
பலியாகும் இளம் பிரதமரின் நிலை, நாளை, ஜூலை முதல் நாளில் உறுதி செய்யப்பட இருக்கிறது; 73 வயது நரியை நம்பி ஏமாந்த 39 வயது மானின் கதையாக மாறிவிட்டது, தாய்லாந்தின் இளம் பிரதமரும் இரண்டாவது பெண் பிரதமருமான பேதொங்தார்ன் ஷினாவத்ராவின் தற்போதைய அரசியல் நிலை.
ஆளும் கூட்டணியில் இருந்து விலகியதுடன், பிரதமர் பேதொங்தார்ன் ஷினாவத்ரா உடனே பதவி விலகும்படி பூம்ஜாய்தாய்(Bhumjaithai) கட்சி கேட்டுக்கொண்டதுடன் ஆதரவையும் மீட்டுக்கொண்ட அந்தத் தருணத்தில் இருந்து, அரசியல் போராட்டத்திற்கும் நிலையற்ற அரசியலுக்கும் பெயர்பெற்ற தாய்லாந்தின் தலைநகரம் பேங்காக், கொதிநிலையில் இருக்கிறது.
இந்தக் கோரிக்கையை இப்பொழுது பொதுமக்கள் கையில் எடுத்துக் கொண்டதுடன் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

தாய்லாந்திற்கும் அண்டை நாடான கம்போடியாவிற்கும் இடையேயான எல்லைச் சிக்கல் நூற்றாண்டு காலமாக நீடித்து வருகின்றது. இந்நிலையில் பிரதமர் பேதொங்தார்ன் ஷினவத்ரா கம்போடியாவின் முன்னாள் பிரதமரும் செனட் அவையின் தலைவருமான ஹுன் சென்னுடன் தொலைபேசியில் அண்மையில் உரையாடியிருக்கிறார். இதில், சொந்த ராணுவ தளபதியை விமர்சிக்கும் வகையில் பிரதமர் ஷினாவத்ரா கருத்து தெரிவித்த அதேவேளை, ஹுன் சென்னை ‘மாமா’ என்றும் அழைத்திருக்கிறார்.
பக்கத்து நாட்டுத் தலைவர், அதுவும் ஏறக்குறைய எதிரி நாட்டின் முன்னாள் ஆட்சியாளர் என்பதை யெல்லாம் கடந்து, அரசதந்திர நிலையில் இருந்து வழுவி, ‘Uncle’ என்று ஹுன் சென்னை அழைத்திருக்கிறார் பேதொங்தார்ன் ஷினாவத்ரா; தன்னைப் போல ஏறக்குறைய இருமடங்கு வயதுடையவர் என்பதால், ஷினவத்ரா அவ்வாறு விளித்திருக்கலாம்.

இந்த வெளிப்படைத் தன்மையும் வெகுளிப் பேச்சும்தான், இப்பொழுது ஷினவத்ராவை அரசியல் நெருக்கடியில் தள்ளியிருக்கிறது.
இந்த உரையாடல் கசிந்து, தாய்லாந்தில் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய அளவில் பிரதமர் ஷினவத்ராவுக்கு எதிராக அதிருப்தி எழுந்துள்ளது. மே 28-ஆம் நாள் இரு நாடுகளின் இந்நாள் தலைவருக்கும் முன்னாள் தலைவருக்கும் இடையே இடம்பெற்ற அந்த தொலைபேசி உரையாடல் எப்படி தானாகக் கசிய முடியும்? அப்படி யென்றால் கசியவிட்டது யார்?
தாய்லாந்து, ஒரு நீண்ட அரசியல் போராட்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. இந்த நாட்டின் இளைய சமுதாயமும் மாணவர்களும் வங்கதேசத்தின் மாணவர்களைப் போல தீக்குச்சியின் கந்தகத் தலையைப் போன்றவர்கள்; சிறிது உரசினாலும் உடனேப் பற்றிக்கொள்ளும் தன்மையை இயல்பாகவேக் கொண்டிருக்கின்றனர்.
1932இல் முடியாட்சி முடிவுபெற்று குடியாட்சி முறைக்கு தாய்லாந்து வந்தாலும், மியன்மார்-பாகிஸ்தான் நாடுகளைப் போல இராணுவத் தலையீடு தாய்லாந்து அரசியலில் அதிகம்; அதனால், ஜனநாயக அரசும் இராணுவ ஆட்சியும் அங்கு மாறிமாறி அமைகின்றன.
கடந்த 20 ஆண்டு வரலாறே அதற்கு தக்க சான்று; சீன ஹக்கா பரம்பரையைச் சேர்ந்த ஷினாவத்ரா குடும்பத்தின் சார்பில் தக்சின் ஷினாவத்ரா, அவரின் சகோதரி யிங்லக் ஷினாவத்ரா, மகள் பேதொங்தார்ன் ஷினாவத்ரா தலைமையிலான தற்போதைய ஆட்சிகளுக்கும் இடையே இராணுவ ஆட்சியும் தாய்லாந்தை ஆக்கிரமித்தன.
இத்தகைய இராணுவத் தலையீடு காரணமாகவே தக்சின் ஷினாவத்ரா நாடுகடந்து நீண்டகாலகமாக வாழ்ந்து, கடந்த ஆகஸ்ட் 15-இல்தான் தாயகம் திரும்பினார். இந்த தக்சினைத்தான், ஆசியான் அமைப்பின் உச்சமன்றத்திற்கு ஆலோசகராக நியமித்திருக்கிறார், அதன் நிகழ்காலத் தலைவர் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்.

தாய்லாந்தைப் பொறுத்தவரை, ஜனநாயகத்திற்கான போராட்டம், இராணுவ ஆட்சிகளுக்கு எதிரான போராட்டம் என அரசியல் போராட்டம் தொடர்ந்து கொண்டிருப்பதால் அரசியல் நிலைத்தன்மை நிலைக்காத இங்கு ஆட்சி மாற்றமும் அடிக்கடி நேர்கிறது. தற்பொழுது, பேதொங்தார்ன் ஷினாவத்ரா பிரதமர் பொறுப்பேற்று குறுகிய காலமே ஆகியிருக்கும் நிலையில், அங்கு மீண்டும் அரசியல் போராட்டம் வெடித்துள்ளது.
தாய்லாந்தின் அரசியல் போராட்டங்களில் குறிப்பிடத்தக்கது, ‘1932 மக்கள் புரட்சி’; இந்தப் புரட்சிதான் அங்கு முடியாட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து அரசியல் சட்டத்தின்கீழ் நடைபெறும் மக்களாட்சியை ஏற்படுத்தியது.
அடுத்ததாக, 1973 மாணவர் போராட்டத்தைக் குறிப்பிடலாம்; தாய்லாந்தின் புகழ்பெற்ற ‘தம்மசத்’ பல்கலைக்கழக மாணவர்களின் ஜனநாயகத்திற்கான போராட்டம்அது; அதன்விளைவாக, பிரதமர் தானொம் கிட்டிகாசோர்ன் பதவியில் இருந்து விலகினார்.
தொடர்ந்து, 2006-இல் அங்கு நிகழ்ந்த இராணுவப் புரட்சி, தாய்லாந்தின் அண்மைய அரசியல் வரலாற்றில் முக்கிய இடம்பெற்றுள்ளது. அப்போது, பிரதமர் தட்சின் ஷினாவத்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டார்; இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
2013-2014 கால தொடர்போராட்டம்; யிங்லக் சினாவத்ராவின் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் அவை; இது மீண்டும் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தியது.

தாய்லாந்தில் இப்படி அரசியல் போராட்டம் தொடர்வதற்கு முக்கிய காரணங்கள், அரசியல் நிலைத்தன்மை குறித்த அக்கறை அனைத்துத் தரப்பினரிடமும் இல்லாதது, இராணுவத்தின் தலையீடு, ஊழல், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கோரிக்கை முதலியன் ஆகும்.
தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் கொந்தளிப்பு, ஹுன் சென்னின் வஞ்சகத்தால் விளைந்துள்ளது.
கடந்த மே மாத இறுதியில் கம்போடிய எல்லைப்படை வீரர் ஒருவர், தாய்லாந்து-கம்போடிய எல்லைப்பகுதியில் நிகழ்ந்த மோதலில் கொல்லப் பட்டார். அதைத் தொடர்ந்து அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில்தான் பிரதமர் பேதொங்தார்ன் ஷினாவத்ரா, ஹுன் சென்னுடன் மிகவும் இயல்பாகவும் நல்லிணக்க அடிப்படையிலும் பேசியிருக்கிறார்.
இந்த தொலைபேசி உரையாடலை அரசியல் நெறிமுறையைமீறி ஹுன் சென் பதிவு பதிவுசெய்ததுடன் அன்றி, 80 அரசியல்வாதிகளுடன் பகிர்ந்து கொண்டதாகவும் அவர்களில் எவரோ ஒருவர்தான் அதை கசியவிட்டதாகவும்
அதனைத் தொடர்ந்து அந்த ‘17 நிமிட ஒலிப்பதிவை’ தன்னுடைய முகநூல் பக்கத்தில் முழுவதுமாகப் பகிர்ந்து கொண்டதாகவும் ஹன் சென் தெரிவித்துள்ளார்.
ஹுன் சென்’னில் செயல் அரசியல் தார்மீகத்தை மீறிய அசல் சண்டித்தனம்.
இதுபற்றிய கொந்தளிப்பு, பேங்காக்கைத் தொற்றியதும் பிரதமர் பேதொங்தார்ன் விளக்கம் அளித்து வருத்தமும் தெரிவித்திருக்கிறார். சொந்த இராணுவத் தளபதியை சிறுமைப்படுத்தும் எண்ணம் தமக்கில்லை என்றும் இதுவோர் அரசியல் ராஜதந்திரம் என்றும் கம்போடிய வீரர் இறந்துள்ளதால் ஹுன் சென்னை சாந்தப்படுத்தும் நோக்கில் சொல்லப்பட்ட கருத்து என்றும் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

இருந்தாலும் கடந்த சனிக்கிழமை பல்லாயிரக் கணக்கானோர் பேங்காக்கில் கடுமையான பருவகால மழையையும் பொருட்படுத்தாமல் போராட்டக்குழுத் தலைவர் பார்ந்தெப் போர்பொங்பான் தலைமையில் குடையுடன் அணிதிரண்டு, பிரதமர் உடனே பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்; அதேவேளை, பிரதமரும் அவரின் தந்தையும் ஹுன் சென்னின் தந்திரத்தில் தொடர்ந்து சிக்கிக் கொள்கின்றனர் என்பதையும் வெளிப்படையாக ஏற்றுக் கொண்டுள்ளார் பார்ந்தெப்.
ஏற்கெனவே, இருநாடுகளும் உணவு, மின்சாரம், தொலைக்காட்சி ஒலிபரப்பு தொடர்பில் ஒன்றுக்கொன்று ஏற்றுமதி-இறக்குமதி தடைவிதித்துக் கொண்டுள்ள நிலையில், தாய்லாந்தில் தற்பொழுது நிலவும் அரசியல் முறுகல் நிலைகுறித்து, உள்ளூர மகிழ்ந்து வருகிறார் ஹுன் சென்.

இப்படிப்பட்ட நிலையில், பேதொங்தார்ன் ஷினாவத்ரா, பிரதமர் பதவியில் நீடிக்க முடியுமா இல்லையா என்பதைப்பற்றி, அந்த நாட்டின் அரசியல் சாசன நீதிமன்றம் நாளை ஜூலை 1-இல் கூடி அதிரடி முடிவை எடுக்க இருக்கிறது.
தாய்லாந்து செனட் சபையைச் சேர்ந்த 36 உறுப்பினர்கள் பிரதமர் பதவி துறக்க வேண்டும் என்று முன்வைத்துள்ள கோரிக்கையை செனட் சபைத் தலைவர் மொங்கோல் சுரசஞ்சா, அரசியல் சாசன நிதிமன்றத்தில் சமர்த்துள்ள நிலையில், நாளை நீதிமன்றம் கூட இருக்கிறது.
ஹுன் சென்னுடனான உரையாடலில் நாட்டின் இறையாண்மைக்கு பிரதமர் பேதொங்தார்ன் ஷினாவத்ரா பங்கம் விளைவித்திருக்கிறார் என்று அத்தீர்மானத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.


