Thursday, April 16, 2026

முதல்வர் ஸ்டாலின் கையில் நடுக்கம் இருந்துச்சா பிரேமலதா தங்கச்சி?

தன் அன்பு இளவல் சதீஷை நாடாளுமன்ற மேலவைக்கு அனுப்ப வேண்டும் என்ற ஒற்றை இலக்கில் பயணிக்கிறார் பிரேமலதா.


தேமுதிகவை(தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்) தன் கணவர் விஜயகாந்த்
வழிநடத்திய போதும் சரி; விஜயகாந்த் மறைவுக்குப் பின் கட்சியைத் தான் வழிநடத்துகின்ற தற்பொழுதும் சரி; பிரேமலதாவின் கனவும் இலக்கும் அதுவாகவேத்தான் தொடர்கிறது;

நல்லவேளை, அடுத்த மாதம் அக்கனவு ஈடேற இருக்கிறது.

திமுகவுடன் அரசியல் பேரம் படிந்து தேர்தல் கூட்டணி உருவாகி விட்டதால் ஒப்பந்தத்தின் படி அடுத்த மார்ச் திங்கள் மையப்பகுதியில் சதீஷ் ராஜ்ய சபா எம்பி ஆகிறார்.

மூன்று தினங்களுக்கு முன்பு சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவரும் தமிழ்நாட்டு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை சந்தித்து தேர்தல் உடன்பாடு செய்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, 2016-இல் கலைஞர் வெளிப்படுத்திய கருத்தை கையாண்டு சமாளித்து இருக்கிறார்.

பழம் நழுவி பாலில் விழும் என்று அப்போது கலைஞர் மிகுந்த எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையோடும் தெரிவித்த கருத்து, அப்போது நிறைவேறாமல் போனதற்கு இதே பிரேமலதாதான் காரணம்.

அந்த காலக்கட்டத்தில் உடல் நலம் பாதிப்புற்றிருந்த கலைஞர், தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்ல இயலாத நிலையில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக-வுடன் கூட்டணி வைத்தால் எளிதில் வெற்றி பெறலாம் என்ற எதிர்பார்ப்போடும் நம்பிக்கையோடும் வலிந்து வலிந்து விஜயகாந்திகு அழைப்பு விடுத்தார்.

திமுகவுடன் தேர்தல் உறவு வைத்துக் கொண்டால், அது ஸ்டாலின் முதல்வராவ-தற்குத்தான் துணைபுரியுமேத் தவிர, தேமுதிக ஆட்சிக்கு வர முடியாது;

எனவே, நாங்கள் சொல்வதை கேட்டால், 2016 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்குப் பின் யார் முதல்வர் என்பதைத் தீர்மானிக்கும் இடத்தை தேமுதிக எட்டலாம்;

அப்படியானால் எங்களோடு இணைந்து மக்கள் நல கூட்டணி சார்பில் களம் காண வாருங்கள்; முதல்வர் வேட்பாளராக உங்களை முன்னிறுத்துகிறோம் என்று வைகோவும் இடது கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய தலைவர் ஜி ராம கிருஷ்ணனும் சொன்னதைக் கேட்டு மயங்கிய பிரேமலதா, அவர்கள் வைத்த பொறியில் விரும்பியே சிக்கினார்.

தவிர, அப்பொழுது, ‘தேர்தல் செலவுக்காக’ என்ற பெயரில் கிடைத்த ஏராளமான நிதியில் மனம் பூரித்தார் பிரேமலதா;

கலைஞரே நம்மை வருந்தி வருந்தி அழைக்கும் அளவுக்கு நம் நிலை உயர்ந்து இருக்கிறது என்ற இறுமாப்பில் இருந்த-வரும் இதே பிரேமலதாதான்.

அந்த நேரத்தில் விஜயகாந்த் ஏறக்குறைய செயலற்ற நிலையில் இருந்தார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, தனக்கு ஒரு கண் போனாலும் தாழ்வு இல்லை; எதிராலிக்கு(திமுகவிற்கு) இரு கண்களும் பறிபோக வேண்டும் என்ற வஞ்சக அரசியல் எண்ணத்தில் இருந்த வைகோ, ஜிரா, திருமாவளவன் போன்றோரின் எண்ணத்துடன் பிரேமலதாவின் கருத்தும் ஒத்துளப் போனது.

அப்போது ஆளுங்கட்சியாக இருந்த ஜெயலலிதாவின் அதிமுகவிற்கு எதிரான வாக்குகளும் எதிர்க்கட்சியாக இருந்த திமுகவிற்கு ஆதரவான வாக்குகளும் சிதற வேண்டும்;

திமுக தோற்கடிக்கப்ப்பட வேண்டும் என்ற குயுக்தி எண்ணத்தில் காய் நகர்த்திய ஜெயலலிதாவின் கமுக்க குழுவினராக செயல்பட்ட வைகோ, திருமாவளவன், ஜிகே வாசன், ஜி ராமகிருஷ்ணன் மற்றும் வலது கம்யூனிஸ்ட் தலைவருடன்(திருத்துறைப்-பூண்டி முத்தரசன் என்று நினைவு) கரம் கோத்தார் பிரேமலதா.

தனித்து நின்ற பொழுதுகூட வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினரான விஜயகாந்த், மக்கள் நல கூட்டணி என்ற பெயரில் ஐந்து கட்சிகள் உருவாக்கிய தீயக் கூட்டணியில் இணைந்தும் தோல்வியை தழுவினார். வைப்புத் தொகையைக்கூட 2016 சட்டமன்றத் தேர்தலில் பறி கொடுத்தார் விஜயகாந்த்.

கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் ஒருவர்கூட இடம்பெறாத சட்டமன்றமாக 2016 சட்டமன்றம் அமைந்தது. கெடுவான் கேடு நினைப்பான் என்பது அரசியலுக்கும் பொருந்தும் போலும்.

கலைஞர் சொன்னதை கேட்டிருந்தால் 2016 சட்டமன்ற பொதுத் தேர்தலுக்குப் பின், பிரேமலதா எதிர்க்கட்சி தலைவராக ஒருவேளை உருவாகி இருப்பார்.

ஜெயலலிதா இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்திருக்க மாட்டார்; அடிமை இடைப்பாடி பழனிசாமியும் முதல்வராக வந்திருக்க முடியாது.

அந்த நேரத்தில் வைகோவின் வஞ்சக பேச்சில் மயங்கி திமுகவிற்கு தண்ணீர்காட்டும் விதமாக இறுமாப்புடன் பிரேமலதா நடந்து கொண்டது ஒரு வகையில் நல்லதுதான் என இப்பொழுது படுகிறது.

சாதாரண நிலையிலேயே
செய்தியாளர்களிடம் “நீ”, “வா”, “,போ”, “உட்காரு” என்றேல்லாம் ஆணவமாக பேசுவதையும் அக்கப்போராக கருத்து தெரிவிப்பதையும் வாடிக்கையாக கொண்டிருப்பவர் பிரேமலதா விஜயகாந்த்.

2016 தேர்தலுக்குப் பின் அமைந்த சட்டமன்றத்தில் பிரேமலதா ஒருவேளை எதிர்க்கட்சி தலைவராக வந்திருந்தால் சட்டமன்றமும் தமிழக அரசியல் வெளியும்
தாங்கி இருக்காது;

காலமகள் எல்லாவற்றையும் கணக்காகத்தான் வகுத்திருப்பாள் போலும்; இனி அந்த நிலையை பிரேமலதாவால் எந்நாளும் எட்ட முடியாது.

பத்தாண்டுகளுக்கு முன் 40க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளை வழங்க முன்வந்த திமுக, இப்பொழுது வெறும் ஏழு தொகுதிகளுக்குள் பிரேமலதாவையும் தேமுதிகவையும் ஒரு சேர முடக்கிவிட்டது.

ஆனாலும் அந்தத் தேர்தலில் ‘நமக்கு நாமே’ என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்ட திமுக-வின் அப்போதைய செயல் தலைவர் மு க ஸ்டாலின் தமிழக சட்டமன்ற வரலாற்றில் இல்லாத அளவுக்கு 89 இடங்களில் வென்று தன்னந்தனியராக சாதனைப் படைத்தார்.

Made with LogoLicious Add Your Logo App

ஆளுங்கட்சியாக இருந்த பொழுது மிக அதிகபட்சமாக 184 தொகுதிகளிலும் எதிர்க்கட்சியாக இருந்தபொழுதும் 89 சட்டமன்ற தொகுதிகளில் வென்று சாதனை படைத்த ஒரே இயக்கம் திமுக.

இப்பொழுது அறிவாலயத்துக்கு சென்ற பிரேமலதா பழம் நழுவி பாலில் விழுந்திருக்கிறது; 10 ஆண்டுகளுக்கு முன்பு கலைஞர் ஐயா சொன்னது இப்பொழுது நிறைவேறி இருக்கிறது என்று பெருமிதம் தெரிவித்திருக்கிறார்.

ஆனாலும் இந்த தேமுதிக பழம் இப்பொழுது காய்ந்து சத்தும் சாரமும் இன்றி சுருங்கிக் கிடக்கிறது.

அதைப்போல 2013 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் சார்பில் ஆறு ராஜ்யசபா எம்பிகளுக்கான தேர்தல் நடைபெற்ற நேரத்தில், தங்கள் கட்சிக்கு உதவும்படி கலைஞர் வைத்த கோரிக்கையையும் தேமுதிக மிகமிக அலட்சியப்படுத்தி உதாசீனம் புரிந்தது.

2013 காலக்கட்டத்தில் திமுக, சோனியா காந்தி கிழித்தக் கோட்டைத் தாண்டாத ‘அடக்கமான பிள்ளையான’ மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் இடம்பெற்று இருந்தாலும் அரசியல் ரீதியாக ஒரு நெருக்கடியை எதிர்கொண்டு இருந்த நேரம் அது.

தோளில் கை போட்டுக் கொண்டே விலாப் பகுதியில் குத்துவதை வாடிக்கையாக கொண்ட காங்கிரஸ் கட்சி ராசாவுடன் கனிமொழியையும் சேர்த்து திகார் சிறையில் தள்ளியது;

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஊழலில் ஆ.ராசாவை சிக்க வைத்த வினோத் ராய் என்னும் கசடன், 175 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாக இராமாயண மகாபாரத புனை கதைகளைப் போல ஒரு அரசியல் புனைக் கதையை இயற்றி ராசா பதவி இழக்க காரணமானான்.

காங்கிரஸ் கட்சி, அதை ஒரு நல்வாய்ப்பாகப் பயன்படுத்தி ராசாவை சிறையில் தள்ளியது.

ராசாவிற்கு துணை இருந்ததாக கனிமொழியையும் சேர்த்து திகார் சிறையில் தள்ளியது புதுடெல்லி காங்கிரஸ் கூட்டணி அரசு.

தவிர கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தையும் கலைஞரின் துணைவியர் தயாளு அம்மாளையும் அதில் சிக்க வைக்க காங்கிரஸ் கண்ணி பின்னியது.

அந்த நேரத்தில் கனிமொழியின் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்(ராஜ்ய சபா எம்பி) பொறுப்பு நீடித்தால், அரசியல் ரீதியாக பாதுகாப்பு இருக்குமே என்று கருதித்தான், தன் மகள் கனி மொழியை எப்படியாவது இரண்டாவது தவணை நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் பொறுப்பில் தொடர விரும்பி அரும்பாடு பட்டார்.

முன்னதாக 2007 முதல் முதல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்த கனிமொழியின் ஆறாண்டு பதவிக்காலம் அந்த நேரத்தில் முடிவடைய இருந்தது.

ஒரு ராஜ்யசபா உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றால் தமிழக சட்டமன்றத்தைப் பொறுத்த வரையில் 34 அல்லது 35 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால் திமுகவிடம் இருந்ததோ 27 சட்டமன்ற உறுப்பினர்கள்தான்

இதனால் முதலில் பாமகவிடம் ஆதரவு கேட்டார் கலைஞர். பாமக தரப்பும் குறிப்பாக அதன் தலைவர் மருத்துவர் ராமதாசும் ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் காத்தனர்.

அந்த சூழலில்தான் மாற்று ஏற்பாடாக விஜயகாந்த்திடம் ஆதரவு கேட்டனர்.

அப்பொழுது கலைஞர் வெளிப்படையாக விஜயகாந்த்திற்கு வேண்டுகோள் வைத்தார். இந்த முறை எங்களுக்கு (திமுகவிற்கு) ஆதரவளித்து கனிமொழி நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகத் தொடர ஆதரவு கொடுங்கள்; அடுத்த முறை நாங்கள் உங்களுக்கு ஆதரவளித்து தேமுதிக சார்பில் ஒருவர் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக வருவதற்கு உதவி செய்கிறோம் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.

விஜயகாந்த்தும் ஆதரவு தருகிறோம் என்றோ அல்லது மறுக்கிறோம் என்றோ எதுவும் சொல்லாமல் பாமக பாணியிலேயே வஞ்சக மௌனம் புரிந்தார்; காலம் கடத்தினார்.

