
நாட்டில் ஒன்பது மாநிலங்களில் கடும் மழையினால் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையிலும் 2025 கல்வி ஆண்டு எஸ்.பி.எம். தேர்வுக்கான அனைத்து ஏற்பாட்டையும் துரிதமாக மேற்கொண்டு சீரான சூழலை ஏற்படுத்தியுள்ள கல்வி அமைச்சுக்கு, குறிப்பாக அமைச்சர் ஃபட்லினா சீடேக், கல்வித் துறை மேலாண்மை இயக்குநர் டாக்டர் முகமட் அஸாம் அமகட் இருவருக்கும் பாராட்டு தெரிவித்துள்ள ம.இ.கா. தேசிதத் தலைவர் தான்ஸ்ரீ டாக்டர் ச.விக்னேசுவரன், எஸ்பிஎம் மாணவர்களுக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
நேற்றைய கடும் மழையினால் பாதிக்கப்பட்ட 259 மாணவர்களை அடையாளம் கண்டு, உரிய பாதுகாப்பு அளித்து தேவையான ஏற்பாட்டையும் செய்து 4இலட்சத்து 13ஆயிரத்து 372 எஸ்பிஎம் மாணவர்களையும் தேர்வுக்கு அணியப்படுத்திய கல்வி அமைச்சகத்தை எத்துணைப் பாராட்டினாலும் தகும். அரச இடைநிலைப் பள்ளிகள், அரச உதவிபெறும் இடைநிலைப் பள்ளிகள், மாரா இளநிலை அறிவியல் கல்லூரி-MRSM, அரச இராணுவக் கல்லூரி, மாநில சமய இடைநிலைப் பள்ளிகள், அரசப் பதிவுபெற்ற தனியார்ப் பள்ளிகள், சமய இடைநிலைப் பள்ளிகள், தனித் தேர்வர்கள் ஆகிய பிரிவினர் இவ்வாண்டு எஸ்பிஎம் தேர்வைத் தொடங்கியுள்ளனர்.

அலுவல்முறை வெளிநாட்டுப் பயணத்தில் இருந்தாலும் வெள்ள நிலைகுறித்து அடிக்கடி கேட்டறிந்த பிரதமர், பாதுகாப்பு ஏற்பாடு குறித்தும் தேவையான ஆலோசனையை வழங்கி வந்தார்; இதற்கிடையில் எஸ்பிஎம் மாணவர்கள் அமைதியாகவும் ஊக்கத்துடனும் தேர்வை எழுதும்படி நல்லாலோசனையும் வழங்கியிருப்பதற்கு பாராட்டுவதாக ம.இ.கா. கலவிக்கரமான எம்ஐஇடி கல்விவாரியத் தலைவருமான தான்ஸ்ரீ ச.விக்னேசுவரன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, மலேசிய இந்திய மாணவர்களின் கல்வி மறுமலர்ச்சிக்கு துணை நிற்கவும் வழிகாட்டவும் மஇகா அரசியல் பேரியக்கமும் அதன் கல்விக்கரமான எம்ஐஇடி-யும் எப்போதும் துணை நிற்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
2025 கல்வி ஆண்டிற்கான எஸ்.பி.எம். தேர்வை மலாய்ப் பாடத் தேர்வுடன் இன்று செவ்வாய்க்கிழமை நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கியுள்ளனர். இத்தேர்வில் அமரும் அனைத்து மலேசிய மாணவர்களுக்கும் குறிப்பாக இந்திய மாணவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்களின் கல்விப் பயணத்தில் எஸ்பிஎம் என்பது ஒரு முக்கியமான காலகட்டம். இதில் நீங்கள் பெறும் தேர்ச்சிதான் மாணவர்களின் அடுத்தக் கட்ட கல்விப் பயணத்தைத் தீர்மானிக்கிறது என்பதை உணர்ந்து மிகுந்த நம்பிக்கையுடனும் நன்முறையிலும் தேர்வை எழுதி, வாகை சூடும்படியும் விக்னேசுவரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்திய மாணவர்கள் கல்வியில் சிறந்தத் தேர்ச்சி பெற்று அடுத்தக் கட்டத்திற்கு முன்னேறுவதன்மூலம் தத்தம் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் படித்த பள்ளிக்கும் மட்டும் பெருமை சேர்க்காமல் நம் இந்திய சமுதாயத்திற்கும் பெருமையும் கௌரவமும் சேர்க்கின்றனர்.

