Friday, September 18, 2026

13-ஆவது மலேசிய பெருந்திட்ட அறிவிப்பில் மன நிறைவில்லை: அமைச்சரவையில் தமிழ் அமைச்சர் இடம்பெற வேண்டும்! -டத்தோ டாக்டர் லோக பாலமோகன்

ஒற்றுமை அரசாங்கத்தின் பிரதமர் அண்மையில் அறிவித்த 13-ஆவது மலேசிய பெருந்திட்டத்தில் இந்திய சமுதாயத்திற்கென குறிப்பிடத்தக்க அம்சம் இல்லை; சிறப்புத் திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதன் தொடர்பில் பிபிபி கட்சி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறது என்று கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ டாக்டர் லோக பால மோகன் தெரிவித்தார்.

மலேசிய இந்திய சமுதாயம் இன்னமும் பின் தங்கிய நிலையில் இருக்கின்ற வேளையில், அறிவிக்கப்பட்ட மலேசிய 13ஆவது பெருந்திட்டத்தில் இந்திய சமுதாய மறுமலர்ச்சிக்காக ஏதும் சிறப்புத் திட்டம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அப்படிப்பட்ட அறிவிப்பு எதுவும் செய்யப்படாதது, மலேசிய இந்திய சமுதாயத்தை பெரிதும் கவலைக்கு ஆட்படுத்தி உள்ளது; அதையே பிபிபி கட்சியும் பிரதிபலிக்கிறது என்று ஆகஸ்ட் திங்கள் மூன்றாம் நாள் இன்று ஞாயிற்றுக்கிழமை கட்சியின் தேசிய தலைமையகத்தில் நடைபெற்ற மத்திய செயலவைக் கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களை சந்தித்தபொழுது டாக்டர் லோகபால மோகன் தெரிவித்தார்.

தமிழ்ப் பேசும் அமைச்சர் ஒருவர் அமைச்சரவையில் இடம்பெற்று இருந்தால் மலேசிய தமிழர்களுக்காக குரல் கொடுக்கின்ற வாய்ப்பு ஏற்படும்.

மலேசிய இந்திய சமுதாயம் என்று பொதுவாக சொன்னாலும் இதில் 80%-ற்கு மேல் தமிழர்கள் தான் இடம்பெற்றுள்ளனர் என்பதை ஒற்றுமை அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இதன் அடிப்படையில் மடாணி அரசாங்க அமைச்சரவையில் தமிழர் ஒருவர் இடம்பெற வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புவதாக டாக்டர் லோக பாலமோகன் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியர் சமூக- பொருளாதார- கல்வி- உருமாற்றப் பிரிவான மித்ராவுக்கு ஆண்டு தோறும் ஒதுக்கப்படும் 100 மில்லியன் வெள்ளி நிதிப் பரிவர்த்தனையை இந்திய சமுதாயம் பயனடையும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும்.

நலிந்த இந்திய குடும்பத்தினர் வீடு வாங்கும்பொழுது எதிர்கொள்கின்ற நிதிப் பிரச்சனை; அதைப்போல உயர்கல்வி மாணவர்கள் இடையில் எதிர்கொள்கின்ற பொருளாதார சிக்கல்; திடீரென்று இறப்பை சந்திக்கின்ற ஏழைக் குடும்பங்கள்; உண்மையிலேயே பொருளாதார சிக்கலை எதிர்நோக்கி இருக்கின்ற இந்திய இளந்தொழில் முனைவோர் உள்ளிட்ட தரப்பினரை அடையாளம் கண்டு, அவர்களை மேலும் பரிதவிக்க விடாமல் அல்லது காக்க வைக்காமல் சம்பந்தப்பட்ட தரப்பினரின் தேவை அறிந்து உடனுக்குடன் உதவுகின்ற தன்மை பத்து ஆண்டுகளைக் கடந்தும் மித்ராவிடம் இன்னும் ஏற்படவில்லை.

அனுபவமோ சமூக அக்கறையோ மித்ரா நிர்வாகத்தில் இதுவரை ஏற்படவில்லை.

இதற்குக் காரணம் பொருத்தமான தலைமை இதுவரை மித்ராவுக்கு அமையாதுதான் என்பதை வருத்தத்துடன் சுட்டிக்காட்ட விரும்புவதாகவும் சமூகத்தின் பன்முக மறுமலர்ச்சி கருதி இந்த நிலை விரைவில் சீரமைக்கப்பட வேண்டும் என்றும் பிபிபி கட்சி விரும்புவதாக செய்தியாளர்களிடம் பேசியபொழுது டத்தோ டாக்டர் லோக பால மோகன் மேலும் தெரிவித்தார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை