221 எம்பிக்களும் கேள்வி எழுப்புவார்களா?

தேர்தல் ஆணையத்தையும் நாட்டு மக்களின் மாண்புக்குரிய அரண்மனையையும் ஏமாற்றி பிரதமர் ஆகியுள்ள அன்வார் இப்ராகிம் அந்தப் பதவியில் தொடர்வதற்கு அரசியல் சாசனத்தின்படியும் ஜனநாயக முறைப்படியும் தகுதி பெற்றிருக்கிறாரா என்பதை உறுதி செய்ய 221 எம்பிக்களும் நாடாளுமன்றத்தில் ‘உரிமை மீறல்’ பிரச்சனையை எழுப்புவார்களா என்று மலேசிய முன்னேற்ற கட்சி- எம்ஏபி தேசியத் தலைவரும் நாட்டின் சரித்திர சாதனை இயக்கம் என்ற அமைப்பின் தலைவருமான பொன். வேதமூர்த்தி அதிரடி வினாத் தொடுத்துள்ளார்
அன்வாரின் மடியில் கனம் அதிகமாக இருப்பதால், அவருக்கு பாதையில் பயம் ஏற்பட்டுள்ளது.
2022 நவம்பர் 24ஆம் நாள் நாட்டின் பத்தாவது பிரதமராக பதவியேற்ற அன்வார், தனக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கே தகுதி இல்லை என்பதையும் தான் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் செல்லாது என்பதையும் அப்போதைய மாட்சிமைக்குரிய மாமன்னரிடம் மறைத்துதான், பிரதமர் ஆகியுள்ளார்; காரணம் ‘அடைந்தால் மகாதேவி’ என்பதைப்போல ‘அடைந்தால் பிரதமர் பதவி’ என்னும் ஒற்றை இலக்கில் அரசியல் நடத்திய அன்வாரின் பதவி மோகம் அவரை இப்படி செய்யவைத்துள்ளது.
2018 மே 16ஆம் நாள் மாட்சிமைக்குரிய பதினைந்தாவதுமாமன்னரிடமிருந்து பொது மன்னிப்புபெற்ற அன்வாருக்கு 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதன்படி 2023 மே மாதம்வரை அன்வார் தேர்தலில் போட்டியிடுவதற்கான தடை அமலில் இருந்துள்ளது.
இந்த காலகட்டத்தில், 2022 நவம்பர்19, 15-ஆவது பொதுத் தேர்தலில் வென்று பிரதமராக பதவி ஏற்ற நேரத்தில், தான் தேர்தலில் போட்டியிடுவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ள விவரத்தை அரண்மனை நிருவாகத்திடம் மறைத்துள்ளார் அன்வார்.
எல்லாவற்றுக்கும் மேலாக நாட்டிற்கு உயிர்நாடியைப் போன்ற அரசியல் சாசனத்தையும் அனவார் சிறிதும் பொருள் படுத்தாமல் அவமரியாதை செய்திருக்கிறார் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக பொன் வேதமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

மொத்தத்தில் அன்வார் தேர்தலில் போட்டியிடுவதற்கு சட்டப்படியான தடை அமலில் இருந்த காலத்தில் இவர் அனைத்துத் தரப்பினரையும் ஏமாற்றும் வகையில் எல்லா தகவலையும் மறைத்து தேர்தலில் போட்டுயிடாடு இப்பொழுது பிரதமராகி இருக்கிறார்.
இதன் தொடர்பில் கேள்வி எழுப்பி, வழக்கு தொடுத்தால் அதற்கு நேரடியாக பதில் சொல்வதை விடுத்து எதேதோ பேசி நாட்டு மக்களின் கவனத்தை திருப்பி மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தவும் முயல்கிறார் அன்வார் இப்ராகிம்.
எனவே அன்வார் தற்பொழுது வகிக்கும் பிரதமர் பதவி சட்டப்படி சரியானதா என்பது குறித்து நாடாளுமன்றத்தின் 221 உறுப்பினர்களும் சீர்தூக்கிப் பார்ப்பதுடன் அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் உரிமைமீறல் தீர்மானத்தையும் கொண்டுவர வேண்டிய தருணம் இது என்று முன்னாள் அமைச்சர்ருமான பொன் வேதமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.