தமிழ் மொழி இந்த நாட்டில் பள்ளிகளிலும் உயர்நிலைக் கல்விக் கழகங்களிலும் நிலைத்திருப்பதற்கு ஒரு காரணம் தமிழ்ப் பள்ளிகள் என்றால், மற்றொரு காரணம் இடைநிலைக் கல்வி எஸ்பிஎம் தேர்வுகளில் தமிழ் மொழிப் பாடத்தையும் தமிழ் இலக்கியப் பாடத்தையும் தேர்வுப் பாடமாக எடுக்கும் மாணவர்களாவர்.
“எனவே, எஸ்பிஎம் தேர்வுகளில் தமிழ் மொழி, தமிழ் இலக்கியப் பாடங்களை எடுக்கும் இந்திய மாணவர்களும் அந்தந்தப் பாடங்களில் சிறந்த தேர்ச்சி பெற வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்; எஸ்பிஎம் தேர்வில் அமரும் இந்திய மாணவர்கள் யாரும் தேர்வு முடிவு குறித்த கவலையோ, அடுத்து தங்களின் உயர்க்கல்வியை எவ்வாறு தொடர்வது என்ற அச்சமோ இன்றி துணிவுடன் தேர்வுகளை எழுதுங்கள்”.

இத்தனை ஆண்டுகாலமாக இந்திய சமூகத்தின் கல்வி மேம்பாட்டுக்குத் திறம்படப் பணியாற்றிவரும் மஇகா, எதிர்காலத்திலும் உங்களுக்கானப் பாதுகாவலனாக, கல்வி அரணாகத் தொடர்ந்து செயல்படும் என்றும் விக்னேசுவரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மஇகா மூலம் தோற்றுவிக்கப்பட்ட எம்ஐஇடி கல்வி அறவாரியம் வசதி குறைந்த இந்திய மாணவர்களுக்கு கரங்கொடுத்து உதவக் காத்திருக்கிறது. அதேவேளையில் இந்திய மாணவர்கள் தங்களின் தகுதிக்கேற்ப விருப்பமானத் துறைகளைத் தேர்ந்தெடுத்துப் பயில, நமது எய்ம்ஸ்ட் பல்கலைக் கழகமும் தன் கதவுகளைத் திறந்து வைத்துக் காத்திருக்கிறது அதன் வேந்தருமான அவர் ஊக்கம் அளித்துள்ளார்.
எஸ்பிஎம் தேர்வுகளை அடுத்து ‘திவெட்’ என்னும் தொழிற்பயிற்சி கல்வியைத் தொடர விரும்புபவர்களுக்கும் பிரம்மாண்டமான அளவில் சிரம்பான், டேஃப் கல்லூரி வளாகம் புதுப்பிக்கப்பட்டு தயாராகிக் கொண்டிருக்கிறது.

எனவே, இந்திய மாணவர்கள் அனைவருக்கும் கல்வித் துறையில் எல்லா வகையிலும் வழிகாட்ட மஇகாவும் எம்ஐஇடியும் எப்போதும் தயாராக இருக்கின்றன. அந்த எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் இதயங்களில் தேக்கி, துணிந்து எஸ்பிஎம் தேர்வை எழுதும்படி டான்ஸ்ரீ விக்னேசுவரன் இந்திய மாணவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துள்ளார்.


