
தன்னையும் பொன். வேதமூர்த்தியையும் சந்திக்க வைத்தது மனித உரிமைப் போராட்டம் என்று இந்தியாவின் சட்டத்துறை தலைவர் (அட்டர்ணி ஜெனரல்) குறிப்பிட்டார்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் கணியன் பூங்குன்றனாரின் வரிகளுக்கு ஏற்ப தமிழர்கள் உலக நாடுகள் பலவற்றிலும் பரவி வாழ்கின்றனர். அந்த வகையில் இந்த மலேசியாவிலும் தமிழர்கள் வாழ்கின்றனர்.
மலேசியத் தமிழர்களை பற்றி கடந்த நூற்றாண்டில் 60-70 ஆம் ஆண்டுகளில் ஏடுகளில் பரவலாக செய்திகள் வரத் தொடங்கின. குறிப்பாக, அகிலன் எழுதிய ‘பால் மர காட்டினிலே..!’ என்னும் நூல் குறிப்பிடத்தக்கது என்றார்.
அலுவல் காரணமாக பல்வேறு நாடுகளுக்கு சென்றிருந்தாலும் மலேசியப் பயணம் கூடுதலான மகிழ்ச்சியை அளிக்கிறது;
“நான் தனிப்பட்ட மனிதனாக இங்கு வந்திருந்தால் பல்வேறு அம்சங்கள் குறித்து எல்லையின்றி பேசலாம்; இந்தியாவின் சட்டத்துறை தலைவர் என்ற முறையில் வந்திருப்பதால் எனக்கு சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. இருந்த போதும் ஒரு சராசரி தனி மனிதன் என்னும் வகையில் ஒரு சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்”.
இந்தியாவின் சட்டத் துறை தலைவராக பொறுப்பு ஏற்பதற்குமுன், பன்னாட்டு அளவில் மனித உரிமைக்காக போராடிய காலத்தில் பொன்.வேதமூர்த்தியின் அறிமுகமும் நட்பும் வாய்த்ததாகக் கூறினார்.
உலக பொதுமறை நூலான திருக்குறளைப் பற்றி பேசாவிட்டால் அது தமிழ் உரையாடலுக்கு பொருத்தமாக இருக்காது.
“குணநலம் சான்றோர் நலனே- பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று”.(982)
என்ற குறள் ஓர் உன்னதமான குறள்.
சான்றோருக்கு அழகு, நற்பண்புதான் என்று திருவள்ளுவர் சொல்லி இருக்கிறார் என்று குறிப்பிட்ட, வெங்கட்ட ரமணி, தொடர்ந்து ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினார்.

முன்னதாக தலைமையுரை ஆற்றிய பொன். வேதமூர்த்தி, மலேசிய இந்திய தொழிலாளர் சமூகத்தின் சார்பில், வெங்கட்டரமணிக்கு வரவேற்பு தெரிவித்தார்.
“நீதியின் தூணாக விளங்கும் சிறந்த சட்ட அறிஞர் ஒருவர், நம்மிடையே இருப்பது பெருமைதரக் கூடியது”.
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன், அன்பு நண்பர் ஸ்ரீ ராஜேஷ் கோக்னா மூலம், புது டெல்லியில் அறிமுகம் ஆனதிலிருந்து வெங்கட்ட ரமணியுடன் தொடரும் நட்பு பொருள் பொதிந்தது என்று மலேசிய முன்னேற்றக் கட்சித் தலைவருமான பொன்.வேதமூர்த்தி தன் உரையில் குறிப்பிட்டார்.
மலேசிய இந்திய தொழிலாளர் சமூகத்தின் நீதிக்கான தங்கள் பயணத்தில் தோள்கொடுத்து, தொடர்ந்து துணை நிற்பதற்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவிப்பதுடன், இந்தியாவின் சட்டத்துறைத் தலைவராக, இன்னும் உயர்ந்த நிலையை எட்டவும் பணிசிறக்கவும் வெங்கட்ட ரமணிக்கு பாராட்டுத் தெரிவித்த ஹிண்ட்ராஃப் தலைவருமான பொன். வேதமூர்த்தி, இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த தன் சகோதரரும் வழக்கறிஞருமான கார்த்திகேசன் சண்முகத்திற்கு நன்றி தெரிவித்தார்.
அதற்கும் முன்னதாக வரவேற்புரை ஆற்றிய கார்த்திகேசன் சண்முகம், இந்திய சட்டத்துறைத் தலைவர் ஆர்.வெங்கடராமணி,
மலேசிய ஒற்றுமைத் துறை மேநாள் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி சட்டத் துறை சார்ந்த உறுப்பினர்கள், இந்திய சமூகத் தலைவர்கள் உள்ளிட்ட அனைவருக்கு வரவேற்பு தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சி சாதாரண ஒன்றுகூடல் அல்ல; சமூகத் தலைவர்கள், தொழில்முனைவோர், பொதுமக்கள் அனைவரும் ஒரே அரங்கத்தில் சங்கமிக்கும் அர்த்தமிக்க தருணம் என்றார்.
“சட்டத் துறை பணி என்பது ஒரு தொழில் மட்டுமல்ல; அது ஒரு பொறுப்பு. நீதியை நிலைநாட்ட, மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க,
சமூகத்துக்கு நேர்மையுடனும் தைரியத்துடனும் சேவை செய்யும் பொறுப்பாகும்.
இத்தகைய நிகழ்ச்சிகள், உரையாடல், கருத்துப் பரிமாற்றம் யாவும்
தேச எல்லையைக் கடந்து சமூகங்களிடையே உறவை வலுப்படுத்த உதவும். வேகமாக மாறும் இன்றைய உலகில்,
சட்டத் துறையினர் தங்களின் கடமைக்கு அப்பால்,
சமூக முன்னேற்றத்திற்கும் அடித்தளம் இடுபவர்கள்., நீதியின் காவலர்களாகவும் குரல் இல்லாதவர்களின் குரலாகவும் அவர்கள் விளங்குகின்றனர். ஒற்றுமை, புரிந்துணர்வு, ஒத்துழைப்பு மூலமே நாம் முன்னேற முடியும் என்று மனித உரிமை ஆர்வலரும் கார்த்திக் & ஷான் சட்ட நிறுவனத்தின் நிறுவனருமான கார்த்திகேசன் சண்முகம் பேசினார்.
இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த பொன்.வேதமூர்த்தி முன்னிலை வகிக்க கார்த்திகேசன் சண்முகமும் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்றார்.
சீன அசெம்பிளி மண்டபத்தில், கடந்த வெள்ளிக்கிழமை ஏப்ரல் 3-ஆம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அதிகமான பெண்களும் கலந்து கொண்டனர்.


