
கோலாலம்பூர், ஆக.12:
15-ஆவது பொதுத்தேர்தலுக்குப்பின் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நாட்டின் பத்தாவது பிரதமராக நியமிக்கப்பட்டது அரசியல் சாசனப்படி செல்லாது என்பதால், அவர் உடனே பதவி விலக வேண்டும் என்று மலேசிய முன்னேற்ற கட்சி-எம்.ஏ.பி. தேசியத் தலைவர் பொன் வேதமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.
இதன் தொடர்பில் இன்று காலையில் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் நிறுவனமான கார்த்திக் ஷான் நிறுவனத்தின் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2018 மே ஒன்பதாம் நாள் நாட்டின் 14-ஆவது பொதுத் தேர்தல் நடைபெற்று ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், அப்போது சிறையில் தண்டனை அனுபவித்து வந்த டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு, 16-05-2018 இல் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.

அரசியல் சாசன விதி 42-இன்படி நாட்டின் 15 வது மாமன்னர் மாட்சிமைக்குரிய சுல்தான் முகமட்-வி அவர்களால் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டது.
அதேவேளை, அன்வர் இப்ராகிம் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஐந்தாண்டு கால தடை நீக்கம் குறித்து மாமன்னர் எதுவும் குறிப்பிடவில்லை.
பிரதமர் அன்வார் இப்ராகிம் தண்டனைக்காலம் முடிவடைவதற்கு முன் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டாலும் அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தடைக்காலம் 2023 மே மாதம்வரை நீடித்திருந்தது.
இந்த சட்ட சிக்கல் குறித்து அடுத்து வந்த பதினாறாவது மாட்சிமைக்குரிய மாமன்னரிடம் அன்வார் தெரிவிக்காமல் பிரதமராக பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டது அரசியல் சாசனத்திற்கு முரணானது.

எனவே அவர் உடனே, பதவி விலக வேண்டும் என்று வழக்கு தொடுத்துள்ளதாக செய்தியாளர்களிடம் பொன். வேதமூர்த்தி விளக்கம் அளித்தார்.
மலேசியக் கூட்டரசு அரசியல் சாசனம் விதி 48.(1).(e) மற்றும் 48(3) ஆகிய விதிகளின்படி 2023 ஆம் ஆண்டு வரை தேர்தலில் போட்டியிடுவதற்கு அன்வர் தகுதி பெறாமல் இருந்தார்.
மேற்குறிப்பிட்ட அரசியல் சாசன விதிகளின்படி தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்த அன்வார் 2022 நவம்பர் 19ஆம் நாள் நடைபெற்ற 15-வது பொதுத் தேர்தலின்போது, பேரா மாநிலம் தம்பூன் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டதும் அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றதும் செல்லாது.

இந்த நிலையில் அவர் பிரதமராக பதவியேற்றது அரசியல் சாசனப்படி அடியோடு செல்லாது என்பதால் இதன் தொடர்பில் இன்று நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தபின் சரித்திர சாதனை இயக்கம் ஹிண்ட்ராஃப் தலைவருமான பொன். வேதமூர்த்தி, எம்ஏபி கட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகலில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தின்போது மேலும் விளக்கம் அளித்தார்.
இந்தக் கூட்டத்தில் பாஸ் கட்சியின் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டத்தோஸ்ரீ தக்கியூடின், பெர்சத்து கட்சியின் சட்ட ஆலோசகர் ரஃபிக் ரஷீட், எம்ஏபி கட்சியின் துணைத் தலைவர் ப. சிவகுமார், உதவித் தலைவர் முனைவர் அ. குமரன் உள்ளிட்ட கட்சியினரும் ஹிண்ட்ராஃப் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

சமூக ஆர்வலர் டத்தோ இப்ராகிம் அலி உள்ளிட்ட அரசியல் – சமூக ஆர்வலர்களும் ஏராளமான ஊடகத்தினரும் கலந்து கொண்ட இந்த செய்தியாளர்க் கூட்டத்தில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை தேதியை விரைவில் அறிவிக்கும்படி வழக்கறிஞர் நிறுவனத்தின் சார்பில் கேட்டுக்கொண்ட கார்த்திகேஷன் சண்முகம், அன்வார் தம்புன் தொகுதியில் போட்டியிட்டதும் அந்தத் தொகுதியின் மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதும் அரசியல் சாசனத்திற்கு முரணானது என்பதால் அவர் எம்பி பதவியையும் உடனே துறக்க வேண்டும் என்று மேலும் வலியுறுத்தினார்.
இந்த வழக்கு குறித்த விளக்கத்திற்கு பின் செய்தியாளர்கள் கேட்ட வினாக்களுக்கும் ஐயத்திற்கும் தக்யூடின், ரபீக் ஆகியோர் மேலும் விளக்கமளித்தனர்.


