
சிங்கப்பூர் தீவிரவாதக் கருத்துகள் கொண்ட 50க்கும் மேற்பட்ட இணையத்தளங்களைக் கண்டறிந்து தடை செய்திருப்பதாக உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அத்தகைய எல்லா இணையத் தளங்களையும் தடை செய்வது சாத்தியமல்ல என்றார் அவர்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசல் புவாவின் கேள்விக்கு அமைச்சர் எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார்.
தீவிரவாதக் கருத்துகளைக் கொண்ட இணையத்தளங்கள் உருவாக்கப்பட்டுக்கொண்டே இருப்பதைத் திரு சண்முகம் சுட்டினார்.
கண்டறியப்பட்டுத் தடை செய்யப்படுவதைத் தவிர்க்க தீயச் செயல்களில் ஈடுபடுவோர் தங்கள் கருத்துகளைப் பரப்பத் தொடர்ந்து பல்வேறு வழிகளை நாடுவதாக அவர் கூறினார்.
தடை செய்யப்பட்டதைத் தாண்டிச் செல்லும் வழிகளையும் சிலர் அறிந்திருப்பதை அவர் சுட்டினார்.
மக்களுக்கு விழிப்புணர்வூட்டுவது முக்கியம் என்று சொன்ன அமைச்சர் தீவிரவாதக் கருத்துகளை முறியடிப்பதில் அவர்களுக்கும் பொறுப்பு உள்ளதாகச் சொன்னார்.


