Thursday, April 2, 2026

பொது மன்னிப்பின்போது மாமன்னரிடம் சமர்ப்பித்த ஆவணங்களை நாட்டு மக்களுக்கு உடனே அன்வார் அறிவிக்க வேண்டும்! -பொன். வேதமூர்த்தி 24 மணி நேரக் கெடு!

இன்றைய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அன்றைய சிறைவாசத்திலிருந்து 16-05-2018இல் பொதுமன்னிப்பு பெற்று விடுதலையான பொழுது மாட்சிமைக்குரிய மாமன்னரிடம் சமர்ப்பித்த அனைத்து ஆவணங்களையும் நாட்டு மக்களுக்கு பகிரங்கமாக வெளியிடும்படி 24 மணி நேர கெடு விதித்துள்ளார் பொன். வேதமூர்த்தி.

அப்பொழுதுதான், மாமன்னரிடம் அன்வார் முன்வைத்த கோரிக்கை பற்றிய உண்மைநிலை நாட்டு மக்களுக்கு தெரியவரும்.

அரசாங்க பதிவேட்டின்படி, அன்வார் பொது மன்னிப்பு கேட்டு மூன்று கோரிக்கை மனுக்களை சமர்ப்பித்துள்ளார்.

2015 மார்ச் 16-ல் அன்வார் முன்வைத்த கோரிக்கை மனுவை மாமன்னர் நிராகரித்து விட்டார்;

அதைப்போல, 27-02-2017 மனுவும் நிராகரிக்கப்பட்டது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், 16-05-2018இல் அன்வார் சமர்ப்பித்த கோரிக்கை மனுவை மாமன்னர் ஏற்று பொது மன்னிப்பு வழங்கினார்.

அரசியல் சாசனம், 42ஆவது விதியின்படி அன்வார் பொது மன்னிப்பை மட்டும்தான் கோரினாரா அல்லது 48(3)ஆவது விதியின்படி தான் தேர்தலில் போட்டி இடுவதற்கு ஏதுவாக தன்மீது விதிக்கப்பட்டிருந்த தகுதி நீக்கத்தையும் அகற்றும்படி கோரிக்கை வைத்தாரா என்பதை எல்லாம் அவர் சமர்ப்பித்த பத்திரங்கள் நாட்டு மக்களுக்கு தெளிவாக எடுத்துக்காட்டும்.

தவிர, பொது மன்னிப்பு கேட்ட அன்வார், தன் குற்றங்களை ஒப்புக் கொண்டாரா என்பதையும் பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

வழக்கமாக அரச மன்னிப்பு கோரும் ஒருகைதி, முதலில் குற்றத்தை ஒப்புக்கொள்கிறார்; ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்துகிறார்; மேலும் தன்னை முழுவதுமாக மாமன்னரின் தயவிற்காக தன்னை ஒப்படைக்கிறார் என்றெல்லாம் புரிந்துகொள்ள இடம் இருக்கிறது;

இவற்றில் அன்வார் எதை செய்தார் என்பதைத் தெரிந்து கொள்ள நாட்டு மக்களுக்கு முழு உரிமையும் தகுதியும் இருக்கிறது.

எனவே, நாட்டு நலன் கருதியும் வெளிப்படையை தன்மையை முன்னிட்டும் தான் சமர்ப்பித்த முழு கோரிக்கை மனுவையும் அன்வார் பொதுவெளியில் உடனே வெளியிட வேண்டும். அவ்வாறு செய்வதற்கு அன்வார் தயாராகி விட்டாரா?

நாட்டு மக்கள் காத்திருக்கின்றனர் என்று இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் பொன் வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை