
2026 ‘மிஸ் கூவாகம்’கோவை சூர்யா’
விழுப்புரத்தில் நடைபெற்ற 2026 ‘மிஸ் கூவாகம்’ அழகிப் போட்டியில் தமிழ்நாடு கோவையை சேர்ந்த சூர்யா முதலிடம் பெற்றார்; இரண்டாவது இடம் மலேசியாவைச் சேர்ந்த நீஷாவிற்கு சூட்டப்பட்டது.
திருநங்கைகளுக்காக விழுப்புரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் கூவாகம் திருவிழா தற்பொழுது தமிழ்நாட்டு எல்லையைக் கடந்து உலக அளவில் புகழ்பெற்று வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டைக்கு அருகில் உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் திருநங்கைகளுக்கான சித்திரைத் திருவிழா நேற்றைய முன்தினம் வழக்கமான உற்சாகத்துடன் தொடங்கியது.
இந்தத் திருவிழாவின் முக்கியக் கூறாக ‘மிஸ் திருநங்கை’, ‘மிஸ் கூவாகம்’ ஆகிய அழகிப் போட்டிகள் இடம் பெறுவது வழக்கம்.
தேசிய திருநங்கைக் கூட்டமைப்பின் சார்பில் இந்த அழகிப் போட்டிகள் நடத்தப்பட்டன.

நேற்றைய முன் தினம் நடைபெற்ற திருநங்கை அழகிப் போட்டியில் சென்னையை சேர்ந்த ஓமனா அழகிப் பட்டம் வென்றார்.
நேற்று நடைபெற்ற மிஸ் கூவாகம் அழகி போட்டியில் ஒய்யாரத் தோற்றத்துடன் அன்னநடை நடந்த அழகு திருநங்கையர், கூட்டத்தில் திரண்டு இருந்தோரின் பாராட்டை கையொலி மூலம் பெற்றனர்.
தொடர்ந்து மிஸ் கூவாகம் அழகிப் போட்டி மிக கடுமையாக நடைபெற்றது. ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் ஏராளமான திருநங்கையர் இந்த போட்டியில் பங்கு பெற்றதால் நடுவர்க் குழுவினர் திக்குமுக்காடினர்.

போட்டி கடுமையாக இருந்தாலும் முதல் இடத்தை கோவையைச் சேர்ந்த சூர்யா வென்ற வேளையில் மலேசியாவின் நிஷா இரண்டாம் இடத்தை தட்டிச் சென்றார். மூன்றாம் இடம் புதுச்சேரியை சேர்ந்த அனன்யா என்ற திருநங்கைக்கு சென்றது.
இந்த திருவிழாவின் மிக முக்கிய அங்கமாக திருநங்கையர் அனைவரும் இன்று செவ்வாய்க்கிழமை மாலையில் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் தாலி கட்டிக் கொள்வர். நாளை புதன்கிழமை காலையில் தாலி அறுக்கும் நிகழ்வும் இடம்பெறும். இத்தருணத்தில் திருநங்கையர் எழுப்பும் குலவையொலி கலந்த ஒப்பாரி சத்தம் சோகத்தின் உச்சத்தைத் தொடும்

அதனை தொடர்ந்து நடைபெறும் தேரோட்டம் இந்த விழாவின் முத்தாய்ப்பான அங்கமாகவும் நிறைவுக் கட்டமாகவும் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.


