
அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்புடன் ஏஆர்டி-வர்த்தக ஒப்பந்தத்தை தன்னிச்சையாக செய்துகொண்ட பிரதமர் அன்வார், மலேசியாவின் நாடாளுமன்ற ஜனநாயக ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் கடமையில் இருந்து தவறிவிட்டார் என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்.ஏ.பி. தேசியத் தலைவர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதன் தொடர்பில், கூட்டரசு அரசியல் சாசனம், 43(3) பிரிவின்படி, அமைச்சரவை நாடாளுமன்றத்தில் கூட்டாக பொறுப்பேற்க வேண்டும்.
இந்த ஒப்பந்தம் கூட்டரசு அரசியல் சாசனத்திற்கு முரணானது என்று ஐந்து எம்பி-க்கள் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை ஜனவரி 20-ஆம் நாள் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் அன்வார், இந்த ஒப்பந்தம் இன்னும் சரிசெய்ய வேண்டியுள்ளது; விளக்கம் தேவைப்படுகிறது; இறுதி செய்யப் படுவதற்கு முன்பு, உத்தரவாத ஆவணங்கள்கூட தேவை என்பதை வெளிப்படுத்தி உள்ளார். இந்த ஒப்புதல் வாக்குமூலம், டிரம்புடன் அன்வார் செய்துகொண்ட ஒப்பந்தம் குறைபாடுள்ளது என்பதும் அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆபத்தானது என்பதையும் அம்பலப் படுத்துகிறது என்று சட்ட வல்லுநர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இரு நாட்டுத் தலைவர்களுக்கிடையிலான ஒப்பந்தம் மிக எளிமையானது என்பதை உலகே அறியும். ஆனால், ஓர் ஒப்பந்தத்தில் முதலில் கையொப்பம் இட்டுவிட்டு, பின்னர் அதன் அமலாக்கம் குறித்து ஆலோசிப்பதும் தேவையான உறுதிப்பாட்டையும் ஆவணங்களையும் பெற்றுக் கொள்வது என்பதும் உலகில் எங்குமே இல்லாதது; எவரும் அறியாதது.
ஜனநாயக நடைமுறையில், தேசத்திற்கான ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை முதலில் இடம்பெறுவதுதான் மரபு; சம்பந்தப்பட்ட விதிமுறைகள் இறுதி செய்யப்பட வேண்டும்; பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும்; அதன் பின்னரே எந்த ஒப்பந்தமும் கையெழுத்திடப்படும். ஆனால், மலேசியாவில் நாம் காண்பதோ நேர் எதிராக இருக்கிறது. சீரான நிருவாகம் அரசியலமைப்பு நடைமுறை இரண்டையும் அச்சுறுத்தும் வகையில் காரியங்கள் நடைபெறுகின்றன.
கடந்த ஆண்டில் வர்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டுவிட்டு, இந்த ஆண்டில் இன்னும் ஆலோசிக்க வேண்டி உள்ளது என்பது மிகவும் ஆபத்தானது; நாட்டின் இறையாண்மைக்கு இழுக்கானது.
மலேசியாவின் பொருளாதார அடித்தளம் பாதிக்கப்படும் என்று பிரதமரே ஒப்புக்கொண்டிருப்பது, அதிக கவலையளிக்கிறது. தேசிய இறையாண்மை தொடர்பான அம்சங்கள் அடிக்குறிப்பாக இல்லாமல், அடித்தளமாக இருக்க வேண்டும்.
ஒரு பிரதமர் அரசாங்கத்தின் நிருவாகத் தலைவர் மட்டுமல்ல; அவர் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் அரச நிறுவனங்களுக்கும் பாதுகாவலர்; மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் அறங்காவலருமாவார்.
அமைச்சரவையில் தெளிவாக ஆலோசிக்காமல், நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல், தேசிய நலனைப் பாதுகாக்கும் எழுத்துப்பூர்வ உத்தரவாதம் இல்லாமல் பன்னாட்டு அளவிலான ஒப்பந்தம் கையெழுத்திடப்படும்போது, நாட்டின் கொள்கை மட்டுமல்ல; நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடித்தளமே சிதைக்கப்படுகிறது என்று ஹிண்ட்ராஃப் இயக்கத் தலைவருமான பொன்.வேதமூர்த்தி இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.


