Thursday, April 16, 2026

ஆலயங்களை கண்காணிக்க போலீஸ் ஏவல்: -அன்வார்மீது பொன். வேதமூர்த்தி காட்டம்!

பிரதமர் அன்வார், இந்து கோவில்களைக் கண்காணிக்க போலீஸை ஏவியிருப்பது, அதிகார அத்துமீறல் என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்.ஏ.பி. தலைவர் பொன். வேதமூர்த்தி கடுமையாக கண்டித்துள்ளார்.

இத்தகைய நடவடிக்கை, இந்து சமுதாயத்தை அச்சுறுத்தும் நோக்கத்தையும்
புறக்கணிக்கும் தன்மையையும் கொண்டது.

கோவில்களுக்கு
போலீஸை அனுப்புவது, பிரதமரின் அரசியல் தோல்வியையும் ஊழல் சர்ச்சையையும் மறைக்க செய்யப்படும் சதித் திட்டமாகும்.

அரசியல் ஆதாயத்திற்காகவும் மக்களின் கவனத்தை திசை திருப்பவும் மதத்தை ஒரு கருவியாக பயன்படுத்தக் கூடாது; அதைப்போல
சட்ட அமலாக்க அமைப்புகள் அரசியல் செய்திகளை பரப்பும் மையங்களாக உருமாறக்கூடாது; இத்தகைய போக்கு ஜனநாயக விரோதமானது என்று ஹிண்ட்ராஃப் தலைவருமான பொன் வேதமூர்த்தி சாடி உள்ளார்.

மலேசியாவின் பல இன பாரம்பரிய கூட்டு சமுதாயத்தில் ஒற்றுமை மற்றும் அமைதியை நிலைநிறுத்த விரும்பினால், மத-இன வெறுப்பு பேச்சுகளை வெளிப்படையாகப் பேசும் நபர்களை போலீஸ் தடுக்க வேண்டும். ஆனால், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், கோவில்களை சந்தேகத்திற்கு இடமான வகையில் காட்சிப்படுத்துவது இந்து சமுதாயத்தில் ஆழ்ந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது என்று சட்ட வல்லுநருமான பொன். வேதமூர்த்தி எச்சரித்துள்ளார்.

“ஒற்றுமையைப் பேணுவதாகக் கூறும் அரசு, சமுதாயத்தில் நம்பிக்கையின்மையை விதைக்கும் நடவடிக்கையை மறைமுகமாக ஏற்படுத்தக் கூடாது.

“மலேசியாவில் நிலவும் அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் மக்கள் அரசாங்கத்தையே நம்பி இருக்கும் பொழுது, இத்தகைய நடவடிக்கைகள் நாட்டின் எதிர்காலத்திற்கும் கூட்டு சமுதாயத்திற்கும் நல்லதல்ல என்று முன்னாள் அமைச்சருமான பொன் வேதமூர்த்தி எச்சரித்துள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை