Thursday, April 16, 2026

தொடர்துரோகத்தை எதிர்கொண்ட அரசியல் வல்லாண்மை: -கலைஞர்!

முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 101-ஆவது பிறந்த நாளை(1924, ஜூன் 03) முன்னிட்டு இந்தச் சிறப்புச் செய்தி

பேரறிஞர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை வழிநடத்திய பொழுது, திமுகவின் முக்கிய ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராக இல்லாதவர் கலைஞர் மு கருணாநிதி.

திமுக என்னும் மாபெரும் அரசியல் இயக்கத்தை இருபது ஆண்டுகள் அண்ணா வழிநடத்திய பின், அந்த இயக்கத்திற்கு தலைமையேற்று அரை நூற்றாண்டு காலம் சிந்தாமல் சிதறாமல் வழிநடத்திய முதுபெரும் தலைவராக விளங்கியவர் கலைஞர்.

நூற்றாண்டை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கலைஞர், 95வது அகவையிலேயே 2018 ஆகஸ்ட் 7ஆம் நாள் தான் வாழ்க்கைப் பயணத்தை நிறைவுசெய்து கொண்டார்; இறந்த பின்னும் தனக்கான இடத்தைப் பெறுவதற்காக நீதிமன்றத்தின் மூலம் மெரினா கடற்கரையை உறுதி செய்தவர் கலைஞர்.

அண்ணா அவர்கள் மறைந்த பொழுது ஒரு நீண்ட இரங்கற்பாவைத் தீட்டி இருந்தார் கலைஞர். பாவிலக்கணம் அறிந்த மரபுக்கவி பெருமக்களும் போற்றிய-பாராட்டிய உரைவீச்சு நடையாளர் கலைஞர், “பூவிதழின் மென்மை-யிலும் மென்மையான புனித உள்ளம்”என்று தொடங்கிய அந்த நீண்ட உரைவீச்சுக் கவிதையில், புகழுடம்பு எய்தி சந்தனப் பேழையில் அடங்கி-யிருந்த அண்ணாவின் இதயத்தை இரவலாகக் கேட்டிருந்தார்;

அதை நான் வரும்பொழுது கையோடு கொண்டு வந்து பத்திரமாக உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா என்று உறுதிமொழியும் அளித்திருந்தார், கலைஞர். அப்படிப்பட்ட கலைஞர் மறைந்தபொழுது எங்கே அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படாமல் போய்விடுமோ என்ற அச்சமும் பதற்றமும் ஒருசேர எழுந்தன.

பலமான காற்று சில வேளைகளில் சருகையும் கோபுரத்தின் உச்சியில் சேர்ப்பதைப் போல ஜனநாயகம் சில பொழுதுகளில் அடிமை குணமும் கோழைத்தனமும் கொண்டவர்களையும் அதிகாரக் கட்டிலில் அமர்த்தும்; அரசியல் பாரம்பரியமற்றதுகள் புனித ஜார்ஜ் கோட்டையில் கொலு கொண்டிருந்த நேரம் அது;

கலைஞருக்கு அரசு மரியாதை அளிக்கப்படும்; பொது விடுமுறையும் வழங்கப்படும்; ஆனால் அவர் அடக்கம் செய்வதற்கு மெரினா கடற்கரையில் இடம் வழங்கப்படாது என்று கிரிஜா மூலம் அறிவித்தது இடைப்பாடி பழனிசாமி கொலுகொண்டிருந்த அரசு.

ஆனாலும் இரவோடு இரவாக திமுக சார்பில் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டு, மெரினா கடற்கரையில் கலைஞரின் உடலை அடக்கம் செய்ய திமுக தலைமை எடுத்த முடிவு உறுதி செய்யப்பட்டது; இந்த வேளையில், பாமக வழக்கறிஞர் பாலு அளித்த ஒத்துழைப்பு மிக உயர்வானது

ஆக, இறந்த பின்னும் தனக்கான இடத்தை உறுதி செய்து கொண்டவர் கலைஞர்.

தன்னுடைய அரசியல் பயணத்தில் 13 முறை தேர்தல் களம் கண்ட தலைவர், உலகில் வேறு எவரும் எந்த நாட்டிலும் இருப்பாரா என்று தெரியவில்லை. 13 முறையும் வென்றவர் என்பது இன்னும் குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் கலைஞர் 14 ஆவதாக வென்ற இடம் மெரினா கடற்கரை.

அதன்படி, அண்ணாவிடம் வாக்களித்த-படி அவர் இதயத்தை பத்திரமாக அவரின் காலடியில் சேர்ப்பித்து தானும் அங்கேயே அவர் அருகிலேயே மீளாத் துயில் கொண்டுள்ளார் கலைஞர் மு கருணாநிதி.

திமுக ஆட்சியில் இருக்கின்ற பொழு-தெல்லாம் புதுடெல்லி செய்கின்ற வஞ்சகத்திற்கும் சூழ்ச்சிக்கும் ஜனநாயக விரோத போக்கிற்கும் அளவே இல்லை. தற்பொழுது, கலைஞர்தம் மகனார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையில் தொடர்கின்ற திமுக ஆட்சியிலும் புதுடில்லியின் குதர்க்கத்தையும் கோணல் புத்தியையும் கூடவே பார்ப்பனியத்தின் பித்தலாட்டத்தையும் எதிர்கொள்ளத்தான் வேண்டி-யிருக்கிறது.

ஆனாலும், கலைஞரைப் போல தொலைவிலிருந்து வந்த வஞ்சகத்தை-யும் உடனிருந்து இழைக்கப்பட்ட துரோகத்தையும் எதிர்கொண்ட இன்னொரு தலைவர் அரசியலில் இருப்பாரா என்பது ஐயத்திற்குரியது. இந்திரா காந்தி, நாவலர், ப.வு.ச., க. இராஜாராம், க.காளிமுத்து, எஸ்.எஸ். இராஜேந்திரன், மதுரை முத்து, பொன். இராமலிங்கம், காரோட்டி கண்ணப்பன், வைகோ, வேதாரணியத்து மாமீ, பி. இராமமூர்த்தி, மோகன் குமார மங்கலம், ஆர்.எம்.வீரப்பன், இவர்கள் அனைவருக்-கும் மேலாக கே.ஏ.மதியழகன், இன்னும் மேலாக எம்ஜிஆர் ஆகியோர் உடனிருந்-தும் தள்ளியிருந்தும் கலைஞருக்கு துரோகம் இழைத்தவர்கள்;

இந்திரா காந்தியை பிரதமர் ஆக்கிய முதல் தமிழர் கர்மவீரர் காமராசர் என்றால் அவரை அதிகாரத்தில் தொடர வைத்த இன்னொரு தமிழர், நிச்சயமாக கலைஞர் மு கருணாநிதிதான்.

1967 பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டின் ஆட்சியை திமுக கைப்பற்றியது. இந்திய வரலாற்றில் முதன்முதலாக, ஒரு மாநிலக் கட்சி ஆட்சியைப் பிடித்து சாதனை புரிந்தது. அத்தகைய பெருஞ்-சாதனையை நிகழ்த்தியவர் பேரறிஞர் அண்ணா.

அந்த காலகட்டத்தில் பிரதமராக இருந்த இந்திராகாந்தியால், தன்னுடைய தலையிலான காங்கிரஸ் கட்சி, தமிழ் நாட்டு மாநில ஆட்சியிலிருந்து அகற்றப் பட்டதைப் பொறுத்துக்கொள்ள முடிய வில்லை;

கேரளம், திரிபுரா ஆகிய இரு மாநிலங்க-ளைத் தவிர, பிற அத்தனை மாநிலங்-களிலும் மத்தியிலும் ஆட்சியில் இருந்தது இந்திரா காந்தி தலைமை-யிலான காங்கிரஸ் கட்சிதான். அந்த இரு மாநிலங்களையும் பொதுவுடமை கட்சிகள் ஆண்டன. இந்த நிலையில் மூன்றாவது மாநிலத்தை அதுவும் ஒரு பிராந்திய கட்சியிடம் இழந்ததை ஏற்றுக் கொள்ள முடியாத இந்திரா காந்தி திராவிட முன்னேற்ற கழகத்திற்கு எதிராக ஏராளமான வஞ்சகத்தையும் சூழ்ச்சியையும் மேற்கொண்டார்.

திமுக-விற்கு எதிராக அவர் மேற்-கொண்ட சண்டித்தனம், இன்றளவும் தமிழகத்தைப் பாதிக்கிறது; தஞ்சை மண்டலம் வறண்ட பூமியாகும் அளவிற்கு காவிரி நதி நீர்ச் சிக்கல் இன்னமும் தொடர்வதற்கும் தமிழர்தம் ‘அரசியல் இறையாண்மை’யை துச்ச-மாகக் கருதி கச்சத் தீவை பக்கசார்பாக-தன்னிச்சையாக ஸ்ரீமாவொ பண்டார நாயகேவிடம் ஒப்படைத்து தமிழக கட-லோர மீனவர்களின் வாழ்வை நிர்மூல-மாக்கி, கடல்சார் பொருளாதாரத்தை சிதைத்தவரும் இந்திரா காந்திதான்.

இந்த இரண்டையும் இன்றைய பார்ப்ப-னிய பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சி, வகையாகப் பயன்படுத்தி, தமிழகத்தை சீரழிக்கிறது.

இந்திரா காந்தி மேற்கொண்ட அரசியல் வஞ்சகத்தை அறியாமல் ஏமாந்தவ்ர்கள் அண்ணாவும் கலைஞரும்; இவ்விரு-வரும் அரசியலில் வஞ்சகம், சூழ்ச்சி ஆகிய இரு இழிகுணத்தையும் அறியாத-வர்கள் என்பது காரணமாக இருந்தாலும், இவ்விருவரும் முதல்வராக இருந்த காலத்தில் சந்தித்த சிக்கல் அத்துணை கடுமையாக இருந்தன என்பதுதான் உண்மை.

அண்ணா முதல்வராக ஆனதும், நோய் அவரைத் தொற்றிக் கொண்டது; கலைஞருக்கோ நிருவாகத்திலும் கட்சி-யிலும் திடீர்திடீரென ஒருசேர முளைத்த அழுத்தமும் வஞ்சகமும் அதிகம்.

கலைஞர் முதல்வரான பொழுது, நாவ-லர் நெடுஞ்செழியன் மூலம் பல சிக்கல் எழுந்தன; கூடவே, எம்ஜிஆரால் எழுந்த பிரச்சினைகள் இன்னும் ஏராளம்.

அண்ணாவால் இதயக் கனி என்று வருணிக்கப்பட்ட தன்னால்தான் கட்சி வளர்ந்தது; தன்னால்தான் அதிகக் கூட்டத்தைச் சேர்க்க முடிகிறது; புரட்சி நடிகர், பொன்மனச் செம்மல், மக்கள் திலகம் என்னும் பெயர்களோடு வலம் வந்தாலும் திமுகவைச் சேர்ந்த முதலமைச்சர், அமைச்சர்களுக்கு இத்துணை செல்வாக்கு ஏற்படுகிறதே? காவல் துறையினர் பாதுகாப்பு, அணி-வகுப்பு மரியாதை, சிவப்பு விளக்கு எரியும் வாகனம் ஏற்படுத்தும் அதிகாரத் தொனி உள்ளிட்டவற்றைக் கண்டு மனம் பொறுமிய எம்ஜிஆர், தானும் அமைச்ச-ராக விரும்பினார்.

அண்ணா மறைவிற்குப் பின் முதல்வ-ரான கலைஞர், புதுடில்லியில் கடுமை-யான அரசியல் நெருக்கடியை சந்தித்-துக் கொண்டிருந்த இந்திராகாந்தியை, அரசியல் வெள்ளத்தில் இருந்து கரைச் சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மொராஜி தேசார், நிஜலிங்கப்பா, காமராசர் போன்றோர் காங்கிரசில் இருந்து விலகி தனி அணியாக செயல்பட்டதால், இந்திரா காந்தி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்து, பிரதமர் பதவியைத் துறக்கும் நிலையும் நேர்ந்தது. சிண்டிகேட், இண்டிகேட் என காங்கிரஸ் இருகூறாக பிளவுபட்ட அந்த நேரத்தில், திமுக தன் வசமிருந்த 25 நாடாளுமன்ற உறுப்பினர்-களின் ஆதரவை நாஞ்சில் மனோகரன் தலைமையில் இந்திராவிற்கு அளித்து, அவரை அரசியல் ஆபத்தில் இருந்து காப்பாற்றி, பிரதமர் பதவியில் தொடரும்படி செய்தவர் கலைஞர்.

அத்தகைய சாதகத்தை திமுகவிடம் இருந்தும் கலைஞரிடம் இருந்தும் பெற்றுக்கொண்ட இந்திரா காந்தி, அதற்குப் பதிலாக கலைஞருக்கு பச்சை துரோகம் இழைத்தார். இலட்சக் கணக்கான கரையான் எழுப்பிய புற்றில் குடிபுகுந்த கருநாகம், அந்தக் கரையான்களையும் இரையாக்கிக் கொள்வதைப் போல, தனக்கு பால் கொடுக்கும் பக்தரையே கொத்த முனைவதைப் போல, தன் அரசியல் வாழ்வுக்கு அடித்தளமிட்ட தமிழகத் தலைவர்களுக்கு எதிராகவே அரசியல் வஞ்சகத்தை மேற்கொண்டவர் இந்திரா காந்தி.

மேட்டூர் அணை

பிரிட்டிஷ் ஆட்சியின்போது, சென்னை மாகாண வேளாண் மேம்பாட்டிற்கென மேட்டூர் அணையையும் மைசூர் மாகாண விவசாய வளர்ச்சிக்காக கிருஷ்ண ராஜ சாகர் அணையையும் கட்டினர்.

இவ்விரு அணைகளையும் கலைஞர் பிறந்த ஆண்டான 1924-இல் ஒருசேரத் திறந்த ஆங்கிலேய ஆட்சியாளர்கள், இவ்விரு அணைகளுக்காக ஓர் ஒப்பந்தத்தை தெளிவாக வரைந்தனர். இந்த இரு அணைகளையும் காவிரி நீர் இணைப்பதாலும், காவிரி நீர்தான் இந்த இரு அணைகளுக்கும் ஆதாரமென்பதாலும் இன்னும் ஐம்பது ஆண்டுகள் கழித்து, அதாவது 1974-இல் தற்பொழுது ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட காவிரி நதி நீர் ஒப்பந்தத்தை அப்பொழுதுள்ள மக்கள் தொகை, பாசன பரப்பு உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொண்டு, இரு மாகாணாங்களும்(Presidency) புதுப்பித்துக் கொள்ள வேண்டும்; அவ்வாறு செய்யாவிடில், 50 ஆண்டுகளுக்குப் பின் இந்த காவிரி நதி நீர் ஒப்பந்தம் இயல்பாகவே காலாவதி ஆகிவிடும் என்று அவ்வொப்பந்தத்தில் தெளிவாக வரையறுக்கப் பட்டிருந்தது.

இந்த ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கவிடாமல் சதி செய்தவர்தான் இந்திரா காந்தி.

1947-இல் இந்திய விடுதலைக்குப் பின், சென்னை மாகாணமும் மைசூர் மாகாணமும் களைக்கப்பட்டு, இவ்விரு மாகாணங்களின் பகுதிகள் தற்பொழுது தமிழ் நாடு, கேரளம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம், பீகார் ஆகிய மாநிலங்களில் இடம்பெற்றுள்ளன.

