தெங்கு ஸப்ரூல் அசீசைச் சுற்றி அரசியல் புயல் மையம்!

-நக்கீரன்
கோலாலம்பூர், டிச.15:
நாட்டின் புதிய நிருவாக நகரம் புத்ராஜெயாவிலும் சிலாங்கூர் மாநிலத்தின் புதிய அரச நகரம் ஷா ஆலமிலும் அரசியல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஒரே நேரத்தில் உருவாகி உள்ளது.
இது அரசியல் புயலாக மாறுமா அல்லது சூறாவளியாக சுறுங்குமா அல்லது வலுவிழந்து அம்னோ கட்டடத்திற்குள்ளேயே முடங்கி விடுமா அல்லது பிகேஆரில் சங்கமிக்குமா என்பதை அறிய இரண்டொரு நாட்கள் ஆகுமெனத் தெரிகிறது.
இதற்கெல்லாம மூலக் காரணம், வங்கித் துறையில் இருந்து, திடீரென்று மத்தியக் கூட்டரசின் நிதி அமைச்சராக மாறிய தெங்கு ஸப்ரூல் அசீஸ்தான்.
நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு பெறாமல், கொரோனாவை காரணம் காட்டியும் அவசர காலச் சட்டத்தை துணைகொண்டும் பிரதமர் பதவியில் தொடர்ந்த டான்ஸ்ரீ முகைதீன்தான், தெங்கு ஸப்ரூல் அசீசை நாட்டிற்கு அடையாளப் படுத்தினார்.

2020 மார்ச் மாத தொடக்கத்தில் நாட்டின் 8-ஆவது பிரதமராக பொறுப்பேற்ற முகைதீன், பத்து நாட்கள் கழித்து, தட்டுத்தடுமாறி 70–க்கும் மேற்பட்டோரைக் கொண்டு முரட்டு அமைச்சரவையை அறிவித்தார்.
அதில், நிதி அமைச்சராகத் திணிக்கப்பட்ட மேநாள் வங்கியாளர்தான் இந்த தெங்கு ஸப்ரூல் அசீஸ்.
முகைதீனுக்குப்பின் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி தலைமையிலும் தெங்கு ஸப்ரூல் அசீஸ் அமைச்சராகத் தொடர்ந்தார்.
இதற்கிடையில், ஜோகூர் சட்டமன்ற தேர்தலில் அம்னோ பெற்ற அபார வெற்றியைத் தொடர்ந்து, இஸ்மாயில் பிரதமர் பதவியைத் துறந்து பொதுத் தேர்தலுக்கு வழிவிடும்படி அம்னோ தரப்பில் நெருக்கடி கொடுக்கப்பட்டது; குறிப்பாக அதன் தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடி ஏற்படுத்திய கடுமையான தொடர் அழுத்தத்தால், இஸ்மாயில் பதவிவிலகி, பொதுத் தேர்தலுக்கு வழிவிட்டார்.
இடையில் அம்னோவில் இணைந்த தெங்கு ஸப்ரூல் அசீஸ், நவம்பர் 19, 2022 பொதுத் தேர்தலின்போது கோல சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார்.
ஆனாலும் 998 வாக்குகள் வேறுபாட்டில் இப்போதைய சுகாதார அமைச்சரும் அமானாக் கட்சி வேட்பாளருமான டாக்டர் சுல்கிப்ளி அகமட்டிடம் வெற்றியைப் பறிகொடுத்தார்.
இருந்தபோதும், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் தெங்கு ஸப்ரூல் அமைச்சராக நீட்டிக்கப்பட்டார்; அதற்கேற்ப செனட்டராகவும் 2-ஆவது தவணைக்கு அவர் நீட்டிக்கபட்டார்.
மொத்தத்தில், கோல சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் வென்றவர், தோற்றவர் என இருவருமே கேபினெட் அமைச்சராக இருப்பது, அரசியல் விந்தைதான்.
இந்த நிலையில்தான், அவர் அம்னோவில் இருந்து விலகி, மக்கள் நீதிக் கட்சி(பிகே ஆர்)யில் இணைய இருப்பதாக வெளியான ஊகத் தகவல் கடந்த சில நாட்களாக அரசியல் வட்டத்தை ஆக்கிரமித்துள்ளது.

நெருப்பின்றி புகை வராதென்பதால், இதில் ஏதேனும் அடிப்படை உண்மை இருக்குமோ என்றும் கருத இடம் இருக்கிறது.
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட தெங்கு ஸப்ருல் அசீஸே, நேரடியாக அறிக்கைவிட்டு, தன்னுடைய அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு குறித்து தெரிவித்திருக்கலாம். ஆனால், அவர் மௌனம் காத்து வருகிறார்; இந்தத் தகவல் எப்படி எதிரொலிக்கிறது என்று நோட்டமிடும் நோக்கில் தெங்கு ஸப்ருல் அசிஸ் கள்ளமௌனம் காக்கிறாரா என்றும் தெரியவில்லை.
இதற்கிடையில், பிகேஆர் கட்சியில் சேருவதற்கான விண்ணப்பப்படிவம் எதனையும் கட்சிபெறவில்லை என்று அதன் பொதுச் செயலாளர் ஃபௌசியா சாலே அறிவித்துள்ளார். ஆனால், ஃபௌசியா சாலே அறிக்கையின் நம்பகத்தன்மை குறித்த ஐயம் மலையளவிற்கு எழுந்துள்ளது. காரணம், துணைப் பிரதமரும் அம்னோ தலைவருமான ஜாஹிட் ஹமிடியின் அறிக்கைதான்.
கட்சிக்கு விசுவாசமானவர்கள்தான் தேவையேத் தவிர, தவளைப்போல தாவும் போக்கினரும் தாமரையிலை தண்ணீரைப்போல ஒட்டாத மனதுடன் இருப்பவர்கள், எவ்வளவுதான் அறிவாளியாக இருந்தாலும் அவர்கள் தேவையில்லை என்பதைப் போல மொறுமொறுவன அறிக்கை விட்டுள்ளார்.
ஜாஹிட் ஹமிடி யாரையோ குறிவைத்து, ஆனால் ஜாடையாகக் குறிப்பிட்டிருப்பதையும் தற்போதைய அரசியல் சூழலையும் ஒப்பிட்டு நோக்கினால், அது தெங்கு ஸப்ருல் அசீசை மனதில் வைத்துதான் என தெளிவாகத் தெரிகிறது.
தவிர, சிலாங்கூர் மந்திரி பெசாரை மாற்ற இருப்பதாகவும் அந்தப் பொறுப்புக்கு தெங்கு ஸப்ருல் அசீஸ் நியமிக்கப்பட இருப்பதாகவும் வெளியான இன்னோர் ஊடகத் தகவலும் ஊகச் செய்திதானா அல்லது உண்மைதானா என்றும் நம்மை தடுமாற வைக்கிறது.
அதற்கான காரணம், அது வதந்தி என்றால் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, அமைதியாகக் கடந்து போயிருப்பார். மாறாக, அவரோ கொதித்தெழுந்து தாவிக் குதிக்கிறார்.
இந்தத் தவணை முழுவதும் தான் மந்திரி பெசாராக கட்டாயம் தொடர்வேன் என்று ஓங்கி முழங்கியுள்ளார். எந்தச் சூழலிலும் யாருக்காகவும் அவர் நகரமாட்டார் என்பதைப் போலத்தான் தெரிகிறது அமிருடினின் பிரதிபலிப்பு.
சிலாங்கூர் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு மாநில சுல்தான் மாட்சிமைசால் சுல்தான் ஷராஃபுடினின் ஒப்புதலுடன் தீட்டப்பட்டுள்ள திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமென்றால் தான்தான் மந்திரி பெசாராக நீடிக்க வேண்டும் என்றுகூறி, அமிருடின் ஷாரி அடித்தாடுகிறார்.

இந்த நிலையில், அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சாலே வெளியிட்டுள்ள அறிக்கையோ எரியும் நெருப்பில் எண்ணய்யை கொப்பறையுடன் சாய்த்து ஊற்றுவதைப் போல இருக்கிறது.
மெர்லிமாவ் சட்டமன்ற உறுப்பினருமான அக்மால் சாலே, தன் கட்சித் தலைவர் ஜாஹிட் ஹாமிடி, “ஒற்றுமை அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள கட்சிகள், ஒற்றுமைக் கூடணியைச் சேர்ந்த இன்னொரு கட்சியின் தலைவர்களையோ உறுப்பினர்களையோ ஏற்றுக் கொள்வது ஏற்புடையதல்ல” என்று அறிக்கைவிட்டதன் தாக்கம் தணிவதற்குள் வெடித்திருக்கிறார்.
டாக்டர் அக்மால் சாலே வெளியிட்டுள்ள அறிக்கை ஓர் எச்சரிக்கையைப் போலவே இருக்கிறது.
ஒரு குடும்பமாக இருக்கும் ஒற்றுமை அரசாங்கக் கூட்டணிக்குள் கட்சி தாவல் நிகழ்வதும் இதை இன்னோர் கட்சி ஏற்பதும் ஒற்றுமைக் கூட்டணியை மட்டுமல்ல; ஒற்றுமை அரசாங்கத்தையும் பாதிக்கும் என அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டிருப்பது, ஒருவகையில் பிகேஆர் தலைவரும் பிரதமருமான அன்வாருக்கு டாக்டர் அக்மால் சாலே நேரில்விட்ட எச்சரிக்கையாகவேத் தெரிகிறது.
ஒருவகையில் பார்த்தால், தன்னால் பேசமுடியாததை தன் இளைஞர் பிரிவுத் தலைவரைவிட்டு ஜாஹிட் ஹமிடி பேச வைத்திருக்கிறாரோ என்று கருதவும் இடம் இருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில், டிசம்பர் 15, காலையில் நடைபெற்ற பிகேஆர் சிறப்புக் கூட்டத்திற்குப்பின் பிற்பகலில் செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், தெங்கு ஸப்ருல் அசீஸ், அம்னோவிலிருந்து விலகி பிகேஆரில் சேருவதற்கான பூர்வாங்க பேச்சு நடைபெற்றது உண்மைதான் என்று தெரிவித்துள்ளார்.
இதிகுறித்த மேல் விவரத்திற்கு, நீங்கள் முதலீட்டு, வர்த்தக, தொழில்துறை அமைச்சரைத்தான் கேட்க வேண்டும் என்று செய்தியாளர்களிடம் கூறிய அன்வார் அந்தமட்டில் நழுவி உள்ளார்.
மொத்தத்தில் பூனைக் குட்டி, வெளியில் வந்துவிட்டது.
தான் அம்னோவைவிட்டு விலகுவதைப் பற்றியோ பிகேஆரில் இணைவதைப் பற்றியோ தெங்கு ஸப்ருள் தனக்குத் தெரிவிக்கவில்லை துணைப் பிரதமரும் அம்னோ தலைவருமான ஜாஹிட் ஹமிடி பளிச்சென கூறியுள்ள நிலையில், பிரதமரும் பிகேஆர் தலைவருமான அன்வார் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பது, இவ்விரு கட்சிகளுக்குள் ஏதோவொன்று நடப்பதை நாட்டுக்கு சொல்லாமல் சொல்கிறது.
இத்தகைய குழப்பமும் முறுகல் நிலையும் புத்ராஜெயாவையும் ஷா ஆலமையும் சூழ்ந்திருக்க, அம்னோ பொதுச்செயலர்
அஷ்ரஃப் வஜ்டி, சுடச்சுட வெளியிட்டுள்ள மொறுமொறு அறிக்கை, நிலைமை இன்னும் கொதிநிலைக்குச் சென்றுவிட்டதைக் காட்டுகிறது.
ஒற்றுமை அரசாங்க கட்சிகளுக்குள் கட்சிதாவலை அனுமதிப்பது, அரசியல் அறமல்ல என்று கூறியிருக்கிறார்.
கட்சித் தாவலை ஊக்குவித்ததாலும் ஆதரித்ததாலும் கூட்டணிகள் பிரிந்ததும் ஆட்சிகள் கலைந்ததும் இதற்குமுன் நடைபெற்றுள்ளதை அனைவரும் கருத்தில்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கைக் குண்டை வீசியிருக்கிறார்.

ஒற்றுமை அரசாங்கத்தில் நம்பிக்கைக் கூட்டணியும் தேசிய முன்னணியும் அச்சாணியாக இருக்கின்றன.
நம்பிக்கைக் கூட்டணியின் போலீஸ்காரன் அம்னோ; தேசிய முன்னணியின் பெரிய அண்ணன் அம்னோ; இவ்விரு கட்சிகளுக்கு இடையே விரிசல் என்ற நிலை எழுவதற்குக் காரணமாகியுள்ள தெங்கு ஸப்ருள் அசீஸ் வாயைத் திறந்தால்தான் முழு உண்மை மலேசிய அரசியல் தளத்திற்கும் பொதுமக்களுக்கும் தெரியவரும்.
அந்தவேளை எந்தவேளை?


