
தம்புன் எம்.பி.யாக அன்வார் இப்ராகிம் தேர்ந்தெடுக்கப்பட்டதையும் அதைத் தொடர்ந்து அவர் பிரதமராக நியமிக்கப்பட்டதையும் எதிர்த்து மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி மற்றும் சரித்திர சாதனை இயக்கம் ஹிண்ட்ராஃப் தலைவருமான பொன். வேதமூர்த்தி சட்டப் போராட்டம் நடத்துவதை நாடு அறியும்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை, 2026 ஜனவரி 27-இல் விசாரணைக்கு வருகிறது.
உண்மையில் இந்த வழக்கை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேரடியாக எதிர்கொள்ளவில்லை; தனக்கு எதிரான இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்றுதான் எதிர்மனு சார்வு செய்திருக்கிறார்.
அரசியல் சாசன விதி 42-இன்படி அன்வார் பொதுமன்னிப்பைத்தான் பெற்றாரேத் தவிர, அரசியல் சாசனப் பிரிவு 48-இன்படி அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தடை நீக்கப்படவில்லை; அல்லது நீக்கப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை; எனவே, பேராக் மாநிலத்து தம்புன் நாடாளுமன்றத் தொகுதியில் அன்வார் இப்ராகிம் போட்டியிட்டது தவறு; எவரும் கவனிக்காத இந்த சட்ட நிழற்பகுதியைப் பயன்படுத்திக் கொண்டு இவர் பிரதமராக பொறுப்பேற்றது நாட்டின் மாண்புக்குரிய அரசியல் சாசனத்திற்கு முரணானது என்னும் மையப் புள்ளியில்தான் இந்த வழக்கு நிலைகொண்டுள்ளது.
68 ஆண்டுகள் சுதந்திர மலேசியாவில் ஒரு பிரதமருக்கு எதிராக இப்படிப்பட்ட வழக்கு நடைபெறுவது புதுமைதான்.
ஆனாலும் இந்த வழக்கை மக்கள் நீதிக் கட்சித் தலைவருமான அன்வார் இப்ராகிம் சந்திக்காமல், தனக்கு எதிராக பொன்.வேதமூர்த்தி தொடர்ந்துள்ள வழக்கை, தேர்தல் விதிப்படித்தான் தொடரமுடியுமேத் தவிர, வேறு எந்த வகையிலும் தனக்கு எதிராக வழக்கு தொடர்வதை அரசியல் சாசன விதி 118 தடுக்கிறது என்றுகூறி, சம்பந்தப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி மாத பிற்குதியில் நடைபெறும் என்று நீதிபதி Alice Loke அறிவித்துள்ளதாக பொன்.வேதமூர்த்தியின் சட்ட ஆலோசகரும் இந்த வழக்கில் அவருக்காக அணிவகுப்பவருமான கார்த்திக் சண்முகம் தெரிவித்தார்.
பிரதமர் அன்வார் இப்ராகிம் முன்வைத்துள்ள சட்ட விலக்குக் கோரிக்கை குறித்து, பொன்.வேதமூர்த்தி, தன்னுடைய தரப்பு வாதத்தை பிரமாண பத்திரமாக நவம்பர் 30-ஆம் நாளுக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அதனை அடுத்து அன்வார் டிசம்பர் 19-ஆம் தேதிக்குள் பதில் அளிக்கலாம் என்றும் நேற்றைய இணையவழி விசாரணையின்போது நீதிபதி உறுதி செய்துள்ளதாக கார்த்திக் சண்முகம் மேலும் தெரிவித்தார்.
வழக்கறிஞர்கள் நிக்கோலஸ் யாப், ரஞ்சித் சிங் இருவரும் அன்வாருக்காக வழக்காடும் நிலையில், சட்டத் துறைத் தலைவர்(அட்டர்னி ஜெனரல்) அலுவலகத்தின் சார்பில் கூட்டரசு வழக்கறிஞர் சலாகுதீன் அலி முன்னிலையானார்.
2018இல் அரச மன்னிப்பு பெற்ற அன்வார், குற்றவியல் வழக்கில் தண்டிக்கப்பட்ட தனிநபர்கள் மீது விதிக்கப்பட்ட ஐந்து ஆண்டு அரசியலமைப்புத் தகுதி நீக்கத்திலிருந்து விலக்கு அளிக்கப்படவில்லை என்று நீதித்துறை அறிவிக்க வேண்டும் என்றும் 2022 நவம்பர் 19இல் தம்புன் எம்.பி.யாக அன்வார் தேர்ந்தெடுக்கப்பட்டதும் ஐந்து நாட்களுக்குப் பிறகு அவர் பிரதமராக நியமிக்கப்பட்டதும் செல்லாது என்றும் அறிவிக்குமாறு முன்னாள் அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 14-இல் இந்த வழக்கைத் தொடர்ந்தார்.
ஆனால், பிரதமர் அன்வாரோ, தனக்கெதிராக இப்படிப்பட்ட வழக்கைத் தொடர முடியாதென்றும் நியாயமான காரணம் இல்லையென்றும் அற்பமான, எரிச்சலூட்டுகின்ற, நீதிமன்ற நடைமுறையை தவறாகப் பயன்படுத்தும் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
அன்வார் மீதான குற்றச்சாட்டு மற்றும் குற்றவியல் தண்டனை காரணமாக, கூட்டாட்சி அரசியலமைப்பின் பிரிவு 48(1)(e)இன்படி, மக்களவை உறுப்பினராக பணியாற்றுவதற்கு அன்வார் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருந்ததாக அவர் வாதிடுகிறார்.
2018 மே 16அன்று, 15வது மாமன்னர், மாட்சிமைக்குரிய சுல்தான் முகமது V, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஓரினச்சேர்க்கை குற்றச்சாட்டுகள் தொடர்பான மூன்று வழக்குகளுக்கான தண்டனையில் இருந்து, அன்வாருக்கு பொது மன்னிப்பு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


