
2026 தைப்பூசத் திருவிழா தொடர்பில் இணைய ஊடகங்களான தமிழ் லென்ஸ், தினத்தந்தி ஆகியவற்றின் சார்பில் தண்ணீர்ப் பந்தல் அமைக்கப்பட்டது.
கோலாலம்பூர் ஈப்போ சாலை (ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷா) மூன்றேகால் மைல், பத்து கொம்ப்ளக்ஸ் வளாகத்தை ஒட்டி தண்ணீர் பந்தல் அமைப்பதை தமிழ் லென்ஸ் இணைய ஊடகத்தின் நிறுவனர் வெற்றி விக்டர், தினத்தந்தி ஊடகப் பொறுப்பாளரும் உலு சிலாங்கூர் ஊராட்சி மன்ற கௌன்சிலருமான ப. புவனேஸ்வரன், தினத்தந்தி ஆசிரியரும் மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்க தலைவருமான செ.வே. முத்தமிழ் மன்னன் ஆகியோரின் ஒருங்கிணைப்பிலும் தலைமையிலும் இடம்பெறும் தைப்பூச தண்ணீர் பந்தல் இந்த ஆண்டும் வழக்கமான சமய பாங்குடன் ஏற்பாடு செய்யப்பட்டது.

தி. காளிதாசன், இ. காளிதாசன், கி. தீபன், பவளச் செல்வன், பாலா உள்ளிட்ட ஊடகத்தார் நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவன பொறுப்பாளர் ரூபன் ஆகியோருடன் காவல்துறை அதிகாரி ஐங்கரன் உள்ளிட்டோரும் இணைந்து ஏற்பாடு செய்த இந்தத் தண்ணீர்ப் பந்தல் நிகழ்ச்சிக்கு பேராதரவு அளித்தவர் ரவாங் மருத்துவர் சத்திய பிரகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய தண்ணீர் பந்தல் ஏற்பாட்டின் மூலம் நடந்து செல்லும் பக்தர்களுக்கு இந்த ஆண்டு ஏராளமான அளவில் உணவும் சுவை பானங்களும் வழங்கப்பட்டன;
அதேவேளை, கடந்த ஆண்டில் நூற்றுக்கணக்கான தேங்காய்கள் உடைக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு கோலாலம்பூர் அருள்மிகு மாரியம்மன் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட தேர் பத்துமலையை நோக்கிய பயணத்தின்போது, தங்களின் தண்ணீர்ப் பந்தலருகே, தேர் நெருங்கியபொழுது அர்ச்சனை செய்து, ஒரே ஒரு தேங்காயை மட்டும் உடைத்து வழிபட்டது மிகவும் பொருத்தமானதும் சிந்தனைக்கு உரியதாகவும் அமைந்தது.

தேங்காய் என்பது ஒரு நைவேத்திய பண்டம்தான். அதற்கு ஏதோ தனியே இறைத் தன்மை இருப்பதாகவும் அதன் மட்டை ஓடு உள்ளே இருக்கும் தேங்காய் ஆகியவற்றை உருவகப்படுத்தி மும்மலங்கள் கொண்டது என்பதெல்லாம் பிற்காலத்தில் புனையப்பட்ட சங்கதியாகும்.

எது எவ்வாறாக இருந்தாலும் தேர் ஊர்வலத்தின் போது ஒரு தேங்காயை உடைத்து இறைவனை வழிபட்டால் அதுவே பரம்பொருளுக்கு உகந்ததாக இருக்கும்.

அதைவிடுத்து நூறு, ஆயிரம் என்ற அளவில் தேங்காய்களை உடைப்பது தனிப்பட்ட செல்வாக்கையும் பெருமையையும் பறைசாற்றிக் கொள்வதாகவே அமையும் என்பதை அறிந்தோர் உணர்வர்.

தவிர, ஆயிரக்கணக்கான வெள்ளியை செலவு செய்து ஏராளமான தேங்காயை சாலையில் உடைத்து அடுத்த பத்து நிமிடத்தில் அவை அடுத்து வரும் குப்பை வண்டிக்கு செல்வதை சற்று பொருளாதார கண்ணோட்டத்துடன் அணுகி, நூற்றுக்கணக்கான தேங்காய் உடைத்து பகட்டை வெளிப்படுத்துவதைக் காட்டிலும் ஒரு தேங்காயை உடைத்து உள்ளார்ந்த பக்தியை வெளிப்படுத்துவது உன்னதமானது உயர்வானது என்பதை இந்த ஊடகத் தம்பிமார் உணர்ந்து இந்த ஆண்டு தைப்பூசத்தில் ஒரே ஒரு தேங்காயை உடைத்து தேரில் வீற்றிருந்த திருமுருகக் கடவுளை வணங்கியது மிகவும் பொருத்தமானது.

பெரிய காளியும் சின்ன காளியும்!
ஆன்மீக மறுமலர்ச்சி என்றளவில் ஏற்பட்ட இந்தப் புதுமை ச் சிந்தனையை எல்லாத் தரப்பாரும் கடைப்பிடித்தால் சமூகம் நலம்பெறும்.










