Monday, April 20, 2026

ஹிண்ட்ராஃப் எழுச்சியின் 17-ஆம் ஆண்டு தினத்தில் சரித்திரப்பூர்வக் கடிதம்! – பொன்.வேதமூர்த்தி பிரதமரிடம் வெ.25 பில்லியன் கோரிக்கை!

கோலாலம்பூர், நவ.25:
வரலாற்றுப்புப் புகழ்மிக்க ‘ஹிண்ட்ராஃப் எழுச்சியின் 17-ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு ஹிண்ட்ராஃப் தலைவரும் மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தலைவருமான பொன்.வேதமூர்த்தி பிரதமருக்கு இன்று அனுப்பியுள்ள கடிதத்தில் நலிந்த இந்தியர்களின் மீட்சிக்காக 13-ஆவது மலேசியத் திட்டத்தில் வெ.25 பில்லியனுக்கான(வெ.2,500கோடி) சிறப்புத் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

1970-களில் நாட்டின் புதிய பொருளாதாரக் கொள்கையை வகுத்தவர்கள், மலாய் அல்லாத பணக்காரர் பட்டியலில் இந்தியர்களையும் சேர்த்து, இந்திய சமுதாயத்தை மொத்தமாக மூழ்கவைத்துவிட்டனர். எனவே, 13-ஆவது மலேசியத் திட்டத்திலாவது இந்தியர்களுக்கான சிறப்புத் திட்டங்களை அறிவிக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார்ர்.

மலேசியா, 1971இல் புதிய பொருளாதாரக் கொள்கையின்கீழ், முதல் மலேசியத் திட்டத்தை வரைந்தபொழுது தேசிய ஒற்றுமை-நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டை எட்டுவது; சமூக-பொருளாதார சீரமைப்பு; வறுமை ஒழிப்பு ஆகிய மூன்று அம்சங்களை இலக்காகக் கொண்டிருந்தது.

மிகவும் முன்னேறி இருந்த சீன சமூகத்துடன் ஒப்பிடும்பொழுது பின் தங்கி இருந்த மலாய்மக்களின் மேம்பாட்டிற்காக, மத்தியக் கூட்டரசு ஏற்கெனவே வரைந்த திட்டம் குறித்தும் பொன்.வேதமூர்த்தி அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்-ளார். புதிய பொருளாதாரக் கொள்கை மலேசியர்களிடையே ஏழை மலாய்க்-காரர்களுக்கும் பணக்கார மலாய்க்காரர் அல்லாதவர்களுக்கும் இடையே ஒரு இனப் பிரிவினையை உருவாக்கியது. மலாய் சமூகத்தை மலாய்க்காரர்கள் அல்லாதவர்களுக்கு இணையாகக் கொண்டு வருவதற்காக மலாய் சமூகத்-திற்காக முன்னெடுக்கப்பட்ட பல்வேறு பொருளாதாரத் திட்டங்க்களுக்கு சொல்லப்பட்ட நியாயம் இதுதான்.

மலாய் அல்லாத பணக்காரர் என்னும் பிரிவில் இந்தியர்கள் தவறாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதை பொன்.வேதமூர்த்தி வலியுறுத்தியுள்ளார். புதிய பொருளாதாரத் திட்டம் நடைமுறைக்கு வந்த நேரத்தில், மலேசிய இந்திய சமுதாயம், தங்களின் உரிமைக்காக குரல்கொடுக்கக்கூடிய வலிமையான இந்தியத் தலைமையைக் கொண்டிருக்கவில்லை; அன்றைய மஇகா தலைமைக்கு உண்மையைப் பேசுவதற்கும் நாட்டின் தலைமையிடம் எடுத்துக்கூறுவததற்கும் தைரியமும்இல்லை; ஆர்வமும் இல்லை.

1970ஆம் ஆண்டுகளில் 90% இந்தியர்கள், தொழிலாளிகளாகவே இருந்தனர். இந்தியர்களுக்கு மிகவும் பரிச்சயமான ‘ஜேகேஆர்’ என்னும் பொதுப்பணித் துறை, ஈபி அல்லது எல்.எல்.என். எனப்பட்ட மின்வாரியம், தமிழர்கள் தண்டவாளம் அமைத்த கே.டி.எம்.பி. ஆகியவற்றைக் குறிப்பிடலாம். அப்படி இருந்தும் புதிய பொருளாதார கொள்கையை வகுத்தவர்கள், பணக்கார மலாய் அல்லாதார் பட்டியலில் சேர்த்து, மலேசிய இந்தியர்களை தேசிய நீரோட்டத்தில் இருந்து விலக்கிவைக்க தந்திரமாக வழிவகுத்தனர்.

அதேக் காலக்கட்டத்தில் தோட்டங்களைவிட்டு நகர்ப்பகுதிக்கு நகர்த்தப் பட்ட பாட்டாளிகள் உரிய இழப்பீடு, மாற்று வீட்டுவசதி, நிலம் அல்லது புதிய தொழில்வாய்ப்பு என எதுவும் அளிக்கப்படாமல் கட்டாய வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

எனவே, இந்திய சமுதாயத்தின் அவலத்தை இன்றைய தலைமை ஆழமாக கவனத்தில் கொள்வதைவிடுத்து, அழுகின்ற பிள்ளை கையில் பொம்மையைக் கொடுப்பதைப்போல இடைக்கால ஏற்பாடாக எதையாவது காண்பித்துவிட்டு கடந்துசெல்ல கருதக்கூடாது. 13-ஆவது மலேசியத் திட்டத்தில் இந்தியர்-களுக்கு உருப்படியான திட்டங்கள் தேவை. 12-ஆவது மலேசியத்திட்டத்தில் வளர்ச்சிப் பணிகளுக்கு மட்டும் 400 பில்லியன் வெள்ளி செலவிடப்பட்டு உள்ளதாக புள்ளிவிவரத் தகவல் தெரிவிக்கிறது. எனவே, அடுத்த ஐந்தாண்டு திட்டத்தில் கீழ்க்கண்ட தளங்களின்மூலம் குறைந்தது 25 பில்லியன்-2,500 கோடி வெள்ளியை ஒதுக்க வேண்டும்.
நிலம் & வீட்டுவசதி
மனித மூலதனம்
டிஜிட்டல் பொருளாதாரம்
நவீன விவசாயம்
கல்வி
மானிய உதவியுடனான வர்த்தக வாய்ப்பு
இந்தியர்களுக்கான பங்குரிமை அதிகரிப்பு

மொத்தத்தில், இந்திய சமூகத்திற்காக ஒரு விரிவான திட்டத்தை வகுக்கு-மாறும் அதில், ஆளுந்தரப்பு-எதிரணித்தரப்பு இந்தியர் கட்சித் தலைவர்களையும் ஈடுபடுத்துமாறும் அரசாங்கத்தை வலியுறுவதாக அந்தக் கடிதத்தில் பொன்.வேதமூர்த்தி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை