Friday, April 24, 2026

நீதித் துறையை ஆட்டுவிக்கும் அரசியல் நெருக்கடி: நாடாளுமன்ற அவசரக் கூட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு விடுக்க வேண்டும்!

நீதித்துறையை ஆட்டிப்படைத்துவரும் அரசியல் நெருக்கடி தொடர்பில் விவாதிக்க நாடாளுமன்ற அவசரக் கூட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுடின் அழைப்பு விடுக்க வேண்டும் என்று நீதி அமைப்பின் பாதுகாப்பு செயலகத்தின் சார்பில் பொன்.வேதமூர்த்தியும் ரஃபிக் ரஷீட்டும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில், மக்கள் நீதிக் கட்சி-பிகேஆரைச் சேர்ந்த ஒன்பது எம்பி-க்கள் குரல்கொடுத்துள்ளனர். பாண்டான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரஃபிஸி ரம்லி தலைமையில் பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்க் குழு நீதித் துறையின் மாண்புக்காக குரல்கொடுத்துள்ளதை நீதி அமைப்பின் பாதுகாப்புச் செயலகம் வரவேற்கிறது.

நாட்டின் உச்ச நீதி அமைப்பின் நீதிபதிகள் நியமனத்தில் தாமதம் அல்லது அரசியல் தலையீடு ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சினையில் பிகேஆர் கட்சியின் மற்ற எம்.பி.க்களும் அரசாங்க ஆதரவு எ.பி.க்களும் ஈடுபாடு காட்டாதநிலையில், ரஃபிஸி தலைமையிலான இந்தக் குழுவினர் அரச விசாரணை ஆணையத்தை நியமிக்கக் கோரியிருப்பது வரவேற்கத்தக்கது என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி மற்றும் சரித்திர சாதனை இயக்கம் ஹிண்ட்ராஃப் அமைப்பு ஆகியவற்றின் தலைவருமான பொன். வேதமூர்த்தியும் பெஜுவாங் கட்சியின் சட்ட ஆலோசகருமான ரஃபிக் ரஷீட்டும் நேற்று கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அரச விசாரணை ஆணையம் குறித்த கோரிக்கையில், ஒரு சில சிக்கல் இருப்பதையும் இந்தக் கூட்டறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பொதுநலன் சார்ந்த இதுபோன்ற சிக்கலை விசாரிக்க அமைக்கப்படும் ஆணையத்தில் பிரதமர் தலையீடும் பங்களிப்பும் உள்ளது; அதேவேளை, கூட்டாட்சி அரசியலமைப்பின்கீழ் தன் கடமைகளைச் செய்யத் தவறியது தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ள பிரதமரின் நிலைப்பாடும் இதில் அடங்கும்.

கூட்டரசு நீதிமன்ற நீதிபதி சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால், அரசியலமைப்பின் பிரிவு 125(3)இன்படி ஒரு அரச விசாரணை ஆணையத்தை நிறுவுவது அவசியம்; காரணம், நீதித்துறையின் மாண்பிற்கு களங்கம் ஏற்படுத்துதல், நீதிபதிகளை இடமாற்றம் செய்தல் மற்றும் நீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்ற முயற்சித்தல் போன்ற குற்றச்சட்டுகள் இதில் சம்பந்தப்பட்டுள்ளன.

இதுபற்றி விவாதிக்கவும் பக்கசார்பின்றி விசாரிக்க அரச விசாரணை ஆணையத்தை நியமிக்கவும் நாடாளுமன்ற அவசரக் கூட்டத்திற்கு முன்னாள் உள்துறை அமைச்சருமான ஹம்சா ஜைனுடின் அழைப்பு விடுக்க வேண்டும் என்று பொன்.வேதமூர்த்தியும் ரஃபிக் ரஷீட்டும் மேலும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை