Thursday, April 2, 2026

அரசியல் சதிவலையில் சிக்குவதா? -பாஸ் கட்சி நிலைகுறித்து எம்ஏபி வருத்தம்!

சட்டத்தின் ஆட்சி நடைபெறும் இந்த நாட்டில், சட்டத்திற்கு புறம்பான வகையில் சமயப் பதற்றத்தை வேண்டுமென்றே ஏற்படுத்தும் முயற்சியில் பின்னப்பட்ட சதிவலையில் பாஸ் கட்சியும் சிக்கியுள்ள நிலைகுறித்து மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி மிகுந்த வருத்தம் அடைவதாக அதன் தலைவர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பிரதமரின் தலைமை குறித்து சமூகத்தில் பரவலாக எழுந்துள்ள அதிருப்தி, கேள்விகளில் இருந்து மக்களை திசைதிருப்பும் முயற்சியாக இந்த சமய விவகாரம் எழுப்பப்படுகிறதோ என்ற ஐயம் எழுகிறது.

இந்து கோயில்கள் பிரச்சினை புதியதல்ல; மலாய் அல்லது முஸ்லிம் உரிமை, சட்டத்தின் ஆட்சிக்கான சவாலும் அல்ல. இது சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் தொடங்கி சுதந்திரத்திற்குப் பின்னும் இதுவரை தொடர்கின்ற பிரச்சினையாகும். அரசுகளின் தவறான கொள்கை, தோல்வி, மாற்றாந்தாய் மனப்பான்மையினால் இந்த ஆலய சிக்கல் நீடிக்கிறது.

குறிப்பாக 1970-80களில் 8,00,000க்கும் மேற்பட்ட இந்திய தோட்டத் தொழிலாளர்கள் தோட்டங்களிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப் பட்டதிலிருந்து தொடரும் நீண்டகால வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது. 200 ஆண்டுகளுக்கும் மேலாக தோட்ட நிலங்களில் இருந்த கோயில்கள் ஆயிரக் கணக்கில் ஏற்கெனவே இடிக்கப்பட்டன, மேலும் பல கோயில்கள் இன்னும் அதே இக்கட்டான நிலையில் உள்ளன. அரசாங்கம் பெருமளவில் தோட்ட நிலங்களை கையகப்படுத்தி, அவற்றை மேம்பாட்டிற்-காக தனியாரிடம் விற்றபோது நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது.

சுதந்திரத்திற்கு முன்பே இந்த நிலங்களில் இந்தக் கோயில்கள் இருந்த போதிலும், அவற்றின் இருப்பு அங்கீகரிக்கப் படவில்லை. இந்த சட்ட சிக்கலின் உண்மையை அரசாங்கத்தால் ஒருபோதும் விளக்கவும் முடியவில்லை, அதேவேளை, இந்திய சமூகத்தின்மீது அவநம்பிக்கை, தவறான புரிதல் ஏற்படும் வகையில் இந்தப் பிரச்சினை இப்போது, திரைக்குப் பின்னால் இருக்கும் மர்ம் நபர்களால் எழுப்பப்படுகிறது.

நில ஆக்கிரமிப்பு, சட்டவிரோதக் கட்டுமானம், மலாய்க்காரர்களுக்கு அவமரியாதை ஆகியவற்றின் அடையாளங்களாக கோயில்கள்மீது முத்திரை குத்த மேற்கொள்ளப்படும் இந்த மர்மமான முயற்சிக்குப் பின்னால் ஒரு பெரிய அரசியல் பின்புலம் உள்ளது; தவிர, இந்த விவகாரம் மலாய் ம்ககளிடையே ஆதாரமற்ற அச்சத்தைத் தூண்டுவதற்காகப் பெரிதுபடுத்தப்படுகிறது.

இந்த மர்மக் கரங்களின் பிடியில் பாஸ் கட்சியும் தோதாக சிக்கி இருப்பது, உண்மை-நியாயத்தைவிட, மத விவகாரங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி, பாஸ் கட்சி என்னும் தோற்றம் இந்திய வாக்காளர் மத்தியில் ஆழமாக பதியும். ஏற்கெனவே, இந்திய சமுதாயத்தில் எடுபடாத இக்கட்சி, மேலும் பின்னடைவை எதிர்கொள்ளக்கூடும்.

i) டிரம்புடன் கையெழுத்தான ஒப்பந்தம் அரசியலமைப்பிற்கு முரணானது; இது, பிரதமருக்கு மிகவும் கடுமையான தோல்வியாகும்; இதன் தொடர்பில், அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பு, நாட்டின் இறையாண்மை ஆகியவற்றை நிலைநிறுத்தும் வகையில் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்;

ii) டிரம்ப்-அன்வார் ஒப்பந்தம் மாட்சிமை பொருந்திய மாமன்னர், மலாய் ஆட்சியாளர் மன்றம், நாடாளுமன்றம், அரசியலமைப்புச் சாசனம் ஆகிய-வற்றின் பங்களிப்பை குறைத்துள்ளதாகவும் பரவலாகக் கருதப்படுகிறது;

iii) பாலியல் குற்றத்திற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டு, அரசியல் சட்டம், பிரிவு 48இன்கீழ் முழு மன்னிப்பு இல்லாமல் சிறைத்தண்டனை விதிக்கப் பட்ட நிலையில், பிரதமராக அவர் நியமிக்கப்பட்டதில் அரசியலமைப்பு ரீதியிலான கேள்விகள் எழுகின்றன; அத்துடன் ‘பிரதமர் பதவியை வகிக்கத் தகுதியற்றவர்’ என்னும் நிலைகுறித்து, முன்னாள் மாமன்னர் தவறாக வழி நடத்தப்பட்டாரோ என்ற ஐயமும் இப்போது வெளிப்படையாக எழுகின்றது.

iv) பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டு சுமத்திய யூசுப் ராவுத்தரை, ஒரு போலி துப்பாக்கி மற்றும் போதைப்பொருள் வழக்கில் சிக்க வைப்பதில் பிரதமர் அன்வார் ஈடுபட்டது தொடர்பான குற்றச்சாட்டுகள் பொதுவெளியில் எழுப்பப்படுகின்றன், இது அன்வார் இப்ராகிமின் தார்மீக அதிகாரம் மற்றும் தலைமையின்மீது குறிப்பிடத்தக்க அழுத்தத்தை ஏற்படுத்துகிறது;

v) இந்தோனேசிய நில கையகப்படுத்துதல் தொடர்பான குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக விவாதிக்க தயக்கம் காட்டுவதால், மக்களுக்கு முக்கியமான உண்மைகள் மறைக்கப்படுகிறதோ என்னும் சந்தேகம் எழுகிறது;

vi) அன்வார் இப்ராகிம் பிரதமரானால் அவரது பதவியைப் பயன்படுத்திக் கொள்ள மர்மமான கைகள் மலேசியாவின் பொதுத் தேர்தலில் தலையிட்டதைக் குறிக்கும் எப்ஸ்டீன் தொடர்பான DOJ(அமெரிக்க நீதித் துறை)கோப்புகள் தற்பொழுது அம்பலப்பட்டுள்ளதுடன் அதில் பிரதமரையும் இணைக்கும் அண்மைய குற்றச்சாட்டு.

இவ்வாறு பிரதமரின் தலைமைத்துவ தோல்வியிலிருந்து மக்களை திசைதிருப்புவதற்காக திட்டமிடப்பட்ட கமுக்க நடவடிக்கைதான் இப்பொழுது எழுப்பப்படும் ஆலயப் பிரச்சினையோ என்பதை அவதானிக்க பாஸ் கட்சி தவறிவிட்டதா?

மலேசிய இந்திய சமுதாயம் பிரதமர்மீது கொண்டிருந்த நம்பிக்கை அடியோடு சரிந்துவிட்ட நிலையில், பெரிக்காத்தான் கூட்டணி பக்கம் தங்கள் ஆதரவை திருப்பியுள்ள தற்போதைய சூழலில், பெரிக்காத்தான் கூட்டணியின் முக்கிய அங்கமான பாஸ் கட்சி, இந்த ஆலய விவகார சூழ்ச்சியை சரியாக அவதானித்து தன் நிலையை பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் அதேவேளை, மலாய் முஸ்லிம் சகோதர-சகோதரியர், இந்து ஆலய விவாகரம் குறித்து தற்பொழுது எழுப்பப்படும் பரப்புரையில் முழு உண்மை இல்லை என்பதையும் பாதி உண்மையும் மீதி பயமும் கலந்த மர்மமான கட்டமைப்பு என்பதையும் நடுநிலையுடன் எண்ணிப் பார்க்கும்படி கேட்டுக் கொள்வதாக சட்டவல்லுநருமான பொன்.வேதமூர்த்தி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை