Friday, April 17, 2026

ஐயா தோழர் நல்லகண்ணு இயற்கையைக் தழுவினார்! -மல்லை சத்தியா

பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர் ஆர்.என்.கே. என்று அன்போடு அழைக்கப்படும்
தகைசால் தமிழர் தோழர் தலைவர் அய்யா நல்லக்கண்ணு இயற்கையை தழுவினார் என்பதை ஏற்க மறுக்கிறது இதயம்

இந்தியாவில் பொதுவுடைமை இயக்கம் தோன்றிய 1925 டிசம்பர் 26 அன்று பிறந்தார் நூற்றாண்டு கடந்து ஒரு சகாப்தத்தின் சாட்சியாக நூறுவயது கடந்து வாழ்ந்தவர்

மக்கள் நலன் சார்ந்த போராட்டத்தை முன்னெடுத்த அவர், நெடிய ஒட்டத்தை முடித்துக் கொண்டார் அவரின் இழப்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு மட்டுமல்ல அறம் சார்ந்த இந்திய அரசியலுக்கே ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.

தோழர் நல்லகண்ணு நாட்டு விடுதலைக்கான போராட்டம்; தலைமறைவு வாழ்க்கை; சிறை சித்திரவதை என்று தியாக வேள்வியில் புடம் பெற்றவர்.

விடுதலைக்குப் பின்பும் ஏகாதிபத்திய பாசிச எதிர்ப்பு தமிழ் நாட்டின் ஜீவாதார உரிமை, சுற்றுச்சூழல் என்று போராட்டம் நிறைந்த பொதுவாழ்வை தனதாக்கிக் கொண்டவர்

தமிழ் நாட்டு அரசியலில் அடக்கத்தை அணிகலனாகக் கொண்டு அறம் சார்ந்த அரசியலை கருத்தியல் மாறாமல் முன்னெடுத்தவர்.

அய்யா நல்லக்கண்ணுவுடன் பல போராட்டங்கள், பொதுக்கூட்டங்களில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றவன் நான்.

குறிப்பாக பாலாறு தடுப்பணை போராட்டம், கருத்தரங்கம், கூடங்குளம் அணு உலைப் போராட்டம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் ஈழத் தமிழர்கள் ஆதரவுப் போராட்டம், புத்தக வெளியீட்டு விழாக்கள் என்று பங்கேற்று பேசி அவரின் பாராட்டை- தோழமையைப் பெற்றவன்

அவர் சொல்வார் போராட்டத்தின் கருப்பொருளை உள்வாங்கி அதன் தொடர்புடைய செய்திகளை சர்வதேச பார்வையில் பேசுகின்றாய் நன்றாக தயாராகி வருகின்றாய் என்று பாராட்டினார்.

என்னுடைய கட்டுரைகளை படித்துவிட்டு அலைபேசியில் அழைத்துப் பாராட்டுவார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு காந்திய மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் ‘நினைவில் வாழும்’ வழக்கறிஞர் கணேசனின் இல்ல விழாவில் பங்கேற்க திருச்சி மாவட்டம் துறையூர் சென்று இருந்தேன்; நாங்கள் தங்கி இருந்த விடுதியில்தான் அய்யா நல்லக்கண்ணுவிற்கும் அறை ஒதுக்கப்பட்டு இருந்தது.

திருமணத்திற்கு முன்னாள் மாலை அய்யா நல்லக்கண்ணு வந்தார்; ஓடிச்சென்று வரவேற்றேன். அவரின் அறைக்கு அழைத்துச் சென்றனர் அது குளிர்சாதன வசதி கொண்ட அறை;

அறைக்கு உள்ளே சென்று பார்த்து விட்டு வேறு அறை இருக்கிறதா என்று கேட்டார்.

உடன் இருந்தவர்கள் நினைத்தது, இதைவிட பெரிய அறையை விரும்புகிறறோ என்று; அதைவிட கொஞ்சம் வசதியான அறையை காட்டியபோது எனக்கு இதைப் போன்ற குளிருட்டப் பட்ட அறை வேண்டாம்; மின்விசிறி மட்டும் கொண்ட அறை இருந்தால் கொடுங்கள். இல்லை என்றால் நான் திருச்சி சென்று எங்கள் கட்சி அலுவலகத்தில் தங்கி, நாளை காலை திருமணத்திற்கு வருகின்றேன் என்றார்

‘அய்யா தங்க வேண்டும் என்று விரும்பி இந்த விடுதியில் அறை எடுத்து உள்ளோம்’ என்றபோது,

அவர் சொன்னார் “நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதற்காக என்னை நான் மாற்றிக் கொள்ள முடியாது:
நாங்கள் இது போன்ற சொகுசு வாழ்க்கைக்கு பக்குவப் படவில்லை; இதோ என் கையில் இருக்கும் பை; இதில் நாளை நான் அணிந்து கொள்ள நான்கு முழம் கதர் வேட்டி சட்டை;

நான் தற்போது அணிந்து இருக்கும் இந்த வேட்டி சட்டையை துவைத்து உலர்த்தி நாளை மறுநாள் பயன்படுத்த வேண்டும். குளிரூட்டப்பட்ட அறையில் துணி உலராது என்று சொன்னார்.

எளிமை எளிமை எளிமை இதுதான் அய்யா நல்லக்கண்ணுவின் வாழ்க்கை

எப்போது அவரை நான் பார்க்க நந்தனம் அரசு குடியிருப்புக்கு சென்றாலும் புன்முறுவலுடன் வரவேற்று பொன்னாடை அணிவித்து புத்தகங்கள் கொடுத்து மனம் குளிர்ந்து பேசி தோழமையோடு வாழ்த்தி அனுப்புவார்.

கடைசியாக நான் சென்றபோது என்னுடைய 32 ஆண்டுகால அரசியல் பொதுவாழ்கை, கேள்விக் குறியாக்கப்பட்டு இருந்த காலகட்டம்;

என்னை ஆற்றுப் படுத்தினார்; “உன் மீது நம்பிக்கை வை” என்று சொன்னார்.

ஹோசிமின் தலைமையில் புரட்சி வெற்றி பெற்ற வியட்நாம் நாடு சென்று வந்ததைக் குறித்து நான் எழுதிய நூலை வழங்கினேன்.

மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டு அறைக்கு உள்ளே சென்று சால்வையைக் கொண்டு வந்து போர்த்தி என் தலையில் கைவைத்து வாழ்த்தினார்.

நான் விடைபெற்ற போது மெதுவாக நடந்து ஜன்னல் கம்பியை பிடித்துக் கொண்டு நான் அவரின் பார்வையிலிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டே இருந்தார்.

அய்யா நல்லக்கண்ணு ஒரு நூற்றாண்டின் அதிசயம். இப்படிப் பட்டவர்கள் இந்திய அரசியலில் இருந்தார்கள் என்று சொன்னால் எதிர்கால தலைமுறை நம்ப மறுக்கும் என்பதால் இதை என்னுடைய வாக்குமூலமாக – சாட்சியாக பதிவு செய்கின்றேன்

இயற்கையோடு இணைந்த தோழர் தலைவர் அய்யா நல்லக்கண்ணுவிற்கு என் செம்மார்ந்த வீரவணக்கம்

என்றும் மறுமலர்ச்சிப் பாதையில்

மல்லை சி ஏ சத்யா
தலைமை ஒருங்கிணைப்பாளர் திராவிட வெற்றிக் கழகம்
25 02 2026

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை