Thursday, April 16, 2026

அன்வார் ஆட்சியில் இன-மத வெறுப்புப் பிரச்சாரம்: நாட்டின் நிலைத்தன்மைக்கு பெரும் அச்சுறுத்தல்

மலேசியாவின் தற்போதைய அரசியல் சூழலில், பிரதமர் அன்வார் இப்ராகிம் தன் பதவியைத் தற்காத்துக் கொள்வதற்காக இன-மத உணர்வுகளை தூண்டி, சமூகத்தில் பிளவை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது தெளிவாகிறது என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தலைவர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அன்வார் இப்ராகிம், இந்து கோவில்கள் மற்றும் பன்றிப் பண்ணைகள் தொடர்பான பிரச்சினைகளை மீண்டும் எழுப்பி, மலாய் முஸ்லிம் வாக்காளர்களைக் கவர முயற்சிக்கிறார். அத்துடன், அவரது பேச்சு, மலாய் சமூகத்தில் அச்சம் மற்றும் கோபத்தை தூண்டுவதற்கான திட்டமிட்ட முயற்சியாகத் தெரிகிறது.

சீன, இந்திய சமூகங்களின் ஆதரவை தற்பொழுது இழந்துவிட்ட நிலையில், அவர் தலைமையிலான பிகேஆர்கட்சி, வரும் பொதுத் தேர்தலில 31 கலப்பு நாடாளுமன்றத் தொகுதிகளை இழக்கும் அபாயத்தில் உள்ளது.

இந்தச் சூழ்நிலையில், பாஸ், அம்னோ, பெர்சத்துக் கட்சிகள் அன்வாரின் இன-மத அரசியல் விளையாட்டில் சிக்காமல், பொறுமையுடன் தங்கள் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்று சட்ட வல்லுநருமான அவர், இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

அன்வார், தான் வகிக்கும் பிரதமர் பதவியை சூழ்ந்துள்ள பல்வேறு சட்ட சிக்கல், ஊழல் குற்றச்சாட்டுக்களால் மக்கள்மனதில் எழுந்துள்ள தாக்கத்தை உடைமாற்ற அன்வார் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் என்று ஹிண்ட்ராஃப் தலைவருமான பொன். வேதமூர்த்திஎ குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் கடந்த இரண்டு மாதங்களாக இன-மத வெறுப்புக் கருத்து பரவுகிறது. ‘மே 13 போன்ற கலவரம்’ ஏற்படுத்த வேண்டுமா? ஆலயங்களில் குண்டு வீச வேண்டுமா என்றெல்லாம் அச்சுறுத்தும் கருத்துகள், சமூக ஊடகத்தில் தெரிவிக்கப் படுகின்றன.

இத்தகைய போக்கு, நாட்டின் அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்.

இந்து கோவில் பிரச்சினைகள் வரலாற்றின் அடிப்படையிலும் சட்டப்படியும் வெளிப்படையாக ஆய்வு செய்யப்பட வேண்டும்; பிரிட்டிஷ் கால குடியேற்றக் கொள்கை, நிலச் சட்டம், சுதந்திரத்திற்குப் பிந்தைய வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்; இந்திய சமூகத்தின் நீண்டகால புறக்கணிப்பைச் சரிசெய்ய முழுமையான தீர்வு தேவை என்று வலியுறுத்தியுள்ள முன்னாள் அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி,

அன்வார் இப்ராகிம் தன் பதவியைத் தற்காத்துக் கொள்வதற்காக இன-மத உணர்வுகளைத் தூண்டி, நாட்டை ஆபத்துக்குள் தள்ளுவதால், பாஸ், அம்னோ,. பெர்சத்துக் கட்சிகள், அவரின் வஞ்சக அரசியல் வலையில் சிக்காமல், நல்ல திட்டமிடலுடன் 16-ஆவது பொதுத்தேர்தலை நோக்கிச் செல்ல வேண்டும் என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை