
அமெரிக்காவின் அதிபராக டோனால்ட் டிரம்ப் இரண்டாவது தவணையாக கடந்த ஆண்டு ஜனவரி 20-ஆம் நாள் பதவியேற்றது முதல் உலக நாடுகளின்மீது பல்வேறு விதமாக சுங்க வரி விதித்து வந்ததால், பன்னாட்டு வர்த்தக சமூகம் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வந்த நிலையில், அவை யாவும் அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.
இந்த நிலையில், ஆசியான் கோலாலம்பூர் உச்சநிலை மாநாட்டின்போது, பிரதமர் அன்வார் அதிபர் டிரம்புடன் 26-10-2025 அன்று தன்னிச்சையாக செய்துகொண்ட ஒப்பந்தம், ஏற்கனவே சட்டப்படியான தன்மையை இழந்துவிட்டதாக அரசியல் பார்வையாளர்-கள் கருதுகின்ற சூழலில், அந்த ஒப்பந்தத்-தின் தற்போதைய நிலை குறித்து பிரதமர் அன்வர் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தலைவர் பொன்.வேதமுர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
மலேசியக் கூட்டரசு அரசியல் சாசனத்திற்கு புறம்பாகவும் மாட்சிமைக்குரிய மாமன்னர், ஆட்சியாளர் மன்றம், நாடாளுமன்றம் ஆகிய தரப்பினரைப் புறக்கணித்தும் பிரதமர் அன்வார் தன்னிச்சியயாக கையெழுத்திட்ட டிரம்புடனான ஒப்பந்தம், மலேசிய இறையாண்மைக்குப் புறம்பாக அமைந்துள்ளது.
அதனால், மடாணிஅரசாங்கம் இனியும் பம்மாத்து காட்ட வேண்டாம் என்று ஹிண்ட்ராஃப் தலைவருமான பொன். வேதமுர்த்தி, இதன் தொடர்பில் வெளி-யிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
டிரம்ப் விதித்த சுங்க வரி அல்லது வர்த்தக வரிவிதிப்பு முறை சட்டப்பூர்வமானது அல்ல என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ள நிலையில், பிரதமர் அன்வார் அவருடன் செய்துகொண்ட வர்த்தக ஒப்பந்தத்தின் தற்போதைய நிலை குறித்து பிரதமர் அன்வர் நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிப்பதுடன் நாடாளுமன்றத்-திலும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சட்ட வல்லுநருமான பொன். வேத முர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.


