Thursday, April 2, 2026

பிரதமர் அன்வாரின் தகுதி- நம்பகத்தன்மை குறித்து 221 எம்.பி.க்களும் நடுநிலையுடன் பரிசீலிக்க வேண்டும்: -பொன் வேதமூர்த்தி அறைகூவல்

கூட்டரசு அரசியல் சாசனத்திற்கு முரணாக நாடாளுமன்ற உறுப்பினராகவும் பிரதமராகவும் விளங்கும் அன்வார் இப்ராகிம் , அவ்வாறு நீடிப்பதையும் செயல்படுவதையும் தடுக்க வேண்டும்; அதேவேளை அரசியல் சாசன மாண்பை நிலை நிறுத்தவும் ஹிண்ட்ராஃப் மற்றும் எம்.ஏ.பி. தலைவர் பொன். வேதமூர்த்தி நீதிமன்றத்தின்வழி சட்டப்பூர்வ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

சுதந்திர மலேசிய வரலாற்றில் இப்படியும் ஒரு வழக்கு இடம்பெறுமா என்பதை எண்ணி மலேசியாவின் அனைத்து தரப்பினரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்

உண்மையில், இந்த வழக்கு, சட்டத்தின் ஆட்சியையும் கூட்டரசு அரசியலமைப்பின் மாண்பையும் நிலை நிறுத்துவதை இலக்காக கொண்டுள்ளது.

தேசிய உணர்வு மிளிர்ந்து ஓங்கும் இந்த சுதந்திர மாதத்தில் இத்தகைய வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது உள்ளபடியே தேசிய அளவிலும் பொதுவெளியிலும் அரசியல் வட்டத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக மலேசியாவின் மிக உயர்ந்த பதவியின் நம்பகத்தன்மை குறித்த அடிப்படை கேள்விகளையும் முன்னாள் அமைச்சருமான பொன் வேதமூர்த்தி தொடுத்துள்ள இந்த வழக்கு எழுப்புகிறது.

2018 மே 16இல் அரச மன்னிப்பைப் பெற்ற டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இதன் தொடர்பில் மாமன்னரிடம் சமர்ப்பித்த விண்ணப்பம் குறித்த வெளிப்படைத் தன்மையை பொன் வேதமூர்த்தி கோருகிறார்.

இதற்கு முன்னதாக 2015 மார்ச் 16லும் 2017 பிப்ரவரி 27 அன்வார் மேற்கொண்ட முயற்சிகள் மாமன்னரால் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த நிலையில், 2018 மே 16-இல் மாமன்னரால் கருணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டதன் தொடர்பில் ஏராளமான ஐயமும் கேள்விகளும் எழுகின்றன.

அரசியல் சாசன விதி 42-இன்படி, அன்வார் சிறைவாசத்திலிருந்து விடுதலையை மட்டுமே கோரினாரா?

அல்லது

தேர்தலில் போட்டியிடுவதற்கான தடையை அரசியல் சாசன விதி 48.(3)இன்படி நீக்கும்படியும் விண்ணப்பித்தாரா?

மேலும் முக்கியமாக, அரச மன்னிப்பு கோரிய பொழுது அன்வார் குற்றத்தை ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவித்தாரா? என்பதும் வெளிப்படையாக தெரிவிக்கப்பட வேண்டும்.

குறிப்பாக, அரசியல் தகுதியையும் அதிகார பதவியையும் மீண்டும் அடைவதற்காக சட்ட நடைமுறைகளை தவிர்த்துவிட்டாரா என்பதை அறிய பொதுமக்களுக்கு உரிமை உண்டு.

உண்மையில் இது வெறும் அரசியல் விவகாரம் மட்டும் அல்ல; மாறாக அரசியல் சாசனத்தின் பெருமையும் மாண்பும் சம்பந்தப்பட்ட விவகாரம்.

முக்கியமாக, பாரம்பரியமாக அரச மன்னிப்புக்கு தேவைப்படும் குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவித்தாரா என்பதும் நாட்டு மக்களுக்கு தெரிந்தாக வேண்டும்

அன்வாரைத் தவிர்த்து ஏனைய 221 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டாட்சி அரசியலமைப்பின் மாண்பை நிலைநிறுத்துவதற்கும் நாட்டின் மிக உயர்ந்த பதவியை தகுதி மற்றும் நேர்மை குறித்த கேள்விக்கு அப்பாற்பட்ட ஒருவர் வகிப்பதை உறுதி செய்வதற்கும் உரிய உன்னதமான கடமையைக் கொண்டுள்ளனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக, எந்த நபரும் – எவ்வளவு சக்திவாய்ந்தவராக இருந்தாலும் – சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் அல்லர் என்பதால்
நாடாளுமன்றத்தின் அனைத்து எம்பிக்களும் பிரதமர் அன்வார் இப்ராகிமை எதிர்கொண்டு இந்த முக்கியமான பிரச்சினைகள் குறித்த தெளிவைக் கோர வேண்டும்.

மலேசிய நாடாளுமன்றத்தின் நம்பகத்தன்மை, சட்டத்தின் புனிதம் மற்றும் மலேசிய மக்களின் நம்பிக்கை ஆகியவை ஆபத்தில் உள்ளன.

அதனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏனைய 221 மக்கள் பிரதிநிதிகளும் அன்வார் விவகாரத்தில் நியாயமாக செயல்பட்டு தீர்க்கமாக முடிவெடுக்க வேண்டிய நேரம் இதுவென்று பொன் வேதமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை