
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் பிரதமர் ஆனபொழுது, புது நம்பிக்கை துளிர்விட்டது. அனைத்து மலேசியர்களும் உள்ளடக்கப்பட்டு, சம நீதி நிலைநாட்டப்பட்டு, இன அடிப்படைபிலான வேறுபாடுகளெல்லாம் நீங்கி, புதிய விடியல் தொடங்க இருப்பதாக மலேசியர்கள் முழுதாக நம்பினர். பல தசாப்தங்களாக அன்வார் முன்னெடுத்த ‘ரீஃபோமாசி’ முழக்கத்தை முழுதாக நம்பிய மலேசியக் குடிமக்கள் இனம் கடந்து, புன்புலக்கூறுகளை புறந்தள்ளி அனைவரும் சமமாகவும் கண்ணியமாகவும் நடத்தப்படுவோம் என்று நம்பி தற்பொழுது ஏமாந்து நிற்கின்றனர் என்று மலேசிய முன்னேற்றக் கட்சி- எம்ஏபி தேசியத் தலைவரும் சரித்திர சாதன இயக்கம் ஹிண்ட்ராஃப் அமைப்பின் தலைவருமான பொன் வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்திய சமூகம் மட்டுமல்ல; நம் சீன சகோதர சகோதரிகளும்கூட இதே எண்ணத்தை வலுவாகக் கொண்டிருந்தனர்; அந்தக் கனவில் முழு நம்பிக்கை வைத்தோம். அதன்பொருட்டே வாக்களித்தோம். ஆனால், இன்று தாம் வஞ்சிக்கப்பட்டதாக இந்த மக்கள் வெளிப்படையாகவேத் தெரிவிக்கின்றனர்.
இன சமத்துவமின்மையை அகற்றுவதற்குப் பதிலாக, அன்வார் அரசாங்கம் அந்தக் கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளது. இந்திய சமூகத்தின்மீது நிறுவன ரீதியாக கட்டமைக்கப்பட்டுள்ள வறுமைக்கு 13-ஆவது மலேசியத் திட்டம்-ஆர்.எம்.கே.-13ன் மூலம் ஒரு தீர்க்கமான தீர்வுகுறித்து ஆலோசிப்பதற்காக ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யும்படி ‘குரல் அற்றவர்களின் குரல்’ ஹிண்ட்ராஃப் மற்றும் மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி சார்பில் 20க்கும் மேற்பட்ட கடிதங்களை அனுப்பியும் அன்வார் மௌனம் காப்பது, ஏமாற்றத்தை மட்டும் அளிக்கவில்லை; இது வேண்டுமென்றே புறக்கணிக்கும் செயலாகும்.
அவர் ஒரு காலத்தில் சமத்துவத்திற்காக தைரியமாகப் பேசினார். பன்முகத்தன்மையை அவர் ஆதரித்தார். அனைத்து மலேசியர்களுக்-கும் தலைவராக அவர் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். ஆனால் ஆட்சிக்கு வந்ததும், அத்தனையும் நிராகரிக்கப்பட்டன; சமாதானப் படுத்துதல், இன பாகுபாடு, தந்திர மௌனம் அதே பழைய அரசியல் தொடர்கிறது.

இந்திய மற்றும் சீன சமூகங்கள் அரசியல் படிக்கட்டுகளாகப் பயன்படுத்தப்பட்டன; அன்வாரை பிரதமர் பதவியில் அமர்த்த அணி திரட்டப்பட்டன, ஆனால், அதிகாரம் கிடைத்தவுடன் ஒதுக்கித் தள்ளப்பட்டன என்பது இப்போது வேதனையுடன் தெளிவாகிறது. மறுமலர்ச்சி முழக்கமெல்லாம், அவர் முன்வைத்த வெற்று முழக்கம்; அவரின் கடப்பாடாக இருக்கவில்லை என்று பொன். வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்
இந்திய சமுதாயத்தின் மீட்சிக்காக வெ.25பில்லியனை ஒதுக்கும்படி ஹிண்ட்ராஃப் மற்றும் MAP சார்பில் தொலைநோக்குப் பார்வையுடனும் விரிவான விளக்கத்துடனும் கோரிக்கை வைக்கப்பட்டது. இது, தேசிய பட்ஜெட்டில் வெறும் 1% மட்டுமே; ஆனால், இந்த அரசாங்கம், இது குறித்து பேசவோ, ஆலோசிக்கவோ முன்வராமல் கள்ள மௌனம் காப்பது, நம்பிக்கைத் துரோகம் மட்டுமல்ல; ஒரு முழு சமூகத்தின் எதிர்காலத்தையும் வேண்டுமென்றே கைவிடும் கண்ணியக் குறைவான செயலாகும்.
தீர்வுகள் கிடைக்காது என்பதல்ல; அரசியல் விருப்பம் இல்லை என்பதே காரணம்.
எனவே, ஒவ்வொரு மலேசியரும் கேட்க வேண்டிய கேள்வியைத்தான் நாங்கள் கேட்கிறோம்:
‘சீர்திருத்தம்’ என்னும் முழக்கம் உண்மையானதா அல்லது அதிகாரத்தை எட்டுவதற்கான பாதையில் அணிந்திருந்த முகமூடியா?
பிரதமருக்கு, நாங்கள் சொல்கிறோம்: நீங்கள் போராடுவதாகக் கூறிக்கொண்ட கொள்கைக்கு, நீங்களே துரோகம் இழைத்துக் கொண்டீர்கள்.
மக்களுக்கு, இது ஓர் எச்சரிக்கை மணியாக இருக்கட்டும். நம் தலைவர்களை இதெற்கெல்லாம் பொறுப்பேற்கச் செய்யாவிட்டால், நம் குழந்தைகள் சிறந்த மலேசியாவைக் காணமாட்டார்கள்; மாறாக மிகவும் மோசமான, பிளவுபட்ட மலேசியாவைக் காண்பார்கள்.
அநீதியை உள்ளடக்கி, அமைதியாக இருப்பவர்களை வரலாறு தீர்மானிக்கும்; அதேவரலாறு, உண்மையை உரக்கப் பேசியவர்களையும் நினைவில் கொள்ளும் என்று மேனாள் அமைச்சருமான பொன். வேதமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


