
தமிழ்த்தாயின் தவப்புதல்வர் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் அன்புத் தம்பியும் ‘சைதாப்பேட்டையின் 11 லட்சமு’மான கலைஞருக்கு இன்று ஏழாவது நினைவு நாள்!!
ஐந்து பிரதமர்களை உருவாக்கிய கலைஞர் மு கருணாநிதி ஐந்து முறை முதல்வராக இருந்தார்.
இந்திரா காந்தி, வி பி சிங், தேவ கௌடா, இந்தர் குமார் குஜரால், அடல் பிகாரி வாஜ்பாய் ஆகிய ஐந்து பிரதமர்களை அடையாளம் கண்டு அரியணை அமர்த்தியவர் கலைஞர்.
ஐந்து முறை முதல்வராக இருந்த கலைஞர் முதல் இரண்டு முறையாக 1969-யிலும் 1971-யிலும் முதல்வராக பதவி ஏற்றபொழுது கட்சியின் உள்ளும் புறமுமாக வஞ்சகத்தையும் துரோகத்தையும் எதிர்கொண்டு நிம்மதியாக ஆட்சி செய்ய முடியாத நிலைக்கு ஆளானார்.
பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்குப்பின் 1969-இல் முதல்முறையாக முதல்வரான கலைஞர் கருணாநிதிக்கு, அப்பொழுது நெடுஞ்செழியனை சமாளிப்பது பெரும் பாடாக இருந்தது.

இந்த காலக்கட்டத்தில் எம்ஜிஆரின் போக்கும் சிந்தனையும் தலைகீழாக மாறியது; அது ஒரு வகையில் கலைஞர் உள்ளிட்டவர்கள் மீதான பொல்லாங்காகவும் அமைந்தது.
திமுகவைப் பொருத்தவரை தனக்குத்தான் அதிகக் கூட்டம் திரளுகிறது என்ற இறுமாப்பில் இருந்தார் எம்ஜிஆர்.
கட்சியின் தலைவர் பேரறிஞர் அண்ணா பேசிக் கொண்டிருக்கும் பொழுது எம்ஜிஆர் கடைசி நேரத்தில் மேடைக்கு வரும் பொழுது கூட்டமே எழுந்து நின்று ஆர்ப்பரிக்கும்.
ஆனாலும் அதையெல்லாம் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்ட அண்ணா, எம்ஜிஆரை “தன் இதயக்கனி” என்று ஒரு கட்டத்தில் வருணித்தார். இதனாலெல்லாம் இறுமாந்திருந்த எம்ஜிஆருக்கு, 69 இல் கலைஞர் உட்பட மற்ற அமைச்சர்கள் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தபின் போலீஸ் மரியாதை, அதிகாரம் போன்றவற்றைக் கண்டு உள்ளுக்குள் பொறாமை எழுந்தது.

இதற்கிடையில் 1972- இல் வரவேண்டிய பொதுத் தேர்தலை வங்கதேச போர் வெற்றியை மூலதனமாகக் கொண்டு, ஓராண்டு முன்பே பொதுத் தேர்தலை நடத்தினார் இந்திரா காந்தி.
அந்தத் தேர்தலில் திமுக தோற்றுவிடும் என்றும் காமராஜரே மீண்டும் முதல்வராகி விடுவார் என்றும் பரவலாக கருத்துக்கணிப்பு நிலவிய நேரத்தில் இதை உள்ளுக்குள் ரசித்து மகிழ்ந்த எம்ஜிஆர், தேர்தல் சமயத்தில் காஷ்மீருக்கு படப்பிடிப்புக்காக சென்று விட்டார்
தேர்தல் முடிவு வந்ததும் எம்ஜிஆருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி; எப்பொழுதும் இல்லாத அளவுக்கு தமிழக சட்டமன்ற வரலாற்றிலேயே 234 இடங்களைக் கொண்ட அந்த அவையில் 184 இடங்களில் வென்று அதிரடி படைத்தார் கலைஞர்.
இதை சற்றும் எதிர்பாராத எம்ஜிஆர் காஷ்மீரில் இருந்தபடியே நான் திரும்பி வருவ வரை அமைச்சரவையை அறிவிக்க வேண்டாம் என்றும் தனக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பொறுப்பு வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
இதை அப்படியே ஏற்றுக் கொண்ட கலைஞர், சுகாதார துறைக்கு அமைச்சராக பொறுப்பேற்பதில் எந்த சிக்கலும் இல்லை; ஆனால் அமைச்சராக இருக்கின்ற காலக்கட்டத்தில் திரைப்படத்தில் நடிக்க கூடாது; அரசியல் வேறு, கலைத்துறை வேறு என்று கலைஞர் சொன்னதை ஏற்காத எம்ஜிஆர் கலைஞர்மீது, தனிப்பட்ட முறையில் கோபமும் பொல்லாங்கும் கொள்ள ஆரம்பித்தார்.
இந்த நிலையில்தான் திமுகவை எப்படியாவது பிளக்க வேண்டும்; கலைஞரை பலவீனப்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்து, தன்னை இரண்டாவது முறையாக பிரதமர் ஆக்கியது கலைஞர்தான் என்பதையும் கருதாமல், மோகன் குமார மங்கலத்தின் மூலம் பேரம்பேசி திமுகவிலிருந்து எம்ஜிஆரைப் பிரிப்பதற்கான முன்னெடுப்பை மேற்கொண்டார்.
அதில் இந்திரா காந்தி வெற்றி பெற்றாலும் அவர் நினைத்தபடி காங்கிரஸ் இயக்கத்தை மீண்டும் தமிழ்நாட்டில் உயிர்ப்பிக்க முடியவில்லை.

திராவிட எல்லைக்குள்ளேயே கலைஞர் – எம்ஜி ஆர் என இரு துருவ அரசியலாக உருவெடுத்ததில் இந்திரா காந்திக்கு தோல்விதான்.
இந்தவேளையில் திண்டுக்கல்லில் வெற்றி பெற்றிருந்த திமுக எம்பி இறக்க நேர்ந்ததால் அந்தத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் எம்ஜிஆரின் கட்சி வெற்றி பெற, காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் இரண்டாவது இடத்தைப் பிடிக்க, திமுக மூன்றாவது இடத்திற்குச் சென்றது.
கலைஞரின் செல்வாக்கு சரிந்து விட்டதாக பிராமண ஊடகங்கள் ஏகமாக எழுதிக் குவித்து உள்ளூர மகிழ்ந்திருந்த வேளையில் காவிரி நீர் பிரச்சனையும் கச்சத் தீவு சிக்கலும் இந்திரா காந்தி செய்த இரண்டகத்தால் எழுந்தது;
இவை, மாநில அரசியலிலும் ஆட்சியிலும் கலைஞருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தின..
இந்த நிலையில் அவசரகாலச் சட்டத்தை இந்திரா காந்தி அறிவித்தார்.
எம்ஜிஆர் தனி கட்சித் தொடங்கி, திண்டுக்கல் இடைத்தேர்தலில் தன்னை தோற்கடித்து விட்டார். இந்த நிலையில் இந்திராவை எதிர்க்க வேண்டுமா என்று கருதாமல் இந்திரா காந்தியின் அவசரகால சட்டத்தை எதிர்த்து அதன் விளைவாக ஆட்சியையும் பறிகொடுத்தார் கலைஞர்;
சிட்டிபாபு பாலதண்டாயுதம் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் இறக்கவும் இன்றைய தமிழ்நாட்டு முதல்வரும் அன்றைய புது மாப்பிள்ளையுமான மு.க. ஸ்டாலின் தாக்குதலுக்கு ஆட்படவும் நேர்ந்தது

இந்திராவின் மிசா சட்டத்தை ஆதரித்த ஒரே ஒரு ஜனநாயக விரோதி எம்ஜிஆர் ஒருவர் மட்டும்தான். அப்படிப்பட்ட இந்திரா காந்திக்கும் எம்ஜிஆர் விசுவாசமாக- உண்மையாக இருந்தாரா என்றால் அதுவும் இல்லை.
அவசரகால சட்டம் மீட்டுக்கொள்ளப்பட்டபின் 1977-ல் நடந்த பொதுத் தேர்தலில் இந்திரா காந்தி படு தோல்வி அடைந்தார்; அவரின் இளைய மகன் சஞ்சய் காந்தியும் தோல்வியடைந்தார்.
இத்தகைய சூழலில் கர்நாடக மாநிலம் சிக்மகளூரிலும் தமிழ்நாட்டின் தஞ்சாவூர், நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதிகளிலும் இடைத்தேர்தல்கள் வந்தன.
தமிழ்நாட்டில் எம்ஜிஆர் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த அந்த நேரத்தில் இந்திரா காந்தி, எம்.ஜி.ஆரை நம்பி தஞ்சையில் நின்று வெற்றிபெற பெரிதும் விழைந்தார்.
அந்த நேரத்தில் ஜனதா கூட்டணி சார்பில் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் எம்ஜிஆர் மிரட்டியதும் இந்திரா காந்திக்கு ஆதரவில்லை என்று கை விரித்தார்.
கடைசியில் சிக்மகளூரிலேயே நின்று இந்திரா காந்தி வென்றார். ஆனாலும் தஞ்சாவூரில் சிங்காரவேலு என்ற காங்கிரஸ்காரர் நின்று அவரும் வெற்றி பெற்றார். ஒருவேளை இந்திரா காந்தியே துணிந்து தஞ்சாவூரில் நின்றிருந்தால் இன்னும் பெரும்பான்மையான வாக்கு வேறுபாட்டில் அவர் வென்றிருப்பார்; ஆனாலும் எம்ஜிஆர்ரை நம்பி எதுவும் செய்ய முடியாது என்று சற்று நிதானித்த இந்திராகாந்தி தமிழ்நாட்டின் பக்கம் தலை காட்டவில்லை.
1989-இல், மூன்றாவது முறையாக முதல்வர் ஆனார் கலைஞர். அப்பொழுது குடியரசுத் தலைவராக இருந்த ஆர் வெங்கட்ராமன், சட்ட அமைச்சர் சுப்பிரமணியன் சாமி, 56 நாள் பிரதமர் சந்திரசேகர் ஆகிய மூவரும் கூட்டு சேர்ந்து விடுதலைப் புலிகளின் நடமாட்டம் தமிழ்நாட்டில் அதிகமாக இருப்பதாக குற்றம் சுமத்தி ஜெயலலிதாவுக்கு வழிவிடும் வகையில் திமுக ஆட்சியை இரண்டாவது முறையாகக் கலைத்தனர்.
1996-இல் நான்காவது முறையாக மீண்டும் முதல்வரான கலைஞர், அந்த தவணையின் பொழுது பொற்கால ஆட்சியைத் தந்தார்.
ஆனாலும் வைகோ போன்றவர்கள் செய்த சூழ்ச்சியினாலும் பாரதிய ஜனதா கட்சியினர் செய்த இரண்டகத்தாலும் 2001-இல் கலைஞர் ஆட்சியில் தொடர முடியாமல் போனது.
2006-இல் ஐந்தாவது முறையாக மீண்டும் முதல்வரான கலைஞர், பெரும்பான்மை இல்லாவிட்டாலும் கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் சிறந்த ஆட்சியை வழங்கினார்.
தொடர்ந்து 2011-ஆம் ஆண்டு பொது தேர்தலில் கலைஞர் ஆறாவது முறையாக மீண்டும் முதல்வராக முடியாமல் போனதற்குக் கூட வைகோ வஞ்சகமாக செய்த அரசியல் நடவடிக்கையும் விஜயகாந்தின் தேமுதிக ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்ந்ததும் காரணமாக அமைந்தது.
அந்தத் தேர்தலில், திமுக எதிர்க்கட்சித் தகுதியைக்கூட இழக்க நேர்ந்தது.
தொடர்ந்து 2016 இல் நடைபெற்ற தேர்தலிலும் தானே தொடர்ந்து முதல்வராக நீடிக்க விரும்பிய ஜெயலலிதாவின் சூழ்ச்சிக்கு ஆளான வைகோ, தேமுதிக-வின் அறிவிக்கப்படாத தலைவராக இருந்த பிரேமலதா, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், ஜி கே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், தொல் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் எல்லாம் சேர்ந்து தனி அணி கண்டன.
தாங்கள் வெல்ல வேண்டும் என்பதைக் காட்டிலும் கலைஞரும் திமுகவும் தோற்க வேண்டும் என்பதற்காக திமுகவிற்கு ஆதரவான வாக்குகளை பிரிக்கும் தீய நோக்கத்தில் ஒன்று சேர்ந்த இவர்கள், ‘கெடுவான் கேடுநினைப்பான்’ என்பதைப்போல இவர்களும் கெட்டு திமுக ஆட்சிக்கு வருவதையும் தடுத்தனர்.
தனித்து நின்ற வெற்றி கண்ட விஜயகாந்த் இத்தனைக் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்தும் வைப்புத் தொகையை இழந்தார். தொல் திருமாவளவன் உட்பட அத்தனை பேரும் தோல்வியைத் தழுவினர்; வைகோவோ சங்கரன்கோவில் தொகுதியில் தேர்தலில் நிற்காமல் புறமுதுகு காட்டினார்.
அந்த நேரத்தில் கலைஞர் உடல்நலம் பாதிப்புற்ற நிலையில், ஸ்டாலின் ஒருவராக களமிறங்கி ‘நமக்கு நாமே’ என்ற முழக்கத்துடன் 89 இடங்களை வென்று வலிமையான எதிர்க்கட்சித் தலைவர் ஆனார்.
சட்டமன்ற வரலாற்றில் ஆளுங்கட்சியாக அதிகபட்ச உறுப்பினர்களைக் கொண்டிருந்த கட்சி திமுகதான்; அதைப்போல எதிர்க்கட்சி வரிசையிலும் மிருக பலத்துடன் இருந்த கட்சியும் திமுகதான்.
இந்த சூழ்நிலையில் 2016 டிசம்பர் ஐந்தாம் நாள் ஜெயலலிதா இறந்துவிட, அடுத்த இரண்டு ஆண்டுகளில் 2018 ஆகஸ்ட் 7ஆம் நாள் கலைஞர் 95ஆவது வயதில் காலமானார்.
13 பொதுத் தேர்தல்களில் களம் கண்டு வெற்றி பெற்றாலும் அவர் இறந்த நேரத்தில் ஆட்சியில் இல்லாததால் அவர் விரும்பியபடி சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்திற்கு அருகில் அவரை அடக்கம் செய்வதற்கு அடிமை அரசியல்வாதி இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் இடைப்பாடி பழனிசாமி மறுத்த பொழுது, அதிரடியாக இரவோடு இரவாக வழக்கு தொடரப்பட்டு அண்ணாவின் நினைவிடத்திற்கு அருகிலேயே கலைஞரை அடக்கம் செய்வதற்கான உறுதி, நீதிமன்றத்தில் பெறப்பட்டது.
இறந்த பின்னும் தனக்கான இடத்தை நீதிமன்ற வழக்கின் மூலம் உறுதி செய்து கொண்டவர் கலைஞர்.
கலைஞர் தன்னுடைய அரசியல் பயணத்தில் வெம்மைக்கு ஆட்படும்பொழுதெல்லாம் தன்னை குளிர்விப்பதற்காக அவர் தேடிக்கொண்ட இன்னொரு இணைப் பாதை இலக்கிய பயணம்தான்;
அத்தகைய இலக்கிய பயணத்தின் இடையே திரைப்படத்துறையிலும் அவர் சாதித்ததும் கோடம்பாக்கத்தின் போக்கை மாற்றியதும் இதே கலைஞர்தான் என்பதும் தமிழ் இனத்தின் தலைநிலமாம் தமிழ்நாட்டு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
பூம்புகாரில் இடம் பெற்ற மனசாட்சி உறங்கும்பொழுது மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பி விடுகிறது என்ற வசனமும் மந்திரி குமாரி திரைப்படத்தில் இடம்பெற்ற அரண்மனை நாயே அடக்குடா வாயை என்ற வசனம் எல்லாம் கலைஞரின் கூர்மையான வசனத்திற்கு தக்க சான்று.
இன்னும் சொல்ல , ஆயிரம் ஆயிரமாக உள்ளன கலைஞரைப் பற்றிய முத்தான தகவல்; எதைச் சொல்வது? எதை விடுவது??


