
-நக்கீரன்
தப்பா, டிச.07:
நன்றோ, தீதோ எதுவாயினும் ஒரு சிறுபான்மைச் சமூகத்தின் தாக்கத்தை இன்னொரு சிறுபான்மை சமூகம்தான் உணரும் அல்லது பிரதிபலிக்கும் என்பதற்கு மலேசிய நாடாளுமன்றத்தின் தாப்பா பிரதிநிதி டத்தோஸ்ரீ மு.சரவணன், தக்கச் சான்றான்மையுடன் திகழ்கிறார்.
அந்தத் தொகுதிக்கேயுரிய மேன்மை இதுவெனக் கருதுகிறேன்.
பேராக் மாநிலம், (B)பாத்தாங் பாடாங் மாவட்டத்தில் இத்தொகுதி உருவாக்கப்பட்டது(1984) முதல், இந்தத் தொகுதியின் மக்கள் பிரதிநிதிகள் ஏதோவொரு வகையில் மத்திய கூட்டரசாங்கத்தில் இடம்பெற்று வருகின்றனர்; தவிர, இத்தொகுதி, தேசிய முன்னணியின் எஃகுக் கோட்டை என்பதும் இன்றளவும் நிரூபிக்கப்பட்டுள்ளது
அது, டான்ஸ்ரீ எம்.ஜி.பண்டிதன் காலத்தில் தொடங்கி, டான்ஸ்ரீ க.குமரன், டான்ஸ்ரீ சு.வீரசிங்கம் காலத்தில் தொடர்ந்து, தற்பொழுது டத்தோஸ்ரீ மு. சரவணன் காலத்தில் தொடர்கிறது. தாப்பா தொகுதியின் நாயகன் என்னுமளவிற்கு நான்காவது தடவையாக அங்கு மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சரவணன், இந்த ஆட்சியில் இடம்பெற முடியாமல் இருக்கிறார்; காரணம், அவர் சார்ந்துள்ள தேசிய முன்னணி என்னும் அரசியல் கூட்டணி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெறாததால், தன் பரம எதிரி நம்பிக்கைக் கூட்டனியுடன் ஒண்டுக் குடித்தனம் நடத்துகிறது. இதன் விளைவாக, அவரை எதிர்த்து மண்டியிட்டவர் அரசாங்கத்தில் இடம் பெற்றிருக்கிறார்.

ஜனநாயக அரசியலில் இடம்பெறும் கோணங்கித்தனங்களில் இதுவும் ஒன்று; மொத்தத்தில் வென்றாலும் தோற்றாலும் தாப்பாவின் மணம், புத்ராஜெயா குழம்பில் கமழும். இவையெல்லாம் ஒருபுறமிருக்க.. .,
தலை சரியில்லை என்றால், வாலானது, தலைகால் புரியாமல் சுழன்றாடும் என்பதற்கு வங்கதேசத்தின் இன்றைய இடைக்கால தலைமையே தக்க சான்றாகும்.
உலக வரைபடத்தில் இடம்பெற்றுள்ள நாடுகளில் வங்கதேசத்திற்கென தனித்த மாண்பும், மரியாதையும் உண்டு. 1947 ஆகஸ்ட் 15-இல் இந்தியா விடுதலை அடைந்தபொழுது, அதற்கு முதல் நாள், இசுலாமியர்கள் அதிகமாக வாழும் பாகிஸ்தான் இந்தியாவில் இருந்து பிரிக்கப்பட்டு தனி நாடாக பிரகடனம் செய்யப்பட்டது.
அந்தப் பாகிஸ்தான், மேற்கு பாகிஸ்தான் மற்றும் கிழக்கு பாகிஸ்தான் என்னும் இரு மண்டலங்களைக் கொண்டிருந்தது. பெரும்பான்மை மக்களைக் கொண்ட மேற்கு பாகிஸ்தான்வாழ் மக்களின் தாய்மொழியாக உருதும் சமய மொழியாக அரபும் இருந்தன.
கிழக்குப் பாகிஸ்தானில் வாழ்ந்த சிறுபான்மை மக்களின் தாய்மொழியாக வங்கமும் சமய மொழியாக அரபும் தொடர்ந்தன; ஆனாலும், கிழக்குப் பாகிஸ்தான்வாழ் மக்களின் தாய்மொழி புறக்கணிக்கப்பட்டு, அவர்கள்மீது, உருதுமொழி திணிக்கப்பட்டது.
இந்த சிக்கல் முற்றி முற்றி, ஒரு கட்டத்தில் பற்றி எரிந்த நிலையில்தான் டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் பாகிஸ்தானின் இராணுவத்தினரின் குண்டு வீச்சிற்கு 1956 பிப்ரவரி 21-இல் இரையாகினர்.
இந்த நாளைத்தான், உலகத் தாய்மொழி நாளாக ஐநா மன்றத்தின் யுனெஸ்கொ பிரிவு அறிவித்தது.
யுனெஸ்கோவைச் சேர்ந்தவர்கள் கிணற்றுத் தவளையர் போலும்;
இதேப்போன்ற சிக்கலுக்காக, சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னம், அதாவது இந்தி மொழி ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடி, நூற்றுக்கணக்கான தமிழர்கள் துப்பாக்கி ரவைக்கும், தீச்சுவாலைக்கும், சிறைக் கொடுமைக்கும் ஆளாகி மடிந்தனர். அது தெரியாமல், வங்க மொழியினர் நால்வரின் மரணம் பெரிதாகப் பட்டது யுனெஸ்கோவிற்கு.
அதைப்போல, இரவீந்திரநாத தாகூரைவிட, நனிசிறந்த நந்நிலையில் பேரிலக்கியம் படைத்தவர் பாரதியார். ஆனாலும், பாரதிக்கு நோபல் இலக்கிய விருது கிடைக்கவில்லை. வங்க மொழியினர் சொந்த மேளத்தை அதிகமாக தட்டிக் கொள்பவர்கள் போலும்.!
நம் பக்கமும் பலவீனம் இருக்கிறது; பாரதியின் படைப்புகளை ஆங்கில மொழிக்குப் பெயர்க்காததும், இந்தி எதிர்ப்புப் போரில் உயிர்துறந்த சின்னசாமி உள்ளிட்டோரின் தியாக வரலாற்றை வெளிச்சத்திற்கு கொண்டுவராததும் நம் பலவீனமாக இருக்கக்கூடும்.
சரி, இப்பொழுது வங்க தேசத்தில் நிகழும் சண்டித்தனத்திற்கு வருவோம்.

பெரும்பான்மையினர், சிறுபான்மையினரை நசுக்கி ஒடுக்கிய சிக்கலால் ஒரு நாடு புதிதாக உருவானதென்றால், அது வங்க தேசம்தான். அதே வங்க நாட்டில், இப்பொழுது, பெரும்பான்மை முஸ்லிம்கள், சிறுபான்மை இந்துக்களை நசுக்குவதும் ஒடுக்குவதும் என்ன நியாயம்?
இதை, அதே மாணவக் கும்பல் செய்வது, பேரவலம்; பெரும் போக்கிரித்தனம்;
இந்த நிலையில்தான், மஇகா தேசிய துணைத் தலைவரும் தாப்பா எம்பி-யுமான டத்தோஸ்ரீ மு.சரவணன், உலக சிறுபான்மையின நாயகனும் மலேசியப் பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு கடிதம் அனுப்பி உள்ளதாகவும் அதில், வங்காள தேசத்தில் வாழ்கின்ற சிறுபான்மை இந்துக்கள்மீது அனுதினமும் ஏவப்படும் தாக்குதலும் சூரையாடலும் தடுத்து நிறுத்தப்பட நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது.
வளைகுடா மண்டலத்தில், குறிப்பாக கிழக்குக் கரையிலும் பாலஸ்தீனத்திலும் சிறுபான்மை மக்கள் பேரளவில் பாதிக்கப்படுவதற்காக, அன்வார் இருப்பு கொள்ளாமல் தகிக்கிறார். இதில் நியாயமும் இருக்கிறது.
அதேவேளை, சொந்த ஆசியக் கண்டத்தில், இதோக் கூப்பிடும் தூரத்தில், அல்லது ‘ விடிந்தால் திருமணம்-பிடிடா பாக்கை-கட்டுடா தாலியை’ என்னும் அளவிற்கு, அனுமதி யெல்லாம் பெறாமல், இதோப் புறப்பட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு டாக்காவிற்கு சென்றால், பொழுது புலருவதற்குள் அங்கு இவருக்கு முன்பாகவே பூங்கொத்துடன் நிற்கும் அளவுக்கு உற்ற நண்பராகத் திகழும் முகமட் யூனுஸ்தான், அந்த சணல் உற்பத்தி தேசத்தின் இடைக்கால நிருவாகி.
அப்படிப்பட்டவரிடம், ‘சிறுபான்மை இனத்தவரும் மதத்தவருமான இந்துக்களை அடக்கி-ஒடுக்கி-நசுக்க முற்படும் காலாடி இளைஞர்க் கூட்டத்தை கட்டுப்படுத்தக்கூடாதா’ என்று கேட்க அன்வாருக்கு மனமும் இல்லை; நீதிசார் பார்வையும் இல்லை.
இந்த நிலையில்தான், தாப்பா மக்கள் பிரதிநிதியான டத்தோஸ்ரீ மு.சரவணன், டத்தோஸ்ரீ அன்வாருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.
அதில், உலகில் எங்கெங்கெல்லாம் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படுகிறார்களோ அவர்களுக்காகவெல்லாம் குரல் கொடுக்கும் நம் சட்டாம்பிள்ளையான பிரதமர், இமயமலை அடிவாரத்தே உள்ள வங்க நாட்டில் அண்மைக் காலமாக பயந்துபயந்து வாழும் இந்து மக்களுக்காகவும் குரல்கொடுக்கும்படி கேட்டுக் கொண்டிருப்பார் எனத் தெரிகிறது.

நல்ல வேளை, பொன்னையும் பொருளையும் பணத்தாளையும் அபகரிக்கும் அந்தப் போக்கிரிப் பயல்களின் காலாடித்தனத்திற்கு இதுவரை உயிர்ப்பலி எதுவும் நேரவில்லை என்பது சற்று ஆறுதல்!
எது எவ்வாறாக இருந்தாலும், 222 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஏறக்குறைய 600 சட்டமன்ற உறுப்பினர்கள் என 822 மக்கள் பிரதிநிதிகளில் வங்கதேச இந்துக்களுக்காக குரல் கொடுத்துள்ள ஒரேப் பிரதிநிதியாக டத்தோஸ்ரீ மு.சரவணன் திகழ்கிறார்.
நாடாளுமன்ற மேலவையின் 70 உறுப்பினர்களில், பெரும்பாலானோர் அரசத் தரப்புக்கு ‘லாலிபாடி’யராகத்தான் இருப்பர் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.


