Thursday, April 16, 2026

மத்தாப்பு கொளுத்துகிறார் அப்பா! கிலுகிலுப்பையும் ஆட்டுகிறார்!!

மலேசியாவின் மாண்பிற்குரிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராகிம், 79ஆவது வயதை எட்டி இருக்கிறார். நீடு வாழ்ந்து, நெடியது நாட்டிட, மீண்டும் வாழ்த்து தெரிவிக்கிறாள் குமரி நல்லாள்.

நாட்டின் பத்தாவது பிரதமராக பொறுப்பேற்று ஒற்றுமை அரசாங்கத்தை வழி நடத்துகின்ற அன்வார் உள்ளபடியே முத்தான பிரதமர்தான்; உங்களின் பிள்ளைகளாகிய மலாய் மக்களும் சீன சமூகத்தினரும் இந்தியர்களும் செம்மாந்து மகிழ்ந்து திளைக்கின்றனர்.

நாட்டின் பிரதமர் என்றால் நாட்டிற்குள்ளேயே முடங்கி இருக்க முடியாதுதான்; அடிக்கடி உலக நாடுகளுக்கு சென்று வரவேண்டிய அருங்கடமை இருப்பது உண்மைதான்;

தவிர, ஆசியான் மண்டலத்தின் தலைவர் பொறுப்பையும் தாங்கள் ஏற்றிருப்பதால் அந்த 10 – 11 நாடுகளின் விவகாரங்களையும் வெளியிலிருந்து அவதானிக்க வேண்டிய பொறுப்பும் உங்களுக்கு இருக்கிறது என்பதும் உண்மைதான்.

இந்த நேர நெருக்கடிக்கு மத்தியிலும் கடந்த மேத்திங்கள் 27ஆம் நாள், நாட்டின் பாரம்பரிய தலைநகரம் கோலாலம்பூரில் முக்கியமான வர்த்தக மையப் பகுதியில் ஒரு பள்ளிவாசலுக்கு அடிக்கல் நாட்டு விழா செய்வதற்காக வந்தீர்களே, அடடே எத்துணை சிறப்புடைய நிகழ்ச்சி அது!

அந்த நாள் பார்த்து இந்து சமயத்தையும் இந்து பக்தர்களையும் நேரம் வாய்க்கும் பொழுதெல்லாம் இழிவாகவும் தாழ்த்தியும் பேசி வருகின்ற ஸம்ரி வினோத்தை பெர்லிஸ் மாநிலத்தில் கைது செய்தது பாருங்கள் காவல்துறை; அடடே எத்தனை பொருத்தமான நடவடிக்கை அது.

கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் சற்று நேரத்தில் விடுவிக்கப்பட்டார். அதற்கு காவல்துறை சார்பில் சொல்லப்பட்ட தகவல் உள்ளூர் பொதுமக்கள் திரளாக அணிதிரண்டு வந்து ஜம்ரி வினோத்தை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்ததால் அவர் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

பிரதமர் ஆகிய நீங்கள் இஸ்லாமிய மார்க்கத்தின் ஒரு வழிபாட்டு தளத்திற்கு அடிக்கல் நாட்டுகிற நேரம் பார்த்து, மக்களின் கவனத்தை பெர்லிஸ் பக்கம் திருப்பிய பங்கு அற்புதம் அற்புதம்; அழகோ அழகு!

காவல்துறையால் கைது செய்யப்படும் அனைவரும் பொதுமக்கள் திரண்டு வந்து விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினால் காவல்துறை விட்டு விடுமா என்ன?

விட்டு விடாதுதான்; ஆனாலும் ஸம்ரி வினோத்தை மட்டும் விட்டுவிடும்!

அண்மையில், ஜூலை 26 ஆம் நாள், நீங்கள் பதவி விலக வேண்டும்(Turun Anwar) என்று வலியுறுத்தி பாஸ் கட்சியின் ஒருங்கிணைப்பில் மலாய் அரசுசாரா அமைப்புகள் முன்னெடுத்த பேரணி கோலாலம்பூரில் நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சிக்கு
ஏறக்குறைய ஒரு வாரம் பத்து நாட்களுக்கு முன்பிருந்தே கூடிய விரைவில் தாங்கள் நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை செய்ய இருப்பதாக முரசு கொட்டப்பட்டு வந்தது.

நாட்டு மக்கள் அனைவரையும் பிள்ளைகளாக நீங்கள் ஏற்றுக் கொண்டிருப்பதால் அதை ஏற்றுக் கொண்ட நாட்டு மக்களும் அன்புள்ள அப்பா நமக்கான+ மகிழ்ச்சியான அறிவிப்பு ஏதோ செய்ய இருக்கிறாரே, அது என்னென்ன அறிவிப்பாக இருக்கும்? என்றெல்லாம் பல வகையிலும் தத்தம் மனதை அலைபாய விட்டு மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த வேளையில், ‘Turun Anwar’ பேரணிக்கு இரு நாட்களுக்கு முன்பு அந்த பொன்னான வேளையும் வாய்த்தது.

அதில் முக்கியமான அறிவிப்பு நாட்டில் பருவமடைந்த அனைவருக்கும் ஆளுக்கு 100 வெள்ளி வீதம் செலவுத்தொகை அளிப்பதாக தெரிவித்ததுதான்.

18 வயதைத் தொட்ட நால்வர் ஒரு வீட்டில் இருந்தால் அந்தக் குடும்பம் நானூறு வெள்ளியை கொத்தாகப் பெறும் என்று தாங்கள் விளக்கமும் அளித்தீர்கள்.

இந்த உதவித்தொகையை ஏறக்குறைய செப்டம்பர் மாத முதல் வாரத்தில்தான் மக்கள் பெறுவார்கள் என தெரிகிறது; அப்படி என்றால் ஏறக்குறைய ஐந்து வாரங்களுக்கு முன்பாக அதை அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன என்று உங்களின் அன்பு பிள்ளைகளான நாட்டு மக்கள் நினைத்து பார்த்தால், அழுகின்ற பிள்ளைகளை அமர்த்துவதைப் போல ஒரு அன்பான அப்பா மத்தாப்பு கொளுத்தி மகிழ்ச்சிப் படுத்துவதை போலவும் கிலுகிலுப்பையை ஆட்டி, கிளுகிளுப்பு ஏற்படுத்துவதைப் போலவும்தான் தெரிகிறது.

அம்மட்டோ?

வாகனம் வைத்திருக்கின்ற லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் தவிர வசதி படைத்தவர்களும் மிகுதியாக பயன்படுத்துகின்ற எரிநெய், RON-95 வகை பெட்ரோல்தான்.

இதன் விலை 2.05 என வெகு நீண்ட காலமாக நடைமுறையில் இருக்கின்ற நிலையில் இந்த விலையில் ஆறு சென்கள் குறைத்து அறிவிப்பு செய்து இருக்கிறீர்கள்.

இதனால் உள்ளபடியே நலிந்த மக்கள் பெரிதும் பயனடைவார்கள் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடம் இல்லவே இல்லை.

ஆனால் இந்த சலுகை விலை செப்டம்பர் மாத கடைசிப் பகுதியில்தான் நடைமுறைக்கு வரும் என்று தோராயமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏறக்குறைய 9 வாரங்கள் அல்லது இரண்டேகால் மாதங்கள் கழித்து நடைமுறைக்கு வர இருக்கின்ற இந்த விலைக் குறைப்பு குறித்து, தங்களை எதிர்த்து நடைபெற்ற பேரணிக்கு இரு தினங்களுக்கு முன்பாக அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன என்று அன்புள்ள அப்பாவாகிய மாண்புசால் பிரதமரிடம் கேட்க தோன்றுகிறது.

ஆனாலும் அது அவசியம் இல்லை என்று தெரிகிறது,

வாழ்க்கைச் சூழல், பொருளாகார சிக்கல் சார்ந்து பொதுவாக அனைத்து மக்களும் தேசிய அளவில் ஏதோ ஒரு வகையில் பாதிப்பை எதிர்கொண்டு அதிருப்தியில் இருப்பதால் நீங்கள் பதவி விலக வேண்டும் என்று மலாய் அரசு சாரா அமைப்புகளும் பாஸ் கட்சி நேரடியாகவும் இந்த பேரணியை நடத்தி இருக்கின்ற நிலையில் மக்கள் அதிகமாக இதில் கலந்துகொள்ள கூடாது என்ற கருத்தை உள்ளீடாக வைத்து மேலும் கொந்தளிப்பான மனநிலையில் இருக்கின்ற மக்களை சாந்தப்படுத்தவும் இந்த அறிவிப்பை மிகவும் நுட்பமாக செய்து இருக்கிறீர்கள் என்று அவதானிக்க இடம் இருக்கிறது.

நாட்டு மக்களாகிய நமக்கு, அன்பிற்குரிய அப்பாவிடம் இருந்து நல்ல செய்தி வர இருப்பதாக முரசு கொட்டிக் கொண்டே இருக்கிறார்களே என்று எதிர்பார்ப்புடன் காத்திருந்த மக்களுக்கு நீங்கள் செய்த அறிவிப்பின் முத்தாய்ப்பன அம்சங்கள் இவை இரண்டு; இன்னும் சில உள;

மடானி முழக்கத்துடன் தாங்கள் வழிநடத்தி வருகின்ற ஒற்றுமை அரசாங்கம் ஏறக்குறைய மூன்று ஆண்டுகளை எட்ட இருக்கிறது. நவம்பர் 25இல், நீங்கள் நான்காவது ஆண்டை எட்டுவீர்கள் பிரதமர் எனும் மகுடத்துடன்.

நவம்பர் 25 என்றால் இன்னொன்றையும் நினைக்கத் தோன்றுகிறது; ஈராயிரத்து ஏழாம் ஆண்டில் நாடும் உலகமும் வியந்து நோக்கிய ஒரு சம்பவம், ஹிண்ட்ராஃப் இயக்கம் மேற்கொண்ட எழுச்சிப் பேரணி நடைபெற்ற நாளும் அதே நாள்தான்.

தங்களின் மேலான அமைச்சரவையில்.., தங்களின் கட்சியின் சார்பில் துணை அமைச்சர்களாக இருக்கின்ற இருவர் தங்களுக்காக மிகவும் முனைப்போடு தற்காப்புப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்கள் நன்றாக செய்யட்டும்; நாடு விடுதலை அடைந்தது முதல் மலேசிய அமைச்சரவையில் ஒரு தமிழர் இடம்பெற்று வந்ததை தாங்கள் வகையாக இல்லாமல் செய்து விட்டீர்கள். அது குறித்த விமர்சனங்களுக்கு தங்கள் கட்சியைச் சேர்ந்த அந்த இரு துணை அமைச்சர்களும் கடந்து போகவே பார்க்கின்றனர்;

போகட்டும்; பிகேஆர் சார்பில் ஒரே ஒரு தமிழரைக்கூட மடானி ஆட்சி நடைபெறும் மாநில ஆட்சி மன்றங்களில் நியமிக்கவில்லை; எல்லாவற்றுக்கும் மேலாக பினாங்கு மாநில அரசாங்கத்தில் தமிழருக்கென்று கட்டமைக்கப்பட்ட துணை முதல்வர் பதவிகளில் ஒன்றை தமிழரிடமிருந்து எடுத்து விட்டீர்கள்.

இதையெல்லாம் பார்க்கும் பொழுது உங்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய மலேசியத் தமிழர்களுக்கு நீங்கள் ஏன் இப்படி வஞ்சனை புரிகிறீர்கள் என்பதுதான் தெரியவில்லை.

தமிழ் பள்ளிகளுக்காக ஆண்டுதோறும் நிதி நிலை அறிக்கை மூலம் ஒதுக்கப்பட்டு வந்த மானியத்தையும் இல்லாமல் செய்து விட்டீர்கள்.

இத்தகைய கூறுகளை எல்லாம் எண்ணியெண்ணி மலேசிய இந்தியர்கள்- தமிழர்கள் வருத்த முற்றிருப்பதை அறிந்த தங்களின் துணை அமைச்சர்களில் ஒருவர், நீங்கள் எல்லாம் ஏன் இப்படி மடாணி அரசாங்கத்தின் பால் மனநிறைவு இல்லாமல் இருக்கிறீர்கள்? இந்திய தொழில்முனைவோருக்காக மில்லியன் கணக்கில் கடன் கொடுக்கிறோம். அப்படி இருந்தும் இந்திய சமுதாயத்தில் மகிழ்ச்சியைக் காண முடியவில்லை;

வேண்டுமென்றால் பிரதமர் அன்வரை எம்ஜிஆர் பாடலுக்கு ஆடும்படி கேட்கிறேன். அப்பொழுதுதான் உங்களுக்கெல்லாம் மகிழ்ச்சி ஏற்படும் என்றால் தனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை; அவ்வாறேச் செய்கிறேன் என்று தங்களின் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.

இந்திய மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற உயர்க்கல்வி வாய்ப்பு மற்றும் மெட்ரிகுலேஷன் இடங்கள் குறித்து தங்களின் தலைமையிலான கல்வி அமைச்சு வெளிப்படையாக தெரிவிப்பதே இல்லை; இது ஏன் என்று இன்றளவும் புரியவில்லை.

நீங்கள் தலைமை வகிக்கும் பிகேஆர் கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை; அவர்கள் கொலு பொம்மையைப் போல பெரும்பாலும் நாடாளுமன்றத்திற்கு வந்து அமர்ந்து இருந்து, மகிழ்ந்து திரும்புகின்றனர்.

இதேப்போன்ற அரசியல் சமூக பொருளாதார தளங்கள் சார்ந்த ஆதங்கம் உங்களின் மலாய், சீன பிள்ளைகளுக்கும் இருந்திருக்கலாம்.

இப்படிப்பட்டவர்கள் அனைவரும் ஜூலை 26 இல் நடைபெற்ற தங்களுக்கு எதிரான பேரணியில் பெருவாரியாக கலந்து கொண்டால் அது குறித்த தகவல் வெளிநாட்டு ஊடகங்களுக்கும் பரவக்கூடும் என்ற நெருடல் தங்களுக்கு ஏற்பட்டிருக்குமோ என்னவோ என்று தெரியவில்லை.

இதை தவிர்க்கும் மனப்பான்மையுடன் தான் இத்தகைய நிதி மற்றும் வர்த்தக அனுகூலங்களை நீங்கள் அறிவித்திருக்கிறீர்களோ என்று எண்ணிட இடம் இருக்கிறது.

மொத்தத்தில் சினுங்குகின்ற அல்லது அழுகின்ற பிள்ளைகளை அமர்த்தும் விதமாக மத்தாப்பு கொளுத்தி கிலுகிலுப்பையும் ஆட்டி அவர்களை சாந்தப்படுத்தும் தந்தையைப் போல நீங்கள் இதை செய்திருக்கிறீர்களோ என்று கருதிட இடமிருக்கிறது.

நாட்டின் 13 வது பொது தேர்தலை 2012 நவம்பர் டிசம்பர் மாதங்களில் நடத்தி முடித்திட நினைத்த அப்போதைய பிரதமர் தத்தோஸ்ரீ நஜீப், வாக்காளர்களை வசப்படுத்துவதற்காக ‘பிரிம்’ உதவித்தொகையை அறிவித்தார்;

ஆனாலும் அவர் திட்டமிட்டபடி அந்த வேளையில் தேர்தல் நடைபெறவில்லை.

2013 ஆம் ஆண்டும் தொடங்கியது; தேசிய முன்னணி ஆட்சி வரலாற்றிலேயே பொங்கல் பண்டிகை அரசு சார்பில் கொண்டாடப்பட்டது அந்த ஆண்டில் தான்; இந்திய சமுதாயத்தை குறிப்பாக தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்தும் ஒரு நிகழ்வாக அது இருந்தது

அப்படி இருந்தும் தேர்தல் பிப்ரவரி- மார்ச் மாதங்களில் நடைபெறவில்லை.

ஒத்திவைக்கப்பட்டு, தள்ளி வைக்கப்பட்டு கடைசியில் 2013 மே ஐந்தாம் நாள்தான் நடைபெற்றது.

2012 பிற்பகுதியில் நஜீப்பால் தொடங்கப்பட்ட BRIM உதவித் தொகையைத்தான் மூன்று சமூகங்களுக்கும் தந்தையான நீங்கள் இன்னமும் தொடர்கிறீர்கள்; பெயர்தான் வேறு.

தற்பொழுது, ஜூலை 31-இல் அன்புள்ள தந்தையாகிய தாங்கள் அறிவித்த பதின்மூன்றாவது மலேசிய பெருந்திட்டத்தில் மற்ற சமூகங்களுக்கு தனித்தனியாக நிதி உதவியையும் சலுகையையும் அறிவித்திருக்கிற தாங்கள், இந்திய சமுதாயத்திற்கென்று எதுவும் அறிவிக்கவில்லை.

தற்பொழுது.., வெகு அண்மையில், புகையிலைப் பொருட்களுக்கான வரியை உயர்த்தி அதன் மூலம் விலையையும் அதிகரித்திருக்கிறீர்கள்

2014 – 15 காலகட்டத்திற்குப் பிறகு இப்பொழுதுதான் புகையிலைப் பொருட்களுக்கான விலையை ஏற்றி இருப்பதாக அறிவித்திருக்கும் தாங்கள் சிகரெட்டுக்கு விலை ஏற்றாமல் மெல்லுகின்ற புகையிலைககு மட்டும் விலையை அதிகரித்திருக்கிறீர்கள்.

வெற்றிலை பாக்குடன் புகையிலையை சேர்த்து மெல்லுகின்ற வழக்கம் இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு உரித்தானது.

ஆக இந்த வகையில்கூட நீங்கள் தமிழர்களைத்தான் இலக்கு வைத்திருக்கிறீர்கள் என்று எண்ணிட இடம் இருக்கிறது..

மொத்தத்தில் மூன்று சமூகங்களுக்கும் அப்பாவாகிய தாங்கள் மத்தாப்பைத்தான் கொளுத்துகிறீர்கள்!
கிலுகிலுப்பையைத்தான் ஆட்டுகிறீர்கள்!!.

பிள்ளைகளாகிய மூவின மக்களும் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர் என்பது உங்களுடைய எண்ணமாக இருந்தால்
அப்படியே இருக்கட்டுமே!

நாளைய வரலாறு என்று ஒன்று இருக்கிறது; பதினாறாவது பொதுத் தேர்தலும் இடம்பெற இருக்கிறது; பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வெல்லாம் நடைபெறுகின்றன என்று!!

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை