
மலேசிய அரசியல் களத்தில், இந்திய சமுதாய எல்லையில் கறைபடியா கரங்களுக்கு சொந்தக்காரராக ஒரு தலைவர் விளங்குகிறார் என்றால், அவர், அட்டியின்றி பொன்.வேதமூர்த்திதான்.
எளிய வீட்டுவசதியைப் போலவே வாகன வசதியையும் பெற்றிருந்தாலும் ஏதோவொரு வகையில் அன்றாடம் சமுதாய-சமயப் பணியை ஆற்றுவதில் சளைக்காதவர் பொன்.வேதமூர்த்தி.
நல்லோர் கையில் நாணயம் இருந்தால் நாலு பேருக்கு சாதகம் என்னும் பழகுமொழிக்கேற்ப வெறும் 20 மாதங்களே இவர் அமைச்சராக இருந்த காலத்தில் இந்திய இளைய சமுதாயத்திற்கு இவர் பார்த்து பார்த்து தீட்டிய திட்டங்கள் ஏராளம்.

ஒரு தவணைக் காலம் முழுக்க இவர் அமைச்சராக பணியாற்றும் வாய்ப்பை மலேசிய அரசியல் களம் இவருக்கு வழங்கி இருந்தால், சுதந்திர மலேசியாசியல் இந்திய இளைஞர் சமுதாயத்திற்கான மறுமலர்ச்சியையும் புதுப் பாதையையும் வகுத்திருப்பார்.
‘செடிக்’-ஆக இருந்த மலேசிய இந்தியர் கல்வி-பொருளாதார உருமாற்றப் பிரிவை, ‘மித்ரா’வாக உருமாற்றி, அந்த மித்ரா மூலம் இவர் வெளிப்படையாக வகுத்தத் திட்டங்கள் யாவும் மாணவர்களையும் இளைஞர்களையும் மட்டுமே இலக்காகக் கொண்டிருந்தன.
குறிப்பாக, 4-ஆவது தொழிற்புரட்சியை இலக்காகக் கொண்டு, இந்திய இளைய சமுதாயத்தை தொழில்-வர்த்தக திசைநோக்கி நகர்த்தினார். இவர் அமைச்சராக இருந்த குறுகிய காலத்தில் திருகூர்தி-ட்ரோன் தொழில்நுட்பம் குறித்து அதிகமாக பேசப்பட்டது.

நம் இளைஞர்களுக்கு, திருகூர்தி பயிற்சி அளிப்பதில் அதிகமாக பாடாற்றினார். தவிர, Mitsubishi, Microsoft, Dell போன்ற தொழில்-தொழில்நுட்ப நிறுவங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டு வரிசையாக பயிற்சிக்கு ஏற்பாடு செய்தார்.
அதைப்போல், இடைநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் ‘பி-40’ என்னும் நலிந்த பிரிவு குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் தேர்வு வெற்றிக்காக அதிக பாடாற்றியவர் பொன். வேதமூர்த்தி என்பதை நாடறியும்.
வெறுமனே மானியத்தைக் கொடுத்து விட்டோம என்று இன்றைய பொறுப்பாளர்கள் மார்தட்டுவதைப் போலன்றி, நாடு முழுவதும் உள்ள இளைஞர்களை அடையாளம் காணவும் அவரவரின் தகுதி-ஆவல் ஆகியவற்றை உய்த்துணர்ந்து, அவர்களின் உண்மையான மேம்பாட்டிற்காக எந்நேரமும் சிந்தித்த அவர், அதற்கான பணிப்படையை மாநிலந்தோறும் கட்டமைத்தார்.

அண்மையில்கூட, பத்துமலை இந்தியன் செட்டல்மெண்ட் பகுதியைச் செர்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களை வெளியேற்றவும் அவர்களின் வீடுகளை உடைக்கவும் முனைப்பு காட்டிய கோம்பாக் மாவட்ட நில அலுவலக அதிகாரிகளையும் அவர்களுக்கு பச்சைக் கொடி காட்டிய மாநில மந்திரி பெசாரை(மாநில முதல்வர்)யும் தன் சட்ட நுணக்க அறிவால் பின்வாங்கச் செய்தவ்ர் இவர்.
எந்தத் தலைவரும் இதில் அக்கறைக் காட்டாத நிலையில், சம்பந்தப்பட்ட மக்களைத் திரட்டி சிலாங்கூர் அரண்மனைவரை போராட்டம் நடத்தியதுடன் மாட்சிமைசால் சுல்தானிடம் கோரிக்கை மனுவையும் சமர்ப்பித்தார்.
பத்துமலை, சுங்கை துவா சாலைப் பகுதியில் உள்ள மந்திரி பெசார் அலுவலகத்தின் முன், ஹிண்ட்ராஃப் எழுச்சி நாளில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மலேசியத் தமிழர் முன்னேற்ற இயக்கப் பொறுப்பாளர்களுடன் இணைந்து தீபப் பேரணி நடத்தி மாநில அரசுக்கு கோரிக்கை மனுவும் கொடுத்தார்.
இவற்றின் விளைவாக, பத்து கேவ்ஸ் இந்தியன் செட்டல்மெண்ட் பகுதி குடியிருப்பாளர்களுக்கு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திய சமுதாயப் பாங்காளர் ஹிண்ட்ராஃப் தலைவரும் மலேசிய முன்னேற்றக் கட்சித் தலைவருமான பொன்.வேதமூர்த்தி.
கடந்த அக்டோபர் மாதத்தில் அமெரிக்க அதிபருடன் மலேசிய பிரதமர் செய்துகொண்ட ஒப்பந்தம், அரசியல் சாசத்திற்கு முரணானது என்பதை நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்தியது, தேசியத் தலைவர்களின் புருவங்களை உயர்த்த வைத்தது.

அந்த அளவிற்கு சட்ட வல்லுநராகத் திகழும் பொன்.வேதமூர்த்தி, இன்று மலர்ந்துள்ள புத்தாண்டு காலத்தில் இன்னும் எழுச்சியுடன் கடமையாற்ற அவருக்கு உடலாலும் உள்ளத்தாலும் வலிமையும் ஆற்றலும் இன்னும் அதிகமாக வாய்க்க வேண்டும் என்று குமரி வான்முற்றத்தின் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்படுகிறது.
அவருக்கு வாய்த்திட்ட நேரிய சிந்தை, கூரிய நோக்கு, பாரிய கடமை யாவும் பல்கிப் பெருக வேண்டும்; அதன்வழி இந்திய சமுதாயம் நன்மை அடைய வெண்டும்.
வாழ்க பொன்.வேதமூர்த்தி!
வளர்க மலேசிய இந்திய சமுதாயம்!!


