
பிரதமர் அன்வார் இப்ராகிமை ஆதரித்து அட்டர்னி ஜெனரல் வெளியிட்டுள்ள அறிக்கை சட்டப்படி நியாயப்படுத்த முடியாதது மட்டுமல்ல; இது மலேசியர்களை தவறாக வழிநடத்தவும்
அவர்களின் அறிவாற்றலை அவமதிக்கும் ஒரு வெட்கக்கேடான முயற்சியென்றும் பொன். வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்
அரசியல் சாசனம் பிரிவு 42இன்படி, டத்தோஸ்ரீ அன்வாருக்கு வழங்கப்பட்ட மன்னிப்பு மாட்சிமைக்குரிய மாமன்னரின் கருணைச் செயலைத் தவிர, இது வரலாற்றை மீண்டும் எழுதுவதோ, ஒரு தண்டனைப் பதிவை நீக்குவதோ அல்லது எந்தக் குற்றமும் நடைபெறவில்லை என்று இட்டுக் கட்டுவதற்கோ அல்ல;
சட்டப்படியான இத்தகைய உண்மையைத் திரிக்கும் சட்டத்துறை தலைவர் (ஏஜி) மேற்கொள்ளும் முயற்சி, பொது மக்களின் நம்பிக்கையை சிதைப்பதாகும்; மேலும் அரசியலமைப்பை ஆபத்தான முறையில் புறக்கணிப்பதுமாகும்.
அரசியல் சாசனம் பிரிவு 42இன் கீழ் மன்னிப்பு என்பது, மாட்சிமை தங்கிய மாமன்னரின் கருணைச் செயலேத் தவிர ஒரு தண்டனையை நீக்குவது ஆகாது; அது நீதிமன்றத்தால் அகற்றப்படும் வரை பதிவில் இடம் பெற்றிருக்கும்.
தான் தொடுத்துள்ள வழக்கு பிரதமர் அன்வாருக்கு வழங்கப்பட்ட மன்னிப்பை எதிர்ப்பதற்காக அல்ல; ஆனால் அரசியலமைப்பு பிரிவு 48(1)(e), பிரிவு 48(3) ஆகிய இரண்டையும் சேர்த்துப் படித்தால், 2018 மே 16 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு அன்வார் பொதுத் தேர்தலில் போட்டியிட தகுதி நீக்கம் நடைமுறைக்கு வருகிறது.
ஒருவர் நாட்டின் உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டவுடன், அந்த தண்டனையை நீக்குவதற்கு கூட்டாட்சி அரசியலமைப்பில் எந்த ஏற்பாடும் இல்லை. நீதிமன்றமே அதை நீக்கும் வரை, தண்டனைப் பதிவில் அது இடம்பெற்று இருக்கும்.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு எதிராக தான் கொடுத்துள்ள சிவில் வழக்கு, அவருக்கு அளிக்கப்பட்ட மன்னிப்பை எதிர்ப்பதற்காக அல்ல;
அந்தத் தண்டனையின் தெளிவான அரசியலமைப்பு விளைவைப் பற்றியது.
கூட்டாட்சி அரசியலமைப்பின் பாதுகாவலராகப் பதவியேற்றுள்ள அட்டர்னி ஜெனரல், சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட பிரதமர் அன்வார் இப்ராகிம் மீதான கறைபடிந்த கருத்தை களைவதற்காக, சட்டத்தைத் திரிப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
இது வெறும் பொறுப்பற்ற செயல் மட்டுமல்ல; அவர் பாதுகாக்க வேண்டிய சட்டத்தின் ஆட்சியையே இது சிறுமைக்கு உட்படுத்துகிறது.
இந்தத் தர்க்கம் அவரின் அரசியல் எஜமானரிடமிருந்து வருகிறது என்று இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் பொன் வேதமூர்த்தி மேலும் விளக்கமளித்துள்ளார்.


