
-நக்கீரன்
கோலாலம்பூர், நவ.20-
மலேசிய இந்திய சமுதாயம் எந்தக் குறையுமின்றி நிறைவாக இருக்கிறது என்பது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் எண்ணமாக இருப்பதால், அவர் மலேசியத் தமிழர்களுக்கு எதுவும் செய்யப் போவதில்லை. தேசிய முன்னணி ஆட்சிக் காலத்தில் இருந்ததையும் இல்லாமல் செய்துவிட்ட இவருக்கு, பல்லக்கு தூக்கும் தொண்டரடியார்கள் அப்படியேத் தொடரட்டும்.
அதற்காக, அன்வாரையும் அவர்தம் ஒற்றுமை அரசாங்கத்தையும் விமர்சனம் செய்பவர்களையும் சொந்த சமூத்தினரையும் ‘பைத்தியம்’, ‘கிருக்கன்’, “இன்னுமாடா நீங்கள்”, ‘நாயகத்தனம் புரிபவர்கள்’ என்றெல்லாம் வசைபாடி, பாய முற்படுகின்றனர்.
12-ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்பு ஒருசில தமிழ்-இந்திய மக்கள் பிரதிநிதிகள் அப்போதைய தேசிய முன்னணி ஆட்சிக் காலத்தின்போது எப்படி செயல்பட்டனரோ அதைப்போல மக்கள் நீதிக் கட்சி(பிகேஆர்)-யைச் சேர்ந்த சில தமிழ் எம்பிக்கள் இப்பொழுது செயல்படுகின்றனர்.
ஒரு காட்சி ஊடகத்தில் கொக்கரித்துள்ள அவர்கள், தங்கள் அடையாளத்தை மறைத்துக்கொண்டு, தனி அறையில் தனக்குத் தானே மல்லாடுவதைப் போல செயல்பட்டுள்ளனர். இது, அரசியல் அறமல்ல; அப்பட்டமான பிற்கோக்குத் தனம்.
மலேசிய அமைச்சரவையில் தமிழ்ப் பேசும் அமைச்சர் இருந்த இத்தனைக் காலத்திலும் மலேசியத் தமிழர்கள் பெரிதாக முன்னேறவில்லை; அதனால், இப்பொழுது அன்வார் ஒரு தமிழரை அமைச்சராக நியமிக்கவில்லை என்பது ஒரு பொருட்டல்ல; பேசுவதற்கு எதுவும் இல்லை என்பதால் இதை பெரிதாகப் பேசுகின்றனர் என்று ஏகடியம்புரியும் இவர்கள், கலப்படமில்லாத தமிழின துரோகியர்.
இப்படி பேசவும் அண்டிப் பிழைக்கவுமா மலேசிய இந்திய வாக்காளர்கள் மாற்று ஏற்பாடாக உங்களை யெல்லாம் மக்கள் மன்றத்திற்கு அனுப்பினார்கள்? அவர்களைவிட சிறப்பாக செயல்படுவீர்கள் என்று எதிர்பார்த்தால், அதைவிட மோசமாக விளங்குகிறீர்கள்.
காரியம் நடக்கிறதா இல்லையா என்பது அடுத்தக்கட்டம்; ஆனால், ஒரு தமிழப் பிரதிநிதி அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பதுதான் தமிழர்தம் மாண்புக்குரியது. இன மாண்பைத் தொலைத்த இது’கள், தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருப்பது பேரவமானம்.
திருக்குறளைக் கூறும் ஒரே மலாய்த் தலைவர் அன்வார்தான் என்று, இவர்கள் பெருமைபேசுகின்றனர். அன்வார் இப்பொழுது மட்டுமல்ல; எப்பொழுதெல்-லாம் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்கிறாரோ அப்பொழுதெல்லாம் இப்படித்தான் செய்கிறார். தேசிய முன்னணி ஆட்சியில் துணைப் பிரதமராகவும் நிதி அமைச்சராகவும் இருந்த அன்வார், அப்போது திருக்குறளை கம்பீரமாக வாசித்து முடித்ததும், அருகில் அமர்ந்திருந்த பிரதமர் துன் மகாதீர், ‘ஆமாம், ஆமாம்’ என்று தமிழில் பேசியதை இதே நாடாளுமன்றம் கண்டிருக்கிறது.
ஆனால், 30 ஆண்டுகள் கழித்து, இப்பொழுது தட்டுத் தடுமாறி திக்கித் திணறும் அளவுக்கு கடுமையான குறளை அன்வார் ஏன் தெரிவுசெய்ய வேண்டும்?. எம்பிக்கள் பகடித்தனமாக சிரிக்கும் அளவுக்கு தமிழையும் குறளையும் ஒருசேர சிதைத்து சிகிச்சை அறை படுக்கையில் சாய்த்தபின், ஒரு நமட்டுச் சிரிப்புவேறு.
கட்சி அளவிலும் சரி, நாட்டின் நிருவாக அளவிலும் சரி தலைமைப் பொறுப்பில் இருக்கும் அன்வார், திருக்குறள் வளர்ச்சிக்காக இதுவரை என்ன செய்திருக்கிறார்? அல்லது நிதியாவது அள்ளிக் கொடுக்காவிட்டாலும் கிள்ளியாவது கொடுத்திருக்கிறாரா? அல்லது, உச்சி மரத்தின் இலை காற்றில் இலேசாக அசைவதைப் போலவாவது நாடாளுமன்றத்திற்கு வெளியே ஏதும் பேசியிருக்கிறாரா? செயல்பட்டிருக்கிறாரா?? ஒன்றுமில்லை.

அன்வாரின் இந்த ஒன்றுமில்லாத் தனத்தைதான் இரண்டு-மூன்று தமிழ எம்பி-க்கள் பெருமையாகப் பேசுகின்றனர். அன்வாரைப் போல எந்த மலாய்த் தலைவரும் திருக்குறளைப் பேசுவதில்லை என்றும் பிதற்றுகின்றனர்; காலம் எல்லாவற்றையும் கருத்தில்கொள்ளும். உரிய நேரத்தில் சரியான தீர்ப்பையும் அளிக்கும் என்பதை அறியாத இது’கள் முடிந்தவரை மஞ்சள் நீராடட்டும்!.

மக்கள் நீதிக் கட்சி ஆட்சிக் கட்டிலில் இருக்கைகொண்டபின், தமிழ்ப் பள்ளிகளுக்கான தனி மானியத்தை அடியோடு இல்லாமல் செய்துவிட்டனர். டத்தோஸ்ரீ நஜீப் அதுவும் ஹிண்ட்ராஃப் போராட்டத்தின் விளைவாக ஆண்டுதோறும் அளித்த நிதியைத்தான் அன்வாரும் தொடர்கிறார். புதிதாக எதுவுமே செய்யவில்லை.
கடந்த ஆண்டு ஜூலைத் திங்களில் உலகத் தமிழாராய்ச்சி 11-ஆவது மாநாட்டில் அறிவித்தபடி, இடைநிலைப் பள்ளிகளில் தடையில்லா தமிழ்க் கல்வி என்பதன் தொடர்பிலும் அன்வார் துரும்பைக்கூட அசைக்கவில்லை. இதைப் பற்றியெல்லாம் சிந்திக்க மறந்த இந்த பல்லக்குத் தூக்கியர், இந்த ஆட்சியையும் அன்வாரையும் விமர்சிப்போரை ஒளிந்துகொண்டு தாக்க முற்படுவதன் விளைவை, அடுத்தப் பொதுத் தேர்தலின்போது எதிர்கொள்ளக் கூடும்.
பதவியிலும் பொறுப்பிலும் இருப்பவர்கள், சமுதாயத்தின் பெயரால்தான் அவற்றைப் பெறுகின்றனர்; அனுபவிக்கின்றனர். அப்படிப்பட்டவர்கள், அதே சமுதாயம் விமர்சனப் பார்வையை முன்வைத்தால், அதற்கு விளக்கமோ, சமாதானமோ சொல்ல வேண்டும் அல்லது பொறுப்பேற்க வேண்டும். அவற்றைவிடுத்து, சம்பந்தப்பட்டவர்களை பிராண்ட முற்பட்டால், பின்விளைவிற்கும் தயாராக இருக்க வேண்டும்.
2007 நவம்பர் 25, ஹிண்ட்ராஃப் எழுச்சியின்போது மிகவும் கலங்கிய தலைவர் அன்றைய பிரதமர் துன் அப்துல்லா படாவிதான்; காரணம், அந்தச் சம்பவம் குறித்து பன்னாட்டு ஊடகமெல்லாம் பேரளவில் செய்தி வெளியிட்டன. இது குறித்து மலேசிய இந்திய சமுதாயத்தின் ஏகபோகத் தலைவராக இருந்த ‘நினைவில்வாழும்’ துன் சாமிவேலுவிடம் விசாரித்தபோது, அதெல்லாம் ஒன்றுமில்லைங்க டத்தோஸ்ரீ; ஒரு சில குழுவினர்தான் இப்படி அதிகமாக பேசி வருகின்றனர் என்றுகூறி சமாளித்தார். இருவருமே அப்போது டத்தோஸ்ரீ பட்டத்தை மட்டும் கொண்டிருந்தனர். பின்னர், நாட்டின் மிக உயரிய விருதான துன் விருதை இருவரும் பெற்று மேன்மையுற்றனர்.

அடுத்த மூன்று மாதங்களில் நாட்டின் 12-ஆவது பொதுத் தேர்தல் இடம்பெற்ற நேரத்தில்கூட, சாமிவேலு தன்நிலையில் இருந்து மாறவே இல்லை. ஹிண்ட்ராஃப் தலைவர்களையும் போராட்டத்தையும் வசைபாடிய-படியே தன் அரசியல் கோட்டையான சுங்கை சிப்புட்டில் தேர்தல் களமாடினார். போதாக்குறைக்கு சாமிவேலுவின் அமைச்சரவை சகாவான டான்ஸ்ரீ மைடின் ஜைனுடின் போன்றவர்களும் “இந்திய சமுதாயத்தின் வாக்குகளை எப்படி கவர்வது என்பதை, அரசியல் வித்தகர் சாமிவேலு நன்கு அறிவார்” என்றெல்லாம்கூறி உசுப்பேற்றினர்.
கடைசியில் இருவருமே தோல்வியை எதிர்கொண்டனர். இதில், ஜைனுடின், தன் பாரம்பரிய மெர்போக் தொகுதியிலிருந்து சுங்கைப் பட்டாணி தொகுதிக்கு தாவி களம்கண்ட நிலையிலும் கரைசேரவில்லை.
ஏறக்குறைய 1,800 வாக்குகள் வேறுபாட்டில் மண்டியிட்ட சாமிவேலு, மலேசியத் தேர்தல் வரலாற்றில் 100% வெற்றியைப் பெற்றுவரும் ஒரேக் கட்சி மஇகா என்று மார்தட்டிவந்த பெருமையையும் அத்தேர்தலில் இழந்தார்.
தோல்வி தந்த பாடத்திற்குப்பின் மசிந்தார் சாமிவேலு; ஹிண்ட்ராஃப் இயக்கம் முன்வைக்கும் கோரிக்கைகளில் ஒரு சில நியாயம் இருப்பது உண்மைதான் என்று பட்டும் படாமல் ஒத்துக் கொண்டார். இதையே தேர்தலுக்குமுன் ஏற்றுக்கொண்டு, ஹிண்ட்ராஃப் தலைவர்களுக்கும் படாவிக்கும் இடையே ஒருவேளை நல்லெண்ண அடிப்படையில் பாலமாக சாமிவேலு செயல்பட்டி-ருந்தால், 2008 பொதுத் தேர்தலில் ஆழிப் பேரலையின் பாதிப்பைப் போன்ற பெருஞ்சேதத்தை தேசிய முன்னணி தவிர்த்திருக்ககூடும்.
அத்தகையப் பாடம்-படிப்பினையை, அதே ஹிண்ட்ராப் எழுச்சியினால் அதிகாரத்திற்கு வந்துள்ள இன்றைய இந்தியத் தலைவர்கள் மட்டுமல்ல, அன்வார்கூட அனைத்தையும் மறந்துவிட்டதாகவேத் தெரிகிறது. ஏதோ ஒருசிலர் உண்மையை உணர்ந்துள்ளனர்.
அத்துடன், எம்ஜிஆர் நடித்த பாட்டுக்கு அன்வார் ஆடுவதை இப்பொழுதும் பெருமையாகக் கருதும் இவர்களின் அரசியலை, ஜனநாயக உரைக்கல்லில் உரசிப் பார்த்தால், அதன் தரம்குறித்து தெரியவரும்.

எம்ஜிஆர், திரைத் துறையில் நாயகத் தன்மையுடன் இருந்தார் என்பது உண்மைதான். ஆனால், அரசியலில், பலகட்டங்களில் அவர் வில்லத் தன்மையை வெளிப்படுத்தினார் என்பதை ஒருவராலும் மறுக்கமுடியாது.
1975-இல் அலகாபாத் உயர்நீதி மன்றம் பிரதமர் இந்திரா காந்திக்கு எதிராக தீர்ப்பளித்தது. கடுமையான தீர்ப்பாக இருந்தாலும் அதில் சாரம் இருந்தது. பாகிஸ்தானை ஆதரித்த அமெரிக்காவின் 37-ஆவது அதிபர் ரிச்சர்ட் நிக்சன் கண்களில் விரலை விட்டு ஆட்டும்விதமாக அதிரடியாக செயல்பட்டு கிழக்குப் பாகிஸ்தானை மேற்குப் பாகிஸ்தானில் இருந்து பிரிந்து, அதை வங்கதேசமாக உருவாக்கி உலக வரைபடத்தையே மாற்றியவர் இந்திரா காந்தி.

வெள்ளை மாளிகையில் அடுத்த நான்கு ஆண்டுகளுக்குக் குடியேற இருக்கும் டோனால்ட் டிரம்பைப் போல, இந்த நிக்சனும் இனவாத அரசியல் புரிந்தவர். நிக்சனும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்தான்; அமெரிக்காவின் குடியரசுக் கட்சியும் இனவாதமும் பிரிக்கமுடியாதவை போலும். போப்பாண்டவரேப் போற்றிய அறிஞர் அண்ணாவை இதே நிக்சன் சிறுமைப் படுத்தினார் என்பதை வேறொரு வேளையில் விரிவாகக் காண்போம்.
உலக அளவில் புகழப்பட்ட இந்திரா, அந்தப் புகழைக் கொண்டு தேர்தல் அறுவடை செய்ய முயன்றார். அதனால், 1972-இல் நடைபெற இருந்த பொதுத் தேர்தலை ஓராண்டு முன்னதாக நடத்தினார். அந்தத் தேர்தலின்போது, தான் போட்டியிட்ட ரேபரேலி நாடாளுமன்றத் தொகுதியில் தில்லுமுல்லு செய்தார் என்று தொடரப்பட்ட வழக்கில், வழங்கப்பட்டத் தீர்ப்பைக் கண்டு இந்திராகாந்தி நிலைகுலைந்து போனார். அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிடக்கூடாதென்று அந்தத் தீர்ப்பில் ஆணையிடப்பட்டிருந்தது.
இதிலிருந்து தப்புவதற்காக, ‘மிசா’ என்னும் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தை (Maintenance of Internal Security Act) அறிவித்து, அதை அதிரடியாக நடைமுறைப்படுத்தினார், இந்திரா காந்தி. இதை சாக்காக வைத்து, நீதிமன்றங்களை முடக்கிவிட்டு, தன் அரசியல் எதிரிகள் ஜெயப்பிரகாஷ் நாராயண், மொராஜி தேசாய், சரண்சிங், ஜெகஜீவன் ராம், பி.ஆர். அந்துலே உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தலைவர்களை தேசிய அளவில் சிறைப்படுத்தினார்.
இதனால், உலகத் தலைவர்கள் எல்லாம் இந்திராவை கண்டித்தனர். அந்த வேளையில், இந்திரா காந்தியையும் அவரின் அவசர காலச் சட்டத்தையும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆதரித்த ஒரேத் தலைவர் எம்ஜிஆர் என்பது அன்வாருக்கும் அவரின் கட்சியினருக்கும் தெரியாது போலும்!
எம்ஜிஆரின் ஜனநாயக விரோத அரசியல் இந்தமட்டில் நிற்கவில்லை; ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ் நாட்டின் சட்டமன்ற மேலவையையும்(Legislative Council) கலைத்தார். இந்தியாவின் முதல் சட்டமன்ற மேலவையும் இதுதான்.
1986-இல் நடைபெற்ற ஊராட்சி-நகராட்சி மன்றத் தேர்தலில் அவரின் அதிமுக கட்சி படுதோல்வியை சந்தித்தது; இதன் விளைவாக, தமிழ் நாட்டு சட்டமன்ற மேலவையில் திமுக-வின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்ற நிலையும் கலைஞர் மு.கருணாநிதி எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்கும் சூழலும் உருவாயின; இதை ஏற்கமுடியாத எம்ஜிஆர், அந்த மாமன்றத்தையே கலைத்து விட்டார்.
தவிர, ஜெயலலிதாவுக்கு கடிவாளம் போடும் வகையில் வெண்ணிற ஆடை நிர்மலாவை இதே அவையில் உறுப்பினராக்க நினைத்த எம்ஜிஆரின் எண்ணம், ஈடேறாமல் போனது; நிர்மலா ‘திவாலானவர்’ என நீதிமன்றத்தால் பிரகடனம் செய்யப்பட்டு இருந்தது எம்ஜிஆருக்கு தெரியாமல் போனது. இதனால், ஏமாற்றத்திற்கு ஆளான அவர், அவசர அவசரமாக நிர்மலாவின் கடனை அடைத்து அவரைத் தயார்ப்படுத்திய நிலையில், திமுக அந்த அவையில் வலுவுடன் இருப்பதைப் பொறுக்கமாட்டாமல் அந்த அவையையே கலைக்கும் ஜனநாயக விரோதப் போக்கைமேற்கொண்டார். இதற்கு துணை போனவர் இந்திரா காந்தி.

பத்துமலை உட்பட திருமுருகத் திருக்கடவுளின் ஏழு திருத்தலங்களில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோயிலில், எம்ஜிஆர் ஆட்சியின் அறநிலைத் துறை சார்பில் தணிக்கை மேற்கொண்ட அதிகாரியை, ஆலய நிர்வாகிகள் கொன்று, அங்குள்ள கழிப்பறையில் தொங்கவிட்டு, தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடினர்.
ஆலய உண்டியலில் இருந்த தங்க வேலையும் அதில் பதிக்கப்பட்டிருந்த வைரக் கல்லையும் திருடிய நிருவாகத்தினர், ஆலய கணக்கறிக்கையில் தங்க வேல் குறித்த தகவல் இல்லாததை சுட்டிக்காட்டி விவரம் கேட்ட சுப்பிரமணிய பிள்ளை என்ற அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியை வஞ்சகமாக கொலை செய்தனர். அந்தக் கொலைக்கு எம்ஜியாரும் அவரின் உற்ற நண்பரும் அறநிலையத் துறை அமைச்சருமான ஆர்.எம். வீரப்பனும் துணைபோயினர். கடைசியில் இந்த விவகாரம் நீதிமன்றம்வரை சென்றது.
சுப்பிரமணிய பிள்ளை தற்கொலை செய்யவில்லை என்று போல் என்ற நீதி அரசர் அளித்தத் தீர்ப்பையும் மறைத்து, இந்த உண்மை மக்களுக்குத் தெரியாமல் பார்த்துக் கொண்ட எம்ஜிஆரின் ஆட்சியிலும் நிருவாகத்திலும் இடம்பெற்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை சொல்லி மாளாது.

அன்வாருக்கும் அவருக்கு பல்லக்கு தூக்கும் இந்தியத் தலைவர்களுக்கும் இவைபற்றி யெல்லாம் அறவே தெரியாதுபோலும்.
மலேசிய இந்திய சமுதாயத்திற்கு, குறிப்பாக தமிழர்களுக்கு நிர்வாக ரீதியில், ஜனநாயக முறையில் ஏதேனும் நன்மை செய்திருந்தால், அல்லது அத்தகைய எண்ணம் இருந்தால் அன்வார் ஏன் எம்ஜிஆரின் துணையை நாடவேண்டும்? திருக்குறளின் பெருமையில் குளிர்காய வேண்டும்?
இதிலிருந்து ஒன்று தெளிவாகத் தெரிகிறது. அன்வாரிடம் பலவீனம் குடிகொண்டுள்ளது.


