
மறுசுழற்சிக்கு ஆளாகி-புது வண்ணம் பூசப்பட்டத் தலைவர்களை சீன – இந்திய வாக்காளர்கள், நாடுவதில்லை என்பதை அறியாத தேசிய (பெரிக்காத்தான்) கூட்டணித் தலைவர்கள், மலாய்க்காரர் அல்லாதோரின் அரசியல் அபிலாசைகளையும் புரிந்து கொள்ளவில்லை என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தேசியத் தலைவர் பொன் வேதமூர்த்தி கடுமையாக சாடி உள்ளார்.
“பெரிகாத்தான் நேஷனல்(PN) தலைவர்கள் மஇகா மற்றும் மசீச கட்சிகளை தங்கள் கூட்டணியில் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவது, மலாய்க்காரர் அல்லாத சமூகங்களின் அரசியல் யதார்த்தத்தை புரிந்து கொள்ள முடியாத நிலையையும் தேசிய அரசியல் அறியாமையையும் பளிச்சென சுட்டிக் காட்டுகிறது”.
மஇகா மற்றும் மசீச கட்சிகள் தங்கள் கூட்டணியில் சேர்வதில் பெரிகாத்தான் நேஷனல் (பிஎன்) தலைவர்கள் காட்டும் ஆர்வம், மலாய்க்காரர் அல்லாத மக்களின் அரசியல் யதார்த்தங்களைப் பற்றிய மோசமான அறியாமையைக் காட்டுகிறது. இந்த இரண்டு கட்சிகளையும் சேர்ப்பதால் சீன, இந்திய வாக்காளர்களின் ஆதரவு அதிகரிக்காது என்பதை பெரிக்காத்தான் புரிந்து கொள்ள வேண்டும்; இந்த இரு கட்சிகளும் அவற்றின் சொந்த சமூகங்களால் நிராகரிக்கப்பட்டதை அறியாமல் இத்தகைய முயற்சியில் இறங்கும் பெரிக்காத்தான் கூட்டணிக்கு மஇகா-வும் மசீச-வும் சுமையாக மாறும் அபாயம் இருப்பதாக சரித்திர சாதனை இயக்கமான ஹிண்ட்ராஃப் தலைவருமான பொன்.வேதமூர்த்தி எச்சரித்துள்ளார்.
12வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு, மஇகா மற்றும் மசீச-வுடனான அரசியல் உறவு நன்மை அளிப்பதற்குப் பதிலாக தனக்கு சுமையாக மாறிவிட்டதை உணராத தேசிய முன்னணி, மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்களின் அரசியல் முதிர்ச்சிக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளவும் தவறிவிட்டது
2007 ஹிண்ட்ராப் பேரணிக்குப்பின் தேசிய அளவில் திருப்புமுனையும் அரசியல் விழிப்புணர்வும் ஏற்பட்டன. இந்திய வாக்காளர்கள் எதிர்க்கட்சிகளை ஆதரிக்க வேண்டும் என்று ஹிண்ட்ராஃப் விடுத்த அழைப்பு, இந்திய சமூகத்தைக் கடந்து தேசிய அளவில் பிரதிபலித்தது; இதன் விளைவால் தேசிய முன்னணிமீது கொண்டிருந்த விசுவாசத்தை மறுபரிசீலனை செய்து, ஜசெக, பிகேஆர், பாஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய மக்கள் கூட்டணியை ஆதரித்தனர். இதன் விளைவால் தேசிய அளவில் மாற்றம் ஏற்பட்டது. தேசிய முன்னணி வழங்கிய பொருளாதார அணுகூலத்தால் சீனர்கள் நீண்ட காலமாக ஒப்பீட்டளவில் வசதியாக இருந்தபோதிலும் மனித உரிமைகள் மற்றும் வெளிப்படைத்தன்மையை தேசிய முன்னணி புறக்கணித்ததால், சீன வாக்காளர்களும் 2008 பொதுத் தேர்தலில் பேரளவில் ஹிண்ட்ராஃப் பிரச்சாரத்திற்கு செவிசாய்த்தனர்.
ஹிண்ட்ராப் எழுச்சி ஒரு வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்தியது; ஹிண்ட்ராப் ஆதரவாளர்களின் தன்னார்வ பிரச்சாரத்தினால் தேசிய முன்னணி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையையும் ஐந்து மாநிலங்களில் ஆட்சியையும் இழக்க நேர்ந்தது; மலேசிய தேர்தல் வரலாற்றில் இதுவோர் அரசியல் பூகம்பம்; அதிலிருந்து, மஇகாவும் மசீசவும் தத்தம் சமூகங்களின் நம்பகமான குரல்களாகக் கருதப்படவில்லை. அந்தவேளையில், ஹிண்ட்ராப் ஓர் அரசியல் கட்சியாக இல்லாததால், இந்திய வாக்காளர்கள் பிகேஆர், ஜசெக கட்சிகளை ஆதரிக்கும்படி வெளிப்படையாகக் கேட்டுக்கொள்ளப்பட்டனர். அதே நேரத்தில், சீனர்கள் பெரும்பாலும் ஜசெக-வின்கீழ் ஒருங்கிணைக்கப்பட்டனர்; பாஸ் கட்சிகூட முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்திய வாக்காளரின் ஆதரவைப்பெற்றது எல்லாம், அம்னோவை விரக்தி நிலைக்குத் தள்ளியது; 2013-பதின்மூன்றாவது பொதுத் தேர்தலுக்குப் பின், பிரதமர் நஜீப் சீன சமூகத்திற்கு எதிராக சலிப்புடன் வெளிப்படுத்திய “Apa lagi Cina mahu”(சீன சமூகத்திற்கு இன்னும் என்ன வேண்டும்) என்ற பிரபலமற்ற கருத்து, புதிய அரசியல் நிலவரத்தை தேசிய முன்னணி புரிந்து கொள்ளத் தவறியதன் ஆழத்தை அப்பட்டமாக அம்பலப்படுத்தியது.

அம்னோ-வின் ஒரு பிரிவான பெர்சத்துவும் பாஸ் கட்சியும் மலாய் அல்லாத வாக்காளர்களின் அபிலாஷைகளைத் தொடர்ந்து தவறாகப் புரிந்து கொள்வதுடன் யதார்த்த நிலையையும் முழுமையாகத் தெரிந்துகொள்ள வில்லை; அதனால்தான், DHPP அல்லது பெர்சத்துவின் மலாய்க்காரர் அல்லாத பிரிவு போன்றவற்றை மாற்றாகக் கருதி, இந்திய வாக்காளர்களை வசப்படுத்த நினைக்கின்றன; அதே நேரத்தில் மஇகா மற்றும் மசீச-வுடன் கூட்டணி வைப்பதும் தேர்தல் களத்தில் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என தப்புக் கணக்கு போடுகின்றனர்; இத்தகைய உத்தி இந்தக் கட்சிகளின் அறியாமையை மட்டுமல்ல; மலாய் அல்லாதவர்களின் அரசியல் முதிர்ச்சி குறித்த அடிப்படை தவறான புரிதலையும் பிரதிபலிக்கிறது.
உண்மை நிலை மிகவும் தெளிவானது
சீன மற்றும் இந்திய வாக்காளர்கள் மறுசுழற்சி செய்யப்பட்ட தலைவர்களையோ அதிகாரப் பகிர்வு குறித்த ஏற்பாட்டையோ நாடவில்லை. அவர்கள் வெளிப்படைத்தன்மை, நியாயம் மற்றும் அர்த்தமுள்ள சீர்திருத்தங்களை விரும்புகின்றனர். பல சீனர்கள் ஏற்கெனவே ஜசெக-வின் சமரச நகர்வுகுறித்து எச்சரிக்கையாக உள்ளனர், அதே நேரத்தில் அன்வார் இப்ராகிமின் எம்ஜிஆர் நாடகத்தால் இந்தியர்கள் பெரும் விரக்தி நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
இந்தச் சூழலில், இந்தியர்கள் ஹிண்ட்ராஃப், எம்ஏபி மற்றும் உரிமை ஆகிய கட்சிகளைச் சேர்ந்த கொள்கை ரீதியான தலைவர்களை எதிர்நோக்கு-கின்றனர். அவர்கள் நீண்ட காலமாக மக்களுக்கு நிலைத்தன்மையுடனும் நேர்மையுடனும் சேவை செய்வதில் சாதனை படைத்தவர்கள். இந்தப் பின்னணியில், மஇகா மற்றும் மசிசவை பெரிக்காத்தான் கூட்டணிக்கு வரவேற்பது மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்களை எளிதாக வெல்ல உதவும் என்று கருதுவது தவறானது;
மலாய் அல்லாதவர்கள் இனியும் ‘பாரம்பரிய’ பிரதிநிதித்துவத்தை நம்புவதாக இல்லை. அவர்கள் கொள்கையில் வேரூன்றியுள்ள உண்மையான தலைமையை விரும்புகின்றனர்; அடையாள அரசியலுடன் உலாவரும் ஒப்பனைத் தலைவர்களை அல்ல. மலாய் அல்லாதோரின் பிரச்சினைகளை பெரிக்காத்தான தொடர்ந்து புறந்தள்ளி, உண்மையான மலாய்க்காரர் அல்லாத தலைமையை ஏற்றுக்கொள்ளத் தவறினால், அது மலாய் அல்லாத வாக்காளர்களின் ஆதரவைப் பெற அடியோடு தவறிவிடும். பெரிக்காத்தான் கூட்டணி, தற்போது மேற்கொள்ளும் வெறும் அடையாள அரசியல், நாட்டின் சமூக-அரசியல் மாற்றத்திற்கு வழிவகுக்காது என்று முன்னாள் அமைச்சருமான பொன்.வேதமுர்த்தி வெளியிட்டுள்ள நீண்ட அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.


