
கோலாலம்பூர் ஏப் 19-
மிம்தா எனப்படும் மலேசிய இந்தியர் உலோகப் பொருள் மறுமலர்ச்சி வர்த்தகர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் எதிர் நோக்கிய அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சனைக்கு தீர்வு கண்ட மடானி அரசுக்கு மிம்தா செயலாளர் முத்தப்பன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
கடந்த 13 ஆண்டுகளாக அந்நியத் தொழிலாளர்கள் இல்லாமல் மிம்தா உறுப்பினர்கள் பெரும் அவதியை எதிர்நோக்கினர்.
மடானி அரசாங்கத்தின் பார்வைக்கு இந்த பிரச்சனையை கொண்டு சென்று தீர்வு காண பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இறுதியாக எங்கள் முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.
சுமார் 2,000 க்கும் மேற்பட்ட அந்நியத் தொழிலாளர்கள் மிம்தா உறுப்பினர்களுக்கு கிடைத்துள்ளது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று அவர் சொன்னார்.

இந்த தருணத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், உள்துறை அமைச்சு, மனிதவள அமைச்சு மற்றும் மடானி அரசுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார் அவர்.
இதனிடையே வெளிநாட்டு தொழிலாளர்கள் லைசென்ஸ் இல்லாமல் உலோக பொருள் மறுமலர்ச்சி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
மிம்தா உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏன் அந்நியத் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது இல்லை என்று அவர் கேள்வியை எழுப்பினார்.
ஆகவே அந்நியத் தொழிலாளர்கள் மீதும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.
இன்று கோலாலம்பூர் லேக் கிளப் ஹவுஸில் மிம்தாவின் 25 ஆம் ஆண்டு பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பிறகு ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய போது முத்தப்பன் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