அந்த வேலையில்தான் வேறு வழியே இல்லாமல் ஏறக்குறைய காங்கிரஸ் கட்சிமீது பெரும் அதிருப்தி கொண்டு, விலகி இருந்த கலைஞர், வெட்கத்தை விட்டு காங்கிரஸ்வசம் இருந்த ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைக் கேட்டு சோனியாவிடமும் குலாம் நபி ஆசாத்திடமும் கோரிக்கை வைத்தார்.

அவர்களும் ஆதரவளிக்க முன் வந்தனர்.

இந்த நேரம் பார்த்து பாமக திமுகவிற்கு ஆதரவு அளிக்க முடியாது என்று தெரிவித்தது; அதே நேரம் பார்த்து தேமுதிகவும் நாங்களும் களத்தில் இறங்குகிறோம் என்று கீழே தள்ளிய குதிரை உதைத்தும் தள்ளியதைப் போல திமுகவிற்கு ஆதரவு தர மறுத்ததுடன் திமுகவை எதிர்த்து நாடாளுமன்ற மேலவைத் தேர்தலில் தன் கட்சி சார்பில் ஒருவரை (மைத்துனர் சதீஷை) களத்தில் இறக்குகிறோம் என்று அறிவித்தது

அந்த நேரத்தில் ஜெயலலிதா நினைத்திருந்தால் தேமுதிக வெற்றி பெற காய் நகர்த்தி இருக்கலாம்!

ஆனாலும் அவ்வாறு செய்யாமல் ஜெயலலிதா நடுநிலை வகித்தார்; நேர்மை காத்தார்.

இயல்பாக நடந்த அந்தவாக்கெடுப்பில் கனிமொழி வென்று இரண்டாம் முறையாக ராஜ்யசபா உறுப்பினர் ஆனார்.

அப்பொழுது தோற்ற சதீஷ் இதுவரை நாடாளுமன்ற மேலவைக்கு செல்லவே முடியவில்லை. சதீஷைவிட, அவரின் அக்காளும் தேமுதிகவை இன்று வழிநடத்துபவருமான பிரேமலதாதான், தன் தம்பி நாடாளுமன்ற மேலவைக்கு செல்ல வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்.

அந்த வாய்ப்பு, அதே திமுகவால் இப்பொழுது கை கூடி இருக்கிறது.

அரசியலில் அறம் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்னும் இளங்கோ அடிகளின் வரிகள் இப்பொழுது நினைவை எட்டுகிறது..

விஜயகாந்த் மறைவுக்குப் பின், அதிமுகவுடனும் பாஜகவுடனும் மாறி மாறி அரசியல் உறவு கொண்டிருந்த பிரேமலதா, இனி ஒருகாலும் திமுகவுடன் அரசியல் உறவு கொள்ள நேராது என்று உறுதியாக நினைத்து இருப்பார் போலும்.

அதனால்தான் முதல்வர் ஸ்டாலினின் கையில் நடுக்கம் தெரிகிறது என்றும் அதை மறைப்பதற்காகத்தான் வேட்டி கட்டுவதற்கு பதிலாக கால் சட்டை(பேண்ட்) அணிந்து கொண்டு அந்த பேண்ட் பைக்குள் கையைவிட்டு மறைத்துக் கொள்கிறார் என்று கீழ்த்தரமான கருத்தை தெரிவித்தார்.

இது ஏறக்குறைய, எம்ஜிஆர் சாவுக்கு ஜானகிதான் காரணம்; அவர்தான் மோரில் நஞ்சு கலந்து, அதை எம்ஜிஆருக்குக் கொடுத்து கொன்று விட்டார் என்று ஜெயலலிதா சொன்னதை போலத்தான் இதுவும் ஒரு கீழ்த்தரமான கருத்து.

பொதுவாக தேமுதிகவின் அரசியல் பயணமே அந்த நாள் முதல் இந்த நாள் வரை கீழ்த்தரமாகத்தான் இருக்கிறது.

தேமுதிக ஆட்சிக்கு வர வேண்டும் விஜயகாந்த் முதல்வராக வேண்டும் என்று விஜயகாந்தினும் மேலாக விரும்பியவர் தமிழருவி மணியன்.

இவருக்கு யார் தமிழருவி மணியன் என்று பெயர் சூட்டினாரோத் தெரியவில்லை; மாறாக இந்த மணியனுக்கு கன்னட அருவி மணியன் அல்லது தெலுங்கு அருவி மணியன் என்று பெயர் சூட்டியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.

திமுகமீது மாறாத வஞ்சம் கொண்டிருக்கும் இந்த மணியன், ரஜினிகாந்த் முதல்வரானால் தமிழ்நாடு சிறப்பாக இருக்கும் என்றார்;

அதற்கு முன்னதாக 1993 -94 காலக்கட்டத்தில் தமிழகத்தின் எதிர்கால அரசியல் நம்பிக்கை நட்சத்திரம் வைகோ என்றும் அவர்தான் தமிழகத்தை வழிநடத்த பொருத்தமான தலைவர் என்றும் கூறி அவர் பின்னால் சென்றார்; அதுவும் நடக்காத சூழலில், விஜயகாந்த் கட்சி ஆரம்பித்ததும் 2005க்கு பிறகு விஜயகாந்த்-தான் இனி தமிழகத்தின் ஆட்சியாளராக வரப் போகிறவர் என்று அவர் பின்னால் அணிவகுத்தார்.

எந்தவித அரசியல் கொள்கையோ சித்தாந்தமோ இல்லாமல் திரைப்படக் கவர்ச்சியை மட்டும் மூலதனமாக வைத்துக் கொண்டு தேர்தலுக்கு தேர்தல் எந்த கட்சி தேர்தல் செலவுக்காக அதிக நிதி கொடுக்கிறதோ; எந்தக் கட்சி அதிகமாக இடத்தை ஒதுக்குகிறதோ அந்தகா கட்சி பக்கம் தாவுவதற்காக, ஒரே நேரத்தில் இரு அணிகளுடனும் பேச்சு நடத்துகின்ற கீழ்த்தரமான அரசியல் போக்கு தேமுதிகவுக்கு இருப்பதைக் கண்டு வெகுண்ட தமிழருவி மணியன், “விஜயகாந்த் மாட்டு சந்தையில் மாட்டு வியாபாரியை போல நடந்து கொள்கிறார்” என்று பொறிந்து தள்ளிவிட்டு அந்த மட்டில் ஒதுங்கிக் கொண்டார்.

ஒரு மாப்பிள்ளைக்கு ஒரே நேரத்தில் இரு பெண்களைப் பார்க்கும் கீழான வேலையை தேமுதிக இன்றளவும் தொடர்கிறது.

பொதுவாக ஆசிய நாடுகளில் அரசியலுக்கு வருகின்ற பெண் தலைவர்கள் பெரும்பாலும் சோடை போனவர்களாகத்தான் இருக்கின்றனர்.

தமிழ்நாடும் இந்தியாவில்தான் இருக்கிறது என்பதை மறந்து, உண்மையை சொல்ல வேண்டும் எனில் இந்தியா உருவாவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே படை பலத்தோடு விளங்கிய நாடு தமிழ்நாடு என்பதையும் மறந்து அரசியல் காரணங்களுக்காக தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டு மக்களையும் வஞ்சித்தவர் இந்திரா காந்தி

இன்று தமிழ்நாட்டின் கடற்கரைவாழ் மீனவ சமுதாயம் அல்லல் படுவதற்கும் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து நிற்பதற்கும் கடற்கரைசார் மீன்வள பொருளாதாரம் நலிவுற்று இருப்பதற்கும் நெற்களஞ்சியம் என்று சொல்லப்படும் தஞ்சை காவிரி படுகை மண்டலம் வறண்டு கிடப்பதற்கும் இந்திரா காந்தியின் அரசியல் விரோதம்தான் காரணம்.

மொழி உரிமைக்காக உருவான நாடான வங்காள தேசத்தை மாறி மாறி ஆண்ட ஷேக் ஹசினா பேகமும் கலிதா ஜியாவும் ஏறக்குறைய சக்களத்தி சண்டையிட்டு அந்த நாட்டை ஒரு மதவாத நாடாக உருமாற்றிவிட்டனர்.

பாகிஸ்தான் பிரதமராக இருந்த பெனாசிர் புட்டோ, தன் தந்தை, தூக்கிலிடப்பட்டதை சிறுமியாக இருந்து அவதானித்தவர்.

அப்படிப்பட்டவர் ஆட்சிக்கு வந்த பொழுது புரிந்த லஞ்ச லாவண்யத்திற்கு அளவே இல்லை.

பிலிப்பைன்ஸ் நாட்டை ஆண்ட அகினோவும் ஏறக்குறைய ஜெயலலிதாவைப் போல ஆயிரக்கணக்கான செருப்பு மழையை சேமித்தவர்; கோடிக்கணக்கான பொதுமக்கள் சொத்தையும் சேகரித்து கடைசியில் சிறுமைக்கு ஆளானவர்.

மியன்மார் தலைவி ஆங் சான் சூ கி மட்டும் அநாகரிக அரசியல் கருத்தை வெளியிட்டதாகவோ கையூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டதாகவோ இதுவரைத் தெரியவில்லை.

இத்தனைக்கும் அவர்மீது அவரின் அரசியல் எதிரிகளால் அநியாயமாக பழிசுமத்தும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.

ஆங் சான் சூ கீயைத் தவிர்த்து மற்ற பெண் தலைவர்களின் வரிசையில்தான் பிரேமலதாவும் இருக்கிறார்.

ஒருவேளை இவர் பத்தாண்டுகளுக்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவராக வந்திருந்தால் தமிழக அரசியல் களம் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்தால் மிராட்சியாக இருக்கிறது.

அப்பொழுது அவர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் திமுகவுடன் சேர்ந்து இருந்தால் எப்படியும் 40 இடங்களுக்குக் குறையாமல் வெல்லும் வாய்ப்பு இருந்தது.

தேர்தலுக்குப் பின், தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் யாராவது ஒருவரை பதவி விலக வைத்து அதன்வழி இடைத்தேர்தல் மூலம் இவர் சட்டமன்றத்திற்கு சென்று எதிர்க்கட்சித் தலைவராக உருவாகி இருக்கும் அரசியல் வாய்ப்பை அடியோடு மறுப்பதற்கு இல்லை.

ஒருவேளை அவ்வாறு நடைபெற்றிருந்தால், ஏறக்குறைய அடிமை இடைப்பாடி பழனிசாமி அத்தியாயமே உருவாகி இருக்காது.

எல்லாமும் கடந்துவிட்டன; நடந்தவை யாவும் நன்மைக்கோ என்று இப்போது நினைக்கத் தோன்றுகிறது.

இந்த நிலையில்தான் மூன்று தினங்களுக்கு முன்பு அறிவாலயத்திற்கு நேரில் சென்ற பிரேமலதா ஸ்டாலினுடன் நெருங்கி பேசினார். இருவரும் ஒருவருக்கொருவர் வணங்கி மகிழ்ந்தனர்! மரியாதை நிமித்தம் மலர்மாலை தாம்பூலமும் பரிமாறப்பட்டது.

அதனால்தான் அறிவாலயத்தில் அருகில் இருந்து முதல்வரை சந்தித்தாரே அப்பொழுது அவரது கையை அவதானித்தாரா, முதல்வரின் கை நடுங்குகிறதா என்பதை நேரில் பார்த்தாரா என்று பிரேமலாதாவை நோக்கி கேட்கத் தோன்றுகிறது.

இனியாவது பிரேமலதா பக்குவமும் கனிவான போக்கும் நோக்கும் பெறட்டும்.

எப்படியோ திமுக ஆதரவில் தன் தம்பியை, எம்பி ஆக்கி நாடாளுமன்ற மேலவைக்கு அனுப்பும் பொன்னான வாய்ப்பை பிரேமலதா பெற்று இருக்கிறார்.

சட்டமன்றத் தேர்தலில் கிடைக்கின்ற அத்தனை தொகுதிகளிலும் வென்று தேமுதிகவை சிறப்பாக வழிநடத்த குமரி நல்லாள் வாழ்த்துகிறாள்!

வாழ்க பிரேமலதா!
வளர்க தேமுதிக!!

2005 செப்டம்பர் மாதம் மதுரையில் பிரமாண்ட மாநாட்டில் தேமுதிகவை தொடங்கினார் விஜயகாந்த்
2006 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட தேமுதிக 8.4% வாக்குகளை பெற்றது. விருத்தாசலத்தில் விஜயகாந்த் வெற்றி பெற்றார்.
2009 நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு 10% வாக்குகளை பெற்றது தேமுதிக.
2011-இல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 7.9% வாக்குகளைப் பெற்ற தேமுதிக 29 இடங்களில் வெற்றி பெற்றது.
2016-இல் மக்கள் நலக் கூட்டணியில் 2.6% வாக்குகளை தேமுதிக பெற்றது.
2021-இல் அமமுகவுடன் கூட்டணி சேர்ந்து 0.4% வாக்குகளை தேமுதிக பெற்றது.
2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக 2.6% வாக்குகளை பெற்றிருந்தது.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை