
வாஷிங்டன் ஹில்டன் தங்கும்விடுதியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடக விருந்தின்போது, முன்னிரவு 8:35 மணி அளவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த அமெரிக்க ஆதிபர் டொனால்ட் டிரம்ப், அவரின் மனைவி மெலானியா டிரம்ப் மற்றும் பல உயர்மட்ட அதிகாரிகள் உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகளால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
ஆயுதம் தாங்கிய ஒரு நபர் பாதுகாப்பு சோதனைப் பகுதியில் ஊடுருவ முயன்றபோது, ரகசிய சேவை (Secret Service) அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி அவரை கட்டுப்படுத்தினர். அந்த நபர் ‘தனித்து செயல்பட்டவர்’ எனவும் அதிகாரிகள் பின்னர் தெரிவித்தனர்.
அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ், எஃப்.பி.ஐ இயக்குநர் கஷ் படேல் உட்பட இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்த பல மூத்த அதிகாரிகளும் அங்கிருந்து பத்திரமாக மீட்கப்பட்டனர்.

அதிபர் டிரம்ப், மெலனியா மற்றும் ரகசிய சேவை அதிகாரிகள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் பாதுகாப்பாக இருக்கிந்றனர் எனவும் அமெரிக்க கமுக்க சேவைப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் அந்தோணி குக்ளிமெலி தெரிவித்தார்.
முதலில் டிரம்பும் அவரின் மனைவி மெலனியாவும் அங்கிருந்து மீட்கப்பட்டு பக்கத்தில் இருந்த அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதன் பிறகு அந்த விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். டிரம்பைத் தொடர்ந்து இதர அமெரிக்க அதிகாரிகளும் அங்கிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். டிரம்புடன் அவரின் தலைமை ஆலோசகர் ஸ்டிபன் மில்லர் உட்பட பல மூத்த அதிகாரிகளும் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர்.
டிரம்பை வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்விடம் மற்றும் விடுதி முழுவதும் பாதுகாப்பு அதிகாரிகளின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்பட்டது. ஹில்டன் விடுதிக்கு வெளியே காவல் துறையினர் பெரும் எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டனர்.
சந்தேக நபர் கலிஃபோர்னியாவின் டோரன்ஸ் பகுதியைச் சேர்ந்த 31 வயதான கோல் தாமஸ் ஆலன் எனத் தெரிய வந்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அந்த நிகழ்வு நடைபெற்ற விடுதியில் அவர் விருந்தினராக தங்கியிருந்ததாகவும் அவர் தங்கியிருந்த அறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் வாஷிங்டன் காவல்துறை தலைவர் ஜெஃப்ரி வி கேரல் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபரின் நோக்கம் தற்போது வரை தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவரிடம், ஒரு கைத்துப்பாக்கியுடன் கத்திகள் உட்பட பல்வேறு ஆயுதங்கள் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ரகசிய சேவை வீரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் ஜெஃப்ரி கூறினார்.
ஜனாதிபதி டிரம்ப் பின்னர் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், “இது ஒரு ‘கொலை முயற்சி” எனக் கருதுவதாகத் தெரிவித்தார். கமுக்க பாதுகாப்பு அதிகாரிகள் மிகுந்த வீரத்துடன் செயல்பட்டனர் என்றும் அவர் கூறினார்.
சம்பவத்தின் போது ஓர் அதிகாரி துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளானதாகவும், அவர் படுகாயமடையவில்லை என்றும் டிரம்ப் தெரிவித்தார். நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் பாதுகாப்பு குறைபாடு இருந்துள்ளது என டிரம்ப் குறிப்பிட்டார்.
இந்த முறை துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தபோதும், இதே ஊடக விருந்தை மீண்டும் ஒரு மாதத்திற்குள் நடத்த திட்டமிட்டுள்ளதாக அதிபர் டோனால்ட் அறிவித்தார்.
அதிபர் டிரம்ப்மீது, மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது கொலை முயற்சி இதுவென அமெரிக்க உயர் பாதுகாப்பு அதிகாரிகள் வட்டத்தில் பேசப்படுகிறது.
டோனால்ட் டிரம்ப் 2-ஆவது தவணையாக அதிபர் பதவிக்கு போட்டியிட்ட பொழுது, ஒரு பரப்புரை சம்பவத்தில் மேடையில் உரை ஆற்றிக் கொண்டிருந்த நேரத்தில், தொலைவில் ஒரு கட்டடத்தில் இருந்து அவர்மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கி ரவை டிரம்பின் காதைத் துளைத்துச் சென்ற நிலையில் இரத்தம் வழிய அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
அப்படியானால், இந்த சம்பவம் அவர்மீது ஏவப்பட்ட இரண்டாவது கொலை முயற்சி என்ற அடிப்படையில் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் அடுத்தக் க்ட்டமாக மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர்.


