு மக்கள் நீண்டகாலமாக புறக்கணிக்கப்படும் அவலநிலை மிகவும் அழுத்தமானது; சுதந்திரப் பேச்சுவார்த்தைகளில் இருந்து வேண்டுமென்றே விலக்கப்பட்டு, கட்டமைப்பு ரீதியாக பின்தங்கிய நிலையில் கைவிடப்பட்ட ஒரு சமூகம், இது. வீட்டுவசதி, கல்வி, திறன் பயிற்சி மற்றும் தொழில்முனைவோர் நலதிட்டங்கள் மூலம் கடந்த 70 ஆண்டுகளாக நீடிக்கும் அநீதியை சரிசெய்ய 13-ஆவது மலேசிய பெருந்திட்டம்RMK-13 இன் மூலம், வெ.25 பில்லியனை ஒதுக்குமாறு அரசாங்கத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் பொன்.வேதமூர்த்தி அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையான ஒன்றுபட்ட மலேசியாவை நோக்கிய பயணம் இப்போதே தொடங்கப்பட வேண்டும். இனம் அல்லது சமயம் காரணமாக எவரும் புறக்கணிக்கப்படாத ஒரு தேசத்தை நம் வருங்காலத் தலைமுறையினருக்-காகக் கட்டியெழுப்ப நாம் கடமைப்பட்டுள்ளோம். மெர்டேக்கா எழுச்சியை நீதி, அனைவருக்குமான உள்ளடக்கம், சமத்துவம், அர்ப்பணிப்பு உணர்வுடன் பிரதிபலிப்போம்! மாறாக வெற்று முழக்கத்தால் அல்ல!!

அடுத்த 32 ஆண்டுகளாவது சீர்ப்படுத்தும்-செம்மைப்படுத்தும் காலமாக இருக்கட்டும் என்றும் முன்னாள் அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை