Friday, September 18, 2026

பக்கத்து இலைக்கு பாயசம் கேட்கும் திருமாவளவன்-வீரபாண்டியன்!

தனிக் கட்சி ஆட்சியோ, கூட்டணி ஆட்சியோ எதுவாக இருந்தாலும் அல்லது எந்த மாநிலமாக இருந்தாலும் அந்த மாநில சட்டமன்றத்தில் தங்கள் தரப்பிற்கு பெரும்பான்மை இருக்கிறது என்ற ஆதாரத்தை உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட ஆளுநரிடம் வழங்கி, புத்தாட்சி அமைக்க ஆதரவு கோர வேண்டும்.

இதுதான் ஜனநாயக நடைமுறை; அரசியல் சாசன முறையும்கூட; அதைவிட நடைமுறையில் இருக்கும் அரசியல்-நிருவாகப் பாங்கு.

அதேவேளை, தனிக்கட்சி பெரும்பான்மை என்றால் அதில் ஏதும் ஐயத்திற்குரிய அம்சமோ அல்லது தனிப் பெரும்பான்மை இருந்தும் கட்சியில் பிளவு போன்ற உள்விவகாரங்களால் ஏதும் சந்தேகத்திற்குரிய கூறுகளோ இல்லாவிடில், பெரும்பான்மையை நிரூபிக்கும்படி எந்த ஆளுநரும் ஆட்சி அமைக்க முனையும் எந்த சட்டமன்றக் கட்சித் தலைவரையும் கேட்க மாட்டார். ஆணையும் இடமாட்டார்.

மாறாக, கூட்டணி ஆட்சி என்றால், என்னதான் பேரளவுப் பெரும்பான்மை என்றாலும்கூட, பதவி ஏற்க அனுமதித்துவிட்டு, குறிப்பிட்ட காலத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர் கேட்டுக் கொள்வார்.

தவிர, ஓர் ஆட்சி நடந்து கொண்டிருக்கும்பொழுது, அந்த ஆட்சிமீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டால், அந்த வேளையில் சம்பவ தினத்தன்று குறித்த சட்டமன்றத்தில் வருகை அளிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பாதிக்குமேல் ஓர் உறுப்பினரின் ஆதரவு ஆளுந்தரப்பிற்கு இருந்தாலும் அந்த ஆட்சி நம்பிக்கை இல்லாத் திர்மானத்தில் வென்றுவிட்டதாகக் கருதி ஆட்சியில் தொடர அனுமதிக்கப்படும்.

ஆனால், இன்றைய சூழலில், தமிழக சட்டமன்றத்தில் புதிய ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொள்ளும் தமிழக வெற்றிக் கழக-தவெகத் தலைவர் இன்னோரு கட்சியின் ஆதரவைப் பெற்ற நிலையிலும் 113 என்ற என்னும் எண்ணிக்கையைத்தான் பெற்றுள்ளார்.

118 என்னும் பெரும்பான்மைக்கு இன்னும் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்த 113-யிலும் கூட பெரம்பூர், திருச்சி-2 ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளின் சார்பில் ஒருவர் மட்டும் உள்ளார். அதன்படி 112 உறுப்பினர்களின் எண்ணிக்கை மட்டும் அதாவது இரு கட்சிகள் கூட்டு சேர்ந்தும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லை என்று ஆளுநர் ஆர்.வி.அர்லேகரிடம் நடிகருமான விஜய் கையை விரித்துவிட்டார்.

ஆட்சி அமைக்கும் முன்னமே உரிய பெரும்பான்மையை எட்டவில்லை-கிட்டவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக் கனியாக அல்ல; உள்ளங்கை மாங்கனியாக உள்ளபோதும் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அனுமதிக்க வேண்டும் என்றும் பாஜக-வின் கமுக்க நகர்விற்கேற்ப ஆளுநர் செயல்படக் கூடாதென்றும் விசிக தலைவர் கொந்தளிப்பது அவரின் ஆழ்மனதை, உள்ளக் கிடக்கையை, பதவி மோகத்தை பளிச்செனக் காட்டுகிறது.

பெரும்பான்மை இல்லையெனத் தெரிந்தும் ஆட்சி அமைக்க அனுமதி கோருவதும் பின்னர் நிரூபிப்பார் என்று ஒருசில பத்திரிகையாளர்கள் சொல்வதும் என்ன ஜனநாயகம்-என்ன அரசியல் புரிதல் என்று புரியவில்லை?. இதைப் போன்றவர்கள், தத்தம் ஆசையை நெஞ்சறையைத் திறந்து பச்சையாக வெளிப்படுத்துகின்றனர்.

இவர்கள்தான் இப்படி யென்றால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(வலது)யின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியனும் தொல்.திருமாவளவனை வழிமொழிவது இன்னும் மோசம். பொதுவுடைமை இயக்கம் எதற்கோ ஏங்குவதைப் போலத் தெரிகிறது.

இன்னொன்று, தவெக கட்சியும் அதன் தலைவர் விஜய்யுமே பாஜக கட்டமைப்பாக இருக்கும்பொழுது, பாஜக தலையீடு இங்கு தேவையில்லை என்று திருமாவளவன் சொல்வது இன்னும் வியப்பானது.

பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் சட்ட மன்றம்தானேத் தவிர, ஆளுநர் மாளிகை அல்ல என்று கமலகாசன் தெரிவித்திருப்பது இன்னும் விபரீதமானது.

காலம் உரிய பதிலை உரியோர்க்குச் சொல்லும்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை