Saturday, June 6, 2026

அன்வாருக்கு எதிராக ஐந்து எம்பிக்கள் தொடுத்த வழக்கில் ஹிண்ட்ராஃப்-எம்ஏபி வழக்கறிஞர்கள் கார்த்திக் ஷாண் – பொன். வேதமூர்த்தி முன்னிலை!

பிரதமர் அன்வாருக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் கொடுத்துள்ள வழக்கில் ஹிண்ட்ராஃப்- மலேசிய முன்னேற்றக் கட்சி எம்எபி ஆகியவற்றின் சட்ட ஆலோசகர் கார்த்திக் ஷாணும் சட்ட வல்லுநர் பொன். வேதமூர்த்தியும் முன்னிலை ஆகின்றனர்.

கடந்த 2025 அக்டோபர் மாத ஆசியான் உச்ச நிலை மாநாட்டின் பொழுது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரதமர் அன்வார் இப்ராகிம் செய்து கொண்ட ஏஆர்டி வர்த்தக ஒப்பந்தம் அரசியல் சாசனத்திற்கு முரணானது என்றும் நாட்டின் இறையாண்-மைக்கு களங்கமானது என்றும் மலேசிய முன்னேற்ற கட்சி- எம்ஏபி தேசியத் தலைவருமான பொன் வேதமூர்த்தி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இன்றைய செய்தியாளர்க் கூட்டத்தில் விளக்கம் அளித்தார்.

உலு திரங்கானு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரோசோல் பின் வாஹிட், கிரிக் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபாத்துல் பின் அயோப், பெண்டாங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அவாங் பின் ஹஷிம், மஸ்ஜித் தானா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ வீரா மாஸ் எர்மியாத்தி, ரொம்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அப்துல் காலிப் பின் அப்துல்லா ஆகிய ஐந்து எம்பிக்களும் பிரதமர் அன்வார் இப்ராகிம், மலேசிய சட்டத்துறை தலைவர்-அட்டர்னி ஜெனரல், மலேசியக் கூட்டரசாங்கம் ஆகிய மூன்று தரப்பினருக்கு எதிராக இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளனர் என்று வழக்கறிஞர் கார்த்திக் ஷாண் விளக்கம் அளித்தார்.

நாடாளுமன்ற புதிய கூட்டத்தொடர் இன்று தொடங்கி இருக்கின்ற நிலையில்,
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று முற்பகலில் சட்ட வல்லுநர் பொன் வேதமூர்த்தியும் மனித உரிமை வழக்கறிஞருமான கார்த்திக் ஷானும் இதன் தொடர்பில் செய்தியாளர்களிடம் மேலும் விளக்கம் அளித்தனர்.

மலேசிய அரசு சார்பில் இன்னொரு நாட்டுடன் ஏஆர்டி வர்த்தக ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்றால் அரசியல் சாசன விதி 69-இன் படி, மாமன்னர், மலேசிய ஆட்சியாளர் மன்றம், அமைச்சரவை, நாடாளுமன்றம் ஆகிய நான்கு தரப்பினரிடம் இருந்து ஆலோசனை, பரிந்துரை மற்றும் ஒப்புதல் ஆகியவற்றை பெற வேண்டும்;
அதன் பின்னரே பிரதமர் இத்தகைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியும் என்று சட்ட வல்லுநர் பொன். வேதமூர்த்தி விவரித்தார்.

அதன் அடிப்படையில் மாமன்னரின் ஒப்புதலை அன்வார் பெறவில்லை; ஆட்சியாளர் மன்றத்தின் ஆலோசனை-யையும் கேட்கவில்லை; அமைச்சரவைக் கூட்டத்திலும் ஆலோசிக்கப் பட்டதாகத் தெரியவில்லை; நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்படவில்லை என்று அவர் மேலும் விளக்கம் அளித்தார்.

அன்வார், தான்மட்டும் தன்னிச்சையாக ஏற்படுத்திக் கொண்டுள்ள இத்தகைய வர்த்தக ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திடலாமா என்று வினவி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகத் தெரிவித்த மனித உரிமை வழக்கறிஞருமான கார்த்திக் ஷான்,
மேற்குறிப்பிட்ட ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மேலும் பல எம்பிக்களும் இன்றைய செய்தியாளர்க் கூட்டத்தில் கலந்து கொண்டனர் என்று குறிப்பிட்டார்.

அரசியல் சாசனம் தொடர்புடைய இந்த வழக்கு, தேசிய கவனத்தை ஈர்த்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை