
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், தன் பலவீனத்தை மறைப்பதற்காக பொய்யுரைப்பதிலும் அரசியல் நாடகங்களை அரங்கேற்றுவதிலும் சளைக்காதவர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து, தன்னைத்தானே அம்பலப்படுத்திக் கொண்டுள்ளார் என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்.ஏ.பி. தேசியத் தலைவரும் நாட்டின் சரித்திர சாதனை இயக்கம் ஹிண்ட்ராஃப் தலைவருமான பொன் வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
பொதுச் சேவைத் துறையை சேர்ந்த ஆயிரக்கணக்கான மூத்த ஊழியர்கள் முன்னிலையில் கடந்த வெள்ளிக்கிழமை உரையாற்றிய அன்வார், தன்மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் அடிப்படை அற்றவை; கடுமையானவை என்று பொன் வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்; அன்வார் வகிக்கும் பிரதமர் பதவி அரசியல் சாசனத்தின்படி சரியானதா என்பதன் தொடர்பில் எதிர்கொண்டிருக்கும் நீதிமன்ற சவாலை மறைப்பதற்கும் நாட்டு மக்களை திசைதிருப்புவதற்கும் மேற்கொள்கின்ற ஒரு தீவிர முயற்சியைத் தவிர வேறில்லை.
தன்மீது பொய்க் குற்றச்சாட்டு சுமத்தும் அன்வார், தன்னையும் அறியாமல் மாண்பிற்குரிய மாமன்னரைப் பற்றியும் அரச மன்னிப்பு தொடர்பில் அவர் எடுத்த முடிவு குறித்தும் கேள்வி எழுப்புகிறார். அன்வார், தன் அரசியல் சதுரங்க விளையாட்டில் மாண்பிற்குரிய மாமன்னரின் அரச நிறுவனத்தையும் பொறுப்பற்ற முறையில் சம்பந்தப்படுத்துகிறார். அன்வாரின் இத்தகைய நடவடிக்கை நாடும் மக்களும் போற்றும் மாமன்னரின் மேலாண்மைக்கு மட்டுமல்ல; நாட்டின் உயிர்நாடியான அரசியல் சாசனத்தின்மீதும் ஒருசேர தாக்குதல் தொடுக்கும் போக்கும் ஆகும். இத்தகைய ஆபத்தைப் பற்றி நாட்டு மக்கள் அனைவரும் அவசியம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
“இதில் இன்னும் மோசமான விசயம் என்னவென்றால், மலேசியா ஒரு கொடுங்கோல் நாடு என்றும், அங்கு ஆயிரக்கணக்கான இந்தியர்களைக் காவல்துறையினர் கொன்றுள்ளனர் என்றும் நான் குற்றம் சாட்டியதாக அன்வார் தீய நோக்கத்தில் என்மீது குற்றம் சாட்டி இருப்பதுதான்; இத்தகையக் கூற்று அப்பட்டமான பொய். இது வேண்டுமென்றே தீய நோக்கத்துடனும் மற்றவர்களை தூண்டிவிடும் கெட்ட நோக்கத்தில் சொல்லப்பட்டது! தவிர நம் காவல்துறையின் நற்பெயருக்கு அன்வார் களங்கம் விளைவித்துள்ளதால், இந்த கருத்து, தேசத்துரோகச் சட்டத்தின்படி ஒரு குற்றமாகும். அன்வார், அதிகாரத்தில் ஒட்டிக்கொள்வதற்காக மக்களின் மரியாதைக்குரிய நிறுவனங்கள் உட்பட எந்த தரப்பினரையும் களங்கப்படுத்த தயாராக உள்ளார் எனப் புலனாகிறது.
‘சிறுபான்மையினரின் கொடுங்கோன்மை'(tyranny of the minority) போன்ற பிளவுபடுத்தும் சொற்றொடர்களை உள்ளடக்கிய அவரது எரிச்சலூட்டும் பேச்சு, மலேசியர்களை ஒன்றிணைப்பதற்காக அல்ல; மாறாக அவர்களை மேலும் பிளவுபடுத்தவும், சமூகங்களிடையே சந்தேகம்- வெறுப்பைத் தூண்டுவதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மூத்த அரசு ஊழியர்கள்முன் இத்தகைய பொறுப்பற்ற வார்த்தைகளைக் கூறியதன்மூலம், அன்வார் எல்லை கடந்து பேசி இருக்கிறார்; மலேசியர்களாகிய நாம் நிலைநாட்ட வேண்டிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாகவும் அவர் உள்ளார்.
அன்வார் தன்னை தற்காக்கவும் பதவியில் எப்படியாவது தொடரவும் அரும்பாடு படுகிறார். அதனால்தான் மக்களுக்கும் தேசத்திற்கும் பாரபட்சமற்றதாகவும் விசுவாசமாகவும் இருக்கும் அரசாங்க இயந்திரத்தையே அவர் அரசியல்மயமாக்க முயற்சிக்கிறார்.
இது அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரு அவநம்பிக்கையான மனிதனின் நடத்தையாகும்; மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ற தகுதியான ஒரு தலைவரின் நடத்தை அல்ல என்று முன்னாள் அமைச்சர்ருமான பொன் வேதமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


