Thursday, April 2, 2026

டுரியான் தூங்கால் சம்பவம்: வெளிப்படையான புலன் விசாரணை வேண்டும்!

மலாக்கா, டுரியான் துங்கால் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் 24-ஆம் நாள்,
மூன்று பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட மூவரும் போலீசாரைத் தாக்க முற்பட்டதால், தங்களின் பாதுகாப்பிற்காக அவர்களைத் திருப்பி சுட்டதாக மலாக்கா போலிசார் தெரிவித்த நிலையில், சம்பவத்தின்போது, இறந்த மூவரில் ஒருவரின் குடும்ப உறுப்பினர் பதிவு செய்ததாக சொல்லப்படும் குரல் பதிவு வெளியிடப்பட்டது.

அதன் அடிப்படையில், இறந்த மூவரும் போலீசாரை தாக்கவில்லை என்பதும் மாறாக சம்பந்தப்பட்ட மூவரும் மண்டியிட வைக்கப்பட்டு, மரண தண்டனை நிறைவேற்றப்படும் பாணியில் சுடப்பட்ட விவரம் உலகிற்கு தெரிய வந்தது.

இந்த நிலையில், குரல் பதிவு செய்த பெண்ணுக்கு குற்றப் பின்னணி இருப்பதாக போலீசார் குற்றம் சாட்டினார், இது கொலைச் சம்பவத்தின் கவனத்தைத் திசைதிருப்பவும், முக்கிய சாட்சியை இழிவுபடுத்தவும் வேண்டுமென்றே செய்யப்பட்ட முயற்சியாகும். அதேவேளை, சாதாரண குடிமக்களுக்கு நீதியை மறுக்கும் ஒரு சூழலும் நிலவுகிறது.

இந்த விவகாரம் மேலும் சிக்கலான நிலையில், பிரதமர் அன்வார் இப்ராகிம் காவல்துறையினரை பாதுகாக்கும் விதமாக, “வெளிப்படையான விசாரணை நடைபெறும்” என்று உறுதியளித்தார்.

சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்படாமலோ அல்லது இடைநீக்கம் செய்யப்படாமலோ இருக்கும்போது வெளிப்படைத்தன்மை என்பது சாத்தியமற்றது, மேலும், அவர்கள் ஆதாரங்களை சிதைக்கவும் அதிக வாய்ப்பு இருக்கிறது.

பொதுமக்களின் தொடர்ச்சியான அழுத்தத்திற்குப் பிறகுதான், இந்த வழக்கை கொலை என வகைப்படுத்தி புலன் விசாரணை மேற்கொள்ளுமாறு காவல்துறைக்கு அட்டர்னி ஜெனரல் அறிவுறுத்தினார்.

இப்போதும்கூட, சம்பந்தப்பட்ட அதிகாரி- கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதைப்போன்ற குற்ற நடவடிக்கையில் பொதுமக்கள் சம்பந்தப் பட்டிருந்தால், அவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டிருப்பார்கள்.

ஏன் இன்னும் வெளிப்படையான விசாரணை குறித்த அறிவிப்பு இல்லை? குற்றம் புரிந்த அதிகாரிகள் தங்கள் சொந்த
புலனாய்வு அதிகாரிகளால் நியாயமாக விசாரிக்கப்படுவார்கள் என்று எப்படி நம்ப முடியும்?.

புக்கிட் அமானுக்கு வெளியே பாதிக்கப் பட்டவர்களின் குடும்பத்தினருடன் நீதி கேட்டு கே. குலசேகரன் நின்று கொண்டிருந்தார். ஆனால், சட்ட அமைச்சர் எங்கே இருந்தார்? அவரின் பொறுப்பு துணை அமைச்சர் மீது ஏன் சுமத்தப்பட்டது?

மலேசியாவில் எல்லாமும் சாத்தியம் என்பதற்கு ஏற்ப இங்கு உண்மைக்குப் பதிலாகப் பொய்மை பரப்பப்படுகின்றது. தவறான தகவல் ஆயுதமாக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்கள் அவமானப் படுத்தப்படுகின்றனர்.

இதற்கிடையில் அரசியல் தலைவர்களோ, காவல்துறையினரை பொறுப்பேற்க வைப்பதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்ட-வர்களை சமாதானப்படுத்துகின்றனர்.

மடாணி அரசாங்கம், நிர்வாக சீர்திருத்தத்-தில் உண்மையில் அக்கறை கொண்டு இருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை இடைநீக்கம் செய்துவிட்டு மற்ற சந்தேக நபர்களைப் போல இவர்களையும் கைது செய்து காவலில் வைத்து, புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

அதுதான் உண்மையில் சுதந்திரமான விசாரணை என்று பொன். வேதமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை