
47-ஆவது ஆசியான் உச்சிநிலை மாநாட்டின்போது பிரதமர் அன்வார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் அக்டோபர் 26-ஆம் நாள் செய்துகொண்ட ஏஆர்டி ஒப்பந்தம், மலேசிய அரசியல் சாசனத்திற்கு முரணானது என்று ஹிண்ட்ராஃப் தலைவர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இது, நாட்டின் இறையாண்மைக்கும் அரசியல் சாசனத்திற்கும் மாறானது.
நம் நாட்டின் கண்ணியத்திற்கு பிரதமர் மாசு கற்பித்துள்ளார். இதன் தொடர்பில் அவருக்கு ஆதரவு வழங்கிய கட்சிகள், குறிப்பாக அம்னோ, சரவாக் அரசியல் கூட்டணியான ஜிபிஎஸ், சபா அரசியல் கூட்டணியான ஜி.ஆர்.எஸ் ஆகியவை நாட்டின் கண்ணியத்தை சமரசம் செய்யும் ஒற்றுமை அரசாங்கத்தின் பிரதமரை தொடர்ந்து ஆதரிப்பார்களா என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்.ஏ.பி. தலைவருமான அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசியல் சாசனம் பிரிவு 69 இன்படி, கூட்டமைப்புக்கு மட்டுமே எந்த நாட்டுடனும் எந்த ஒப்பந்தத்தையும் செய்யும் அதிகாரம் உள்ளது; அத்தகையக் கூட்டமைப்பு, மாமன்னர், ஆட்சியாளர் மன்றம், பிரதமர், நாடாளுமன்றம் ஆகிய நான்கு மையங்களை உள்ளடக்கியது; எனவே, பிரதமர் என்பவர் கூட்டமைப்பு கிடையாது; தவிர, இவர் மட்டும் தனித்து செயல்படவும் முடியாது.
பிரதமர், டிரம்புடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் பொது வெளியில் வெளியிடப்பட்டதன்மூலம், இந்த ஒப்பந்தம் தேச இறையாண்மை யுடன் சமரசம் செய்துகொள்வதாகத் தெரிகிறது. தவிர, ஏராளமான அச்சத்தையும் எழுப்புகிறது.
1-மலேசியாவின் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படுத்துகிறது;
2-மாட்சிமைக்குரிய மாமன்னர் மற்றும் மலாய் ஆட்சியாளர்களின் கண்ணியத்தையும் அதிகாரத்தையும் குறைத்து மதிப்பிடுகிறது;
3-அரசியல் சாசன விதி 153-டன் முரண்படுகிறது
4-கூட்டரசின் ‘அதிகாரபடியான சமயம் இஸ்லாம்’ என்பதுடன் வேறுபடுகிறது;
5-மலேசியாவின் தேசிய பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் வெளியுறவுக் கொள்கையை தீர்மானிக்கும் திறனைக் கட்டுப்படுத்துகிறது;
6-எல்லாவற்றுக்கும் மேலாக, அமெரிக்கா, தனது தேசிய பாதுகாப்புக் கொள்கைகளை மலேசியாவிற்குள் திணிப்பதற்கு இந்த ஒப்பந்தம் உதவுகிறது.

பிரதமர், கட்டாயமாக மேற்கொள்ள வேண்டிய் அரசியலமைப்பு நடைமுறையைப் புறக்கணித்து, அமெரிக்காவுடன் ART ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்:
1.அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 38 இன்படி, மலாய் ஆட்சியாளர் மன்றத்தின் ஆலோசனை அல்லது ஒப்புதல் இன்றி மேற்கொள்ளப்பட்ட இந்த ART ஒப்பந்தம், நாட்டின் இறையாண்மை, ஆட்சியாளர்களின் கண்ணியம், நாட்டின் முக்கியமான தேசிய கொள்கைகள் தொடர்பான பிரச்சினைகளை உள்ளடக்கி இருக்கிறது;
2-அரசியல் சாசனப் பிரிவுகள் 39, 40 மற்றும் 66 இன்படி மாட்சிமைக்குரிய மாமன்னரின் ஒப்புதல் இன்றி இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது;
3-அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 66இன்படி, நாடாளுமன்ற ஒப்புதலையும் பெற வேண்டும் என்பது, ஓர் அடிப்படை அம்சமாகும்.

இந்த விவகாரம் குறித்து பாஸ் தலைவர்களில் ஒருவரான தக்கியுடின், கடந்த நவம்பர் 4ஆம் நாள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது, டிரம்புடனான ஒப்பந்தம் “அரசியலமைப்பிற்கு முரணாக இல்லை” என்று பிரதமர் பதிலளித்தார்.
இதன்மூலம், பிரதமர் திட்டமிட்டே நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தி குழப்பமும் விளைத்துள்ளார். மேலும், அரசியல் சாசனத்தையும் அன்வார் மதிக்கவில்லை; மக்களின் குரல் எதிரொலிக்கும் ஜனநாயகக் கட்டமைப்பான நாடாளுமன்றத்தையும் அவர் மதிக்கவில்லை என்று சட்ட வல்லுநரும் மேநாள் அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையும் தெரிவித்துள்ளார்.


