
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரதமர் அன்வார் செய்துகொண்ட வர்த்தக ஒப்பந்தம் அரசியல் சாசனத்திற்கு ஏற்ப இல்லையென்பதாலும் மலேசியாவின் இறையாண்மைக்கு பாதகமாக இருப்பதாலும் இந்த ஒப்பந்தம் செல்லாது என்றும் இதன் சட்டப்படியான தன்மை குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் சட்ட வல்லுநர் பொன்.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதன் தொடர்பில் ஹிண்ட்ராஃப் தலைவருமான பொன்.வேதமூர்த்தி தலைமையில் நேற்று டிசம்பர் 11, பிற்பகலில் தலைநகரில் நடைபெற்ற செய்தியாளர்க் கூட்டத்தில் எதிரணி எம்பி ரோசோல் வாஹித்துடன் ‘புத்ரா’ கட்சித் தலைவர் இப்ராகிம் அலியும் கலந்து கொண்டனர்.
மலேசியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம்(ART) குறித்து பிரதமர் நாட்டுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என 14 நாள் கெடு விதித்து மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி சட்ட ஆலோசகர் கார்த்திக் ஷான் வழக்கறிஞர் நிறுவனத்தின்மூலம் அறிக்கை அனுப்பப் பட்டுள்ளதாகத் தெரிவித்த பெர்சத்து கட்சியைச் சேர்ந்தவருமான ரோசோல் வாஹிட், அவ்வாறு செய்யத தவறினால் பிரதமர்மீதும் அரசின்மீதும் வழக்குத் தொடரப் படும் எனவும் தெரிவித்தார்;
உலு திரெங்கானு மக்கள் பிரதிநிதியுமான அவர், செய்தியாளர்களிடம் மேலும் பேசியபோது, “ART ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பு பிரதமர், அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றாரா? அட்டர்னி ஜெனரலின் ஆலோசனையைக் கேட்டாரா? மாட்சிமைக்குரிய மாமன்னர் மற்றும் ஆட்சியாளர் மன்றத்தின் பரிந்துரையை நாடினாரா? குறைந்தபட்சம் நாடாளுமன்றத்திலாவது இது குறித்து பிரதமர் விவாதித்தரா” என்றெல்லாம் கேள்விக் கணைகளைத் தொடுத்தார்.

மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தலைவருமான பொன்.வேதமூர்த்தி செய்தியாளர்களிடம் இந்தப் பிரச்சினை குறித்து மேலும் விளக்கம் அளித்தபோது, கடந்த அக்டோபரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகையின்போது தன்னிச்சையாக வர்த்தக ஒப்பந்தம் செய்துகொண்ட அன்வார், கூட்டரசு அரசியல் சாசனம், 69-ஆவது பிரிவிற்கு புறம்பாக செயல்பட்டுள்ளார் என்றும் நாட்டின் இறையாண்மையைக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளார் என்றும்கூறினார்.
வெளிநாட்டுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யும்பொழுது தன்னிச்சையாக கையெழுத்திடும் அதிகாரத்தை பிரதமருக்கோ அல்லது எந்த தனிநபருக்கோ கூட்டரசு அரசியல் சாசனம், 69-ஆவது பிரிவு அளிக்கவில்லை. மாறாக. மாமன்னர், ஆட்சியாளர் மன்றம், நாடாளுமன்றம், நாட்டின் நிருவாகி(பிரதமர்) ஆகிய நான்கு தரப்பினரும் இணைந்தே இத்தகைய வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதை அரசியல் சாசனம் தெளிவாக வரையறுத்துள்ளது; எனவே, ART ஒப்பந்தத்தில் பிரதமர் தன்னிச்சையாக கையெழுத்திட முடியாது என்பதை தெளிவுபடுத்திய முன்னாள் அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி, இதுகுறித்து பிரதமர் அன்வார் நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.


