
உலக மனிதர்கள் அனைவரிடத்திலும், அன்பையும், நல்லிணக்கத்தையும் போதிக்கப் பிறந்து வந்த இயேசுபிரானின் மகத்தான பிறப்பை, கிறிஸ்துமஸ் தினமாகக் கொண்டாடி மகிழும் மலேசியக் கிறிஸ்துவ சமயத்தினர் அனைவருக்கும் குறிப்பாக, இந்திய கிறிஸ்துவ சமூகத்திற்கு எனது இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று
மஇகா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ டத்தோஸ்ரீ
ச.விக்னேஸ்வரன் தன்னுடைய வாழ்த்து செய்திகள் குறிப்பிட்டுள்ளார்.
நம்மைக் கடந்து போகும் 2025-ஆம் ஆண்டில் உலகின் பல நாடுகளில் இன, மத ரீதியான மோதல்களும், கொலைகளும் நடந்திருப்பதைக் காணும்போது இயேசுபிரானின் அன்பு சார்ந்த போதனைகள் இன்னும் நமக்குத் தேவை என்பதை நாம் உணர்கிறோம்.

மற்ற மதத்தினரின் போற்றுதலுக்கு உரிய அவரின் போதனைகளை நாமும் இயன்றவரை பின்பற்றி, பல இனம் கொண்ட நம் மலேசிய சமுதாயத்தில் ஒருவருக்கொருவர் மரியாதையும் அன்பும் செலுத்துவோம்.
மஇகாவைப் பொறுத்தவரையில் அரசியல் ரீதியாக நாம் அனைத்து இன, மத சகோதரர்களையும் காலங்காலமாக அரவணைத்து வந்திருக்கிறோம். பெரும்பான்மை இந்துக்களைக் கொண்ட நம் மஇகா கட்சியில் பல தருணங்களில் இந்தியக் கிறிஸ்துவ சமூகத்தினருக்கு அரசாங்கத்திலும் கட்சியிலும் வாய்ப்புகளை பாரபட்சமின்றி வழங்கியிருக்கிறோம்.
கடந்த காலத்தில் பல கிறிஸ்துவ அன்பர்கள், மஇகா சார்பில் அரசாங்கப் பதவிகளில் அமர்ந்திருக்கிறார்கள். கட்சியின் உயர் பதவிகளுக்குத் தேர்தல்மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். தற்போது மஇகாவின் தேசிய உதவித் தலைவராகத் தேர்தல் மூலம் பேராளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டத்தோ நெல்சன் ரங்கநாதன் அவர்கள் செனட்டராகவும் மஇகாவைப் பிரதிநிதித்து நாடாளுமன்றத்தில் இடம் பெற்றிருந்தார்.
மஇகாவின் இத்தகைய, அனைத்து மத, இன சமூகத்தினரையும் அரவணைக்கும் அரசியல் நிலைப்பாடு என்றென்றும் தொடரும் என உறுதி கூறுகிறேன்.
கிறிஸ்துவ அன்பர்கள் தேவாலயங்களுக்கு சென்றும் மற்ற இன சகோதரர்களைத் தங்களின் இல்லங்களுக்கு அழைத்து பொது உபசரிப்பு நடத்தி கிறிஸ்துமஸ் தினத்தைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டுமென மஇகாவின் சார்பிலும் தனிப்பட்ட முறையிலும் கேட்டுக்கொள்வதுடன் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்று
தான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன்
தன்னுடைய கிறிஸ்மஸ் வாழ்த்து செய்திகள் தெரிவித்துள்ளார்.


