
நாட்டு மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட பிரதமர் அன்வார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி பாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் மலாய் அரசுசாரா அமைப்புகளும் ஜூலை 26ஆம் நாள் கோலாலம்பூரில் ஏற்பாடு செய்துள்ள பேரணியில் சரித்திர சாதனை இயக்கம் ஹிண்ட்ராஃப்-மலேசிய முன்னேற்ற கட்சி எம்ஏபி ஆதரவாளர்களும் பேரளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று இவற்றின் தலைவர் பொன். வேதமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.
13-வது மலேசியத் திட்டத்தில் நலிந்த இந்திய சமுதாயத்தின் மீட்சிக்காக வெள்ளி25 பில்லியன் நிதி ஒதுக்க வேண்டும் என்று இருபதுக்கு மேற்பட்ட கடிதங்களை அனுப்பியும் கண்டு கொள்ளவில்லை அன்வார் தலைமையிலான இந்த மடாணி அரசு.
பொதுவாக மலேசிய மக்கள் அனைவரும் அத்தியாவசிய பண்டங்களின் தொடர் விலை அதிகரிப்பால் மிகவும் அல்லல் படுகின்றனர்; வாழ்க்கையே கடும் சுமை ஆகிவிட்டது.
இந்த நிலையில் வெளிநாட்டு மூலதனம் பில்லியன் கணக்கில் வருவதாக மடானி அரசாங்கத்தின் சார்பில் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வந்தாலும் நாட்டின் பொருளாதார நிலையில் எந்த மாற்றமும் இல்லை; மறுமலர்ச்சியும் தென்படவில்லை.

பிரதமர் அன்வாரைப் பொருத்தவரை இந்திய சமுதாயத்தை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார்; கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை; தமிழ்ப் பள்ளிகளுக்கான மானியம்; அமைச்சரவையில் தமிழ் அமைச்சருக்கு பிரதிநிதித்துவம் போன்ற தொடர் பாரம்பரியத்தை எல்லாம் இல்லாமல் செய்து விட்டார் அன்வார்; இந்தியர்களின் சமூக பொருளாதார கல்வி மறுமலர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட மித்ரா செயல்படுகிறதா அல்லது இருக்கிறதா என்பதேத் தெரியவில்லை.
இந்தச் சூழ்நிலையில் மலாய் அரசியல் கட்சிகளும் அரசு சாரா அமைப்புகளும் பிரதமர் அன்வாரின் பதவி விலகலை வலியுறுத்தி ஜூலை 26இல் ஏற்பாடு செய்துள்ள பேரணியில் ஹிண்ட்ராப் மற்றும் எம்ஏபி கட்சியினர் மட்டுமல்லாமல் இந்திய சமூகத்தினரும் அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று முன்னாள் அமைச்சருமான பொன் வேதமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.


