Wednesday, April 22, 2026

அகமட் ஜாஹிட் ஹமிடி அம்னோவிற்கு மட்டும்தான் தலைவரா அல்லது தேசிய முன்னணிக்கும் தலைவரா?

Made with LogoLicious Add Your Logo App

நாட்டை ஆளுகின்ற நம்பிக்கைக் கூட்டணியின் தளபதியான மக்கள் நீதி கட்சி-பிகேஆர் கட்சியின் நேற்றைய உட்கட்சித் தேர்தலில் பொருளாதாரத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ரஃபிசி ரம்லியும் இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமட்டும் தோல்வி அடைந்துள்ளனர்.

இந்த இருவரில் ரஃபிசி ரமிலி, பி கே ஆர் துணைத் தலைவர் தேர்தலில் தான் தோல்வியடைந்தால் அமைச்சர் பதவியை துறப்பதாக ஏற்கெனவே அறிவித்துவிட்டார்.

நிக் நஸ்மியின் நிலை குறித்து ஒன்றும் தெரியவில்லை.

மொத்தத்தில் இது பிகேஆர் கட்சிக்குள் நிலவுகின்ற இக்கட்டான நிலை.
இந்த நேரம் பார்த்து அம்னோவுக்கு இன்னும் அமைச்சர் பதவி வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற பேராசை எதுவும் இல்லை; எங்களுக்கு ஏற்கெனவே ஏழு கேபினெட் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் நாங்கள் நன்றியுடன் இருக்கிறோம் என்று அம்னோ தலைவர் முனைவர் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ள கருத்து, பொருத்தம் இல்லாதது எனத் தெரிகிறது.

ஏதாவது கிடைக்குமா என்று வாசல் கதவை திறந்து வைத்துக் கொண்டு காத்திருப்பதைப் போல இருக்கிறது ஜாஹிட் ஹமிடியின் கருத்து;

நாடு விடுதலை அடைந்தது முதல் இடைநில்லாமல் தொய்வின்றி அறுபது ஆண்டுகள் சிந்தாமல் சிதறாமல் நாட்டை ஆண்ட கூட்டணியின் இன்றைய தலைவர் வெளிப்படுத்துகின்ற இந்தக் கருத்து அரசியல் அருவறுப்பாகவும் தரம் தாழ்ந்தும் இருக்கிறது.

இவர் தலைமையேற்றுள்ள அம்னோ வழிநடத்தும் தேசிய முன்னணியின் முக்கியமான உறுப்பு கட்சிகள் மசீச-வும் மஇகா-வும்.

Made with LogoLicious Add Your Logo App

இந்த இரு கட்சிகளும் அமைச்சரவையில் இடம்பெறாமல் இருக்கின்றனவே என்பதைப் பற்றி ஜாஹிட் ஹமிடி கொஞ்சமும் அக்கறையோ ஈடுபாடோ காட்டுவதாகத் தெரியவில்லை.

தேசிய முன்னணி ஆட்சி காலத்தில் மஇகாவும் மசீசவும் பி கே ஆர் கட்சிக்கு எதிராகவோ அல்லது அதன் தலைவரும் இன்றைய பிரதமருமான அன்வாருக்கு எதிராக ஏதும் கருத்து தெரிவித்திருக்க கூடும்.

Made with LogoLicious Add Your Logo App

தவிர 2022 நவம்பர் 19ஆம் நாள் நடைபெற்ற 15 வது பொதுத் தேர்தலில் எந்த கட்சிக்கும் அல்லது எந்த கூட்டணிக்கும் ஆட்சி அமைக்கின்ற அளவிற்கு பெரும்பான்மையும் வலிமையும் இல்லாத சமயத்தில் ஏறக்குறைய ஒரு வாரகாலம் நாட்டில் மாற்றி மாற்றி அரசியல் பேரம் நடந்தது; இதே அம்னோகூட, காலையில் பெரிக்கத்தான் கூட்டணியுடன் கலந்துரையாடல் என்றால் மாலையில் நம்பிக்கைக் கூட்டணியுடன் ஆலோசனை என்று காலம் கடத்தியது.

சளிப்படைந்த அன்றைய மாண்புசால் மாமன்னர், பேசாமல் நம்பிக்கை கூட்டணியும் பெரிக்கத்தான் கூட்டணியும் சேர்ந்து ஆட்சி அமையுங்கள் என்று கூட ஒரு பரிந்துரையை முன்வைத்தார்.

அந்த பரிந்துரையை சட்டென மறுத்தவர் பெர்சத்துக் கட்சியின் தலைவரும் பெரிக்காத்தான் கூட்டணித் தலைவருமான டான்ஸ்ரீ முகைதீன் யாசின்.

Made with LogoLicious Add Your Logo App

இப்படியாக ஏறக்குறைய ஒரு வாரம் நாட்டில் நிச்சயமற்ற நிலையும் அரசியல் நிலைத் தன்மையற்ற போக்கும் நீடித்த நிலையில்தான் ஒரு வழியாக நம்பிக்கை கூட்டணியுடன் தேசிய முன்னணியின் அம்னோ மட்டும் சேர்ந்து கொண்டு ஆட்சி அமைக்கும் நிலை எட்டப்பட்டது

இதில் மசீச-வும் மஇகா-வும் ஏன் இணைத்துக் கொள்ளப்படவில்லை என்றால் இந்த இரு கட்சிகளை சேர்ந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் பெரிக்கத்தான் கூட்டணி ஆட்சி அமைய ஆதரவு தெரிவித்து கையொப்பமிட்டதாக அப்பொழுது பரவிய செய்தி காரணமாக இருக்கக்கூடும்.

தேசிய முன்னணியின் சார்பில் இவ்வாறு இருபதுக்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு பெரிக்கத்தான் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்ததாக சொல்லப்படும் தகவலில் உண்மை இருந்தால் அதில் மூவர் தவிர, மற்ற அனைவரும் அம்னோ கட்சியினர்; இருவர் மசீச-வை சேர்ந்தவர்கள்; ஒரே ஒருவர் மஇகா நாடாளுமன்ற உறுப்பினர்.

இந்த காரணத்தினால்தான் அன்வார் மசீச-வையும் மஇகா-வையும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளவில்லை என்றால் இதே ஜாஹிட் ஹமிடி தெரிவித்த கருத்துக்கள்; அரசியல் நிலைப்பாடு யாவும் மிகக் கடுமையானவை என்பது அன்வாருக்கு தெரியாதோ?

Made with LogoLicious Add Your Logo App

நாட்டின் 14 வது பொது தேர்தல் 2018 மே 9ஆம் நாள் நடைபெறும் என்று ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் பிரதமர் நஜீப் அறிவித்தார்.

இந்த நாளை, பார்த்துப் பார்த்து நிதானித்து நிதானித்து அறிவித்த நஜீப், அந்த மே ஒன்பதாம் நாளில்தான், தான் பதிவி இழக்கப் போகிறோம் என்பது அவருக்கு அப்போது தெரியாது.

அந்த நேரத்தில் இன்றைய பிரதமர் அன்வார் சிறையில் இருந்தார்.

நஜீப், ஜாஹிட் ஹமிடி இருவரின் நோக்கம் அன்வார் சிறையில் இருந்து வெளிவருவதற்குள் தேர்தல் முடிந்து புதிய அமைச்சரவையும் அமைந்து விடும் என்ற நம்பிக்கையூம் துணிச்சலும்தான்.

Made with LogoLicious Add Your Logo App

14 ஆவது பொதுத் தேர்தல் அறிவிப்பிற்குப் பின் தேர்தல் பிரச்சாரம் நாடெங்கும் சூடுபிடிக்கத் தொடங்கியது.

அப்போது சுங்கை போல சிறைச்சாலை சார்பில் ஒரு அறிவிப்பு வெளியானது; 2018 ஜூன் மாதம் 12-ஆம் நாள் அன்வார் சிறையில் இருந்து வெளியே வருவார் என்பதுதான் அந்தத் தகவல்.

அப்போதும் துணைப் பிரதமராக இருந்த ஜாஹிட் ஹமிடி, அவசர அவசரமாக முந்திக்கொண்டு 2018 ஜூன் 12-ல் அன்வார் சிறைவாசம் முடிந்து வெளியே வருவார் என்பது நிச்சயமில்லை; இன்னும் நாட்கள் கணக்கிட வேண்டி இருப்பதால் அன்வார் சிறைவாசம் முடிந்து வெளிவருவது இன்னும் தாமதப் படலாம்; அவர் இன்னும் சிறையில் இருக்க நேரிடும் என்று அறிவித்தார்.

இத்தனைக்கும் இதே ஜாஹிட், ஒரு காலத்தில் அன்வாரின் தளபதியாக இருந்தவர், அம்னோவில்!

Made with LogoLicious Add Your Logo App

துன் கஃபார் பாபாவை வீழ்த்தி அம்னோ துணைத்தலைவராகவும் துணைப் பிரதமராகவும் அன்வார் உருவான பின், அவரின் கரங்கள் தேசிய அரசியலில் மிகவும் வலுப்பட ஆரம்பித்தன; அம்னோவிலும்தான்.

அம்னோ மகளிர் பிரிவுத் தேர்தலில், துன் மகாதீரின் ஆதரவாளரும் பன்னாட்டு வர்த்தக தொழில் துறை அமைச்சருமான டான்ஸ்ரீ ரஃபிடா அஸீசை எதிர்த்து அன்வார் களமிறக்கிய டான்ஸ்ரீ சித்தி சகாரா 12 வாக்குகள் பெரும்பான்மையில் ரஃபிடாவை வீழ்த்தினார்.

Made with LogoLicious Add Your Logo App

அதேபோல இளைஞர் பிரிவுக்கு மகாதீர் நிறுத்திய வேட்பாளரை அன்வார் சார்பில் வீழ்த்தியவர் இதே ஜாஹிட ஹமிடி என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படிப்பட்ட ஜாஹிட் ஹமிடிதான், அன்வார் தன்னுடைய முன்னாள் தலைவர் என்பதையும் மறந்து, புதிய அரசியல் சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு அன்வார் சிறையில் இருந்து அவ்வளவு சீக்கிரம் வெளிவர மாட்டார் என்றும் இன்னும் தாமதப்படும் என்றும் ஊடகத்தாரிடம் தெரிவித்து, நஜிப்பிற்கு துதி பாடினார்.

அப்படிப்பட்ட ஜாஹிட் ஹமிடிக்கு துணைப் பிரதமர் பதவி வழங்கி இருக்கிறார் பிரதமர் அன்வார்.

தவிர, ஜாஹிட் எதிர் கொண்டிருந்த ஏறக்குறைய 50 வழக்குகள்கூட இந்த ஆட்சியில் நீர்த்துப்போயின.

அன்றாடம் களம் மாறுகின்ற இன்றைய அரசியலில் நேற்று நண்பராக இருந்தவர் இன்று பகைவராக மாறக்கூடும்; அதைப்போல இன்றைய பகைவர் நாளை நண்பராகக் கூடும் இப்படிப்பட்ட சூழ்நிலையில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ மு. சரவணன், மசீச தலைவர் வீ கா சியோங் இருவரும் அப்படி ஒன்றும் பெரிய தவறு இழைத்து விடவில்லை.

Made with LogoLicious Add Your Logo App

ஜாஹிட் ஹடிமியே துணைப் பிரதமராக இருக்கும்பொழுது வீ கா சியோங்கும் சரவணனும் ஏன் அமைச்சராக முடியாது?

பிரதமர் அன்வாருக்கு பரந்த நோக்கம் இல்லை. குறிப்பாக இந்த நாட்டின் பொருளாதார மீட்சிசிக்கு ஒரு காலத்தில் பற்றுக் கோடாக இருந்த தமிழ் இனத்தை அணுசரிக்க வேண்டும்; ஆதரிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை.

அன்வார் சிறையில் இருந்த நேரத்தில் அவரைக் கடுமையாக விமர்சனம் செய்த இன்றைய அம்னோ தலைவரை மீண்டும் துணைப் பிரதமராக்கி தலையில் வைத்து கொண்டாடும் அன்வார் அதே அளவுகோளை மசீச, மஇகாவிற்கும் நீட்டிக்க வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டு இருக்காவிட்டாலும் கூட்டணி தலைவர் என்னும் வகையில் ஜாஹிட் ஹமிடியாவது இந்த இரு கட்சியினருக்கும் அமைச்சரவையில் இடம்பெற்றுத் தர வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருக்கவில்லை.

இதை எண்ணிடும்பொழுது, ஜாஹிட் ஹமிடி, தேசிய முன்னணிக்கு தலைவராக இல்லாமல் அம்னோவிற்கு மட்டும் தலைவராக இருக்கிறாரோ என்று எண்ணிடத் தோன்றுகிறது.!

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை