
புதிதாக பிறந்திருக்கின்ற 2026 ஆம் ஆண்டில் மலேசிய இந்திய சமுதாயம் பொருளாதார மேம்பாடு, கல்வி மறுமலர்ச்சியோடு ஒற்றுமை சமுதாயமாகவும் வலிமை பெறட்டும் என்று மஇகா தேசிய துணைத் தலைவரும் தாப்பா மக்கள் பிரதிநிதியுமான
டத்தோஸ்ரீ மு. சரவணன் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்
பத்து மலை திருத்தளத்தில் 140 அடி உயரத்தில் நிறுவப்பட்டு உள்ள திருமுருக சிலை 20 ஆண்டு நிறைவு எட்டியதை ஒட்டி இன்று பன்னீர் ஆராதனையுடன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய சரவணன் மஇகா ஓர் அரசியல் கட்சி மட்டும் அல்ல; மலேசிய இந்தியர்களின் பல்முனை மேம்பாட்டில் அக்கறையும் ஈடுபாடும் கொண்டுள்ள சமூக இயக்கமும் ஆகும்.
குறிப்பாக இந்திய சமுதாயத்தின் கல்வி மலர் மறுமலர்ச்சிக்காக அதிக அளவில் பாடாற்றிவரும் ஒரே இயக்கம் மலேசிய இந்தியர் காங்கிரஸ் பேரியக்கம்தான் என்றார்.
பத்து மலையில் இன்று நடைபெறும் விழா ஏதோ தைப்பூசத்தை போலவே பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று கூடலுடன் நடை பெறுகிறது. மலேசிய இந்தியர்களின் பக்தி இயக்க முனையமாக பத்து மலை உருமாற்றம் கண்டு வருவது பாராட்டுக்குரியது என்றார்.

சமய விழாவையும் புத்தாண்டுக் கொண்டாட்ட சமூக விழாவையும் தலைவர் டான்ஸ்ரீ ஆர் நடராஜா தலைமையில் தேவஸ்தானம் கொண்டாடி வருகிறது என்று இன்று பத்துமலையில் செய்தியாளர்களிடம் டத்தோஸ்ரீ டாக்டர் மு சரவணன் பேசினார்.
இன்று பிறந்திருக்கிற புத்தாண்டு, மலேசிய இந்திய சமுதாயத்திற்கு பொருளாதாரம், கல்வி ஆகியவற்றில் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் அளிக்கும் ஆண்டாக அமைய வேண்டும்.
குறிப்பாக மாறிவரும் தேசிய அரசியல் சூழலுககு ஏற்ப இந்திய சமுதாயம் ஒற்றுமையுடன் இருந்தால்தான் எதையும் சாதிக்க முடியும் என்றார்.
எதிரணியான தேசியக் கூட்டணியில் தற்பொழுது நிலவும் சிக்கல் குறித்து விரைவில் நடைபெற இருக்கின்ற மஇகா மத்திய செயலவையில் ஆலோசிக்கப்படும் என்றும் இதன் தொடர்பில் மஇகா அடுத்தக் கட்டமாக எடுக்க வேண்டிய நிலை குறித்தும் கருத்து பரிமாறப்படும்.
கடந்த தேசிய பொதுப் பேரவையிலேயே மத்திய செயலவைக்கு அரசியல் ரீதியான முடிவு எடுக்கும் முழு அதிகாரத்தையும் பேராளர்கள் அளித்துள்ளனர்.
எனவே இப்பொழுதுதான் ஆண்டு தொடங்கியிருக்கிற நிலையில் கூடிய விரைவில் நடைபெற இருகின்ற 2026 ஆம் ஆண்டுக்கான முதல் மத்திய செயலவைக் கூட்டத்தில் இது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் சரவணன் செய்தியாளர்களிடம் பேசினார்.


