
நீதிமன்ற படிக்கட்டுக்களில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், பிரதமர் பதவியில் தொடர்வதற்கான தார்மீகத் தகுதியை அடியோடு இழந்துவிட்டதால், அவர் உடனே பதவி விலக வேண்டும் அல்லது விடுமுறையில் செல்ல வேண்டும் என்று பொன்.வேதமூர்த்தி வலியுறுத்தி உள்ளார்.
பிரதமர் அலுவலகத்திற்கும் தன்னைத் தற்காத்துக் கொள்ள நீதிமன்றத்திற்கும் ஒருவர் ஒரேநேரத்தில் எப்படி பயணிக்க முடியும்?
நாட்டின் தலைமை நீதிபதி உட்பட கூட்டரசு நீதிமன்றத்திற்கு 9 நீதிபதிகள், மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு 9 நீதிபதிகள், உயர் நீதிமன்றங்களுக்கு குறைந்தது 12 நீதிபதிகள், நீதிமன்ற ஆணையர்கள் மற்றும் தேசிய போலீஸ் படைத் தலைவர் ஆகியோரின்
நியமனம் அல்லது பதிவிநீட்டிப்பு தொடர்பில், அரசியல் சாசனம் 122-ஆவது பிரிவின்படி, மாட்சிமைசால் மாமன்னருக்கு ஆலோசனை வழங்கும் பொறுப்பில் அன்வார் இருக்கிறார். அதே அரசியல் சாசனப்படி, பிரதமரின் ஆலோசனையை மாமன்னர் ஏற்க வேண்டும்; தேவைப்பட்டால் ஆட்சியாளர்களின் ஆலோசனையையும் மாமன்னர் பெறுவார்.
மாட்சிமைக்குரிய மாமன்னருக்கு ஆலோசனை வழங்குவதில் அரசியலமைப்பு ரீதியிலான பங்களிப்பை வகிக்கும் பிரதமர் அன்வார், அதே நீதித்துறை மற்றும் காவல் துறையின்முன், தன்னை ஒரு பிரதிவாதியாக நிறுத்திக்கொண்டு, தனக்கு பாதுகாப்பையும் நியாயத்தையும் கோருவது, அதிகார அத்துமீறல் என்பதுடன் நீதிபரிபாலனத்தையும் காவல்துறையையும் சமரசம் செய்ய வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாக்குவதாக ஒரு மலேசியக் குடிமகன் என்னும் அடிப்படையில் மிகத்தெளிவாகவும் ஆணித்தரமாக்கவும் சுட்டிக் காட்டுவதாக பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யூசோஃப் ராவுத்தர் தனக்கு எதிராகத் தொடுத்துள்ள வழக்கில் பிரதமர் அன்வார் தன் பதவியைக் காட்டி, விலக்கு கேட்பதிலிருந்தே, அந்தப் பதவிக்கு அவர் பொருத்தமில்லாதவர் எனத் தெரிகிறது;
இன்னும் 13 நாட்களில்(22-06-2025) தேசிய போலீஸ் படைத் தலைவரின் பதவிக் காலம் முடியவிருக்கிறது; அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படுமா அல்லது புதிய நியமனமா என்பதன் தொடர்பில் அன்வாரின் பரிந்துரையின் அடிப்படையில்தான் மாமன்னர் முடிவெடுக்க இருக்கிறார்.
அன்வார் பிரதமராக நியமிக்கப்பட்ட பின், காவல் துறை தன்மீது புதிய வழக்குகளைப் பதிந்துள்ளதாக யூசுஃப் ராவுத்தர் ஏற்கெனவேத் தெரிவித்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.

யூசுஃப் ராவுத்தர், அன்வாருக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கு, 2022, நவம்பர் 24-இல் அன்வார் பிரதமராக நியமிக்கப்படுவதற்கு முந்தையது. யூசுஃப் ராவுத்தர் மேற்கொண்ட இந்த சட்ட நடவடிக்கையை, தற்போதைய அமைச்சரவையின் தலைவருக்காக அரசியல் ரீதியில் தாமதப்படுத்துவதோ அல்லது நிறுவன ரீதியாக சீர்குலைப்பதோ மிகவும் தவறானது; ஜனநாயக விரோதம்.
மலேசிய அரசியல் சாசனத்திற்கும் சட்ட நடைமுறைக்கும் மேலாக அன்வார் உட்பட எவரும் இல்லை; சட்டம்-நீதித் துறையின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்; நாட்டை வழிநடத்துகிறவர்மீது பொதுமக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை சிதையக் கூடாதென்னும் அடிப்படையில், பிரதமர் அன்வார் இப்ராகிம், தனக்கு எதிராக யூசுஃப் ராவுத்தர் தொடுத்துள்ள வழக்கு முடியும்வரை அன்வார் உடனே பதவி விலக வேண்டும் அல்லது குறைந்தபட்சம் விடுமுறையில் செல்ல வேண்டும் என்று பொன்.வேதமூர்த்தி மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.