கிருஷ்ண ராஜ சாகர் அணை

இதில், காவிரி நீரைப் பயன்படுத்து-கின்ற கர்நாடகம், தமிழ் நாடு மாநிலங்-களுக்கு இடையில் இன்றளவும் சண்டையும் சச்சரவும் நீடிக்கின்றன. காவிரி நதி உற்பத்தியாகும் இடம் கர்நாடகத்திலும், அது அதிகமாக பாயும் பகுதி தமிழ் நாட்டிலும் இருப்பதால், இவ்விரு மாநிலங்களுக்கு இடையிலும் நதிநீர் சிக்கல் தொடர்கிறது.

கவிரி நதி நீர் ஒப்பந்தம், 1974-இல் புதுப்பிக்கப்பட வேண்டும் என்பதை நினைவூட்டி, கலைஞர் எத்தனையோ முறை கடிதம் அனுப்பியும் இந்திரா காந்தியும் தேவராஜ் அர்ஸும் கண்டு-கொள்ளவே இல்லை.

தேவராஜ் அர்ஸ் என்பவர், அப்போது கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர். அவர், இந்திராவின் கையாளைப்போல் செயல்பட்டு, காவிரி நதிக்கு நீரைக் கொண்டுவந்து சேர்க்-கின்ற கபினி, ஹேமாவதி, சாரங்கி, சொர்ணமுகி உள்ளிட்ட ஐந்து கிளை நதிகளிலும் தமிழ் நாட்டிற்குத் தெரிவிக்-காமல் கமுக்கமாக அணைகளைக் கட்டி முடித்துவிட்டார். தற்பொழுது காவிரி வறண்டு காணப்படுவதற்கு இதுதான் காரணம். அதேவேளை, இந்த அணை-களில் நீர் நிறைந்துவிட்டாலோ, வெள்ளம் ஏற்பட்டாலோ தமிழ்நாட்டை வடிகாலாகப் பயன்படுத்துகின்றந்து கர்நாடக மாநிலம்.

தேவராஜ் அர்ஸ்

எகிப்து நாட்டை வளப்படுத்தும் நைல் நதி, நாடு விட்டு, நாடு அல்ல; கண்டம் விட்டு கண்டம் பாய்கிறது; அப்படி இருந்தும் மேலிருக்கும் நாடுகள், கீழிருக்கும் நாடுகளுக்கு துரோகம் இழைக்கும் விதமாக அணைக் கட்டிக்கொள்ளவில்லை. இங்கு, இரு மாநிலங்களுக்கு இடையில் இந்தச் சிக்கல் தொடர்கிறது; இதைத் தீர்த்து வைக்கும் துப்பு இல்லாத அல்லது மனம் இல்லாத அரசுகள் புதுடில்லி அதிகார மையத்தில் கொலுவீற்று வருகின்றன.

கர்நாடகத்தில் புதிய அணைகள் கட்டப்பட்ட விவகாரத்தில், கலைஞர் கவனம் செலுத்தமுடியாமல் போன-தற்குக் காரணம், இதேக் காலக்கட்டத்-தில் திமுக-விற்கும் கலைஞருக்கும் எதிராக எம்ஜிஆரை கொம்பு சீவிவிட்ட வேலையை இந்திரா மறுபுறம் மேற்-கொண்டதுதான்.

இதற்குத் துணைபோனவர்கள் பார்ப்பன ஊடகத்தினர் ஒருபுறம் என்றால், பொது-வுடைமைக் கட்சிகளைச் சேர்ந்தவர்-களும் ஒத்தூதினர் என்பதுதான் வியப்-பானது; காரணம், தமிழ் தேசியத்தை மறைமுகமாக எதிர்க்கும் தன்மை-கொண்ட கம்யூனிஸ்ட் இடச்சாரி (மார்க்சிய) கட்சியினர், தமிழ் தேசியத்தை உயிர் மூச்செனக் கொண்ட கலைஞருக்கு எதிராக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் மேற்கொண்டனர். இதனடிப்படையில்-தான், பி.இராமமூர்த்தி, மோகன் குமாரமங்கலம் போன்றவர்கள் கலைஞர்மீது நஞ்சைக் கக்கினர்.

நாளை தொடரும்..

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை