Saturday, June 6, 2026

முள்ளிவாய்க்கால் ஈகியர்க்கு எம் வீரவணக்கம்!

2009 ஆம் ஆண்டு எவராலும் மறக்க முடியாத ஆண்டு.. ஈழ விடுதலை வரலாற்றில் முள்ளியவலை நிலப்பரப்பில் எம் தமிழிழீழ மக்கள் குறுக்கப் பெற்றுப் பேரழிவுக்கு உட்படுத்தப்பட்டக் காலக்கட்டமே.. 2009 ஆம் ஆண்டு..

உலகெங்கும் எம் தமிழீழ உறவுகளை மீட்பதற்கான அறப்போர்க்குரல் எழுப்பப் பெற்றன. எவ்வளவோ முயன்றும் எதுவும் செய்ய முடியாத கையறு நிலையே உலகெங்கும் வாழும் தமிழர்க்கு ஏற்பட்டது.

பல்லாயிரவர் எம் தமிழர், சிங்கள இந்திய அமெரிக்க சீன மேலும் சில நாடுகளின் கூட்டினால் அழித்தொழிக்கப்பட்டனர். ஐம்பத்தாராயிரத்திற்கும் மேற்பட்ட எம் தமிழீழ விடுதலைப் போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்கள்.

உடலுறுப்பு இழந்து இன்றளவும் துன்புறுவார் பலர். எம் தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக முள்வேலிக் கம்பிக்குள் அடைக்கப் பெற்றனர். எம் தமிழீழ மக்களின் அவலக் குரல் இன்றளவும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டுள்ளது..

தமிழீழ மக்களின் இனப் பேரழிப்புக்கு இன்றளவும் ஒரு தீர்வில்லை.. உலக நாடுகளில் தமிழீழ மக்களுக்கான குரல் தொடர்ந்து ஒடுக்கக்பட்டே வருகின்றது.

நெருப்பாற்றில் எதிர்நீச்சலைப் போட்டு போர்க்களத்தில் களமாடிய வீரத்தமிழ்ப் படை பிரபாகரன் எனும் வரலாற்றுத் தலைவனின் கட்டமைப்பில் குறைந்தது முப்பத்தைந்து ஆண்டு காலம் வீர வரலாறு படைத்தது.

முள்ளிவாய்க்கால் நமக்கு முடிவல்ல.. கருவி ஏந்திய போர் ஒரு முடிவுக்கு வந்தாலும் .. மக்களின் போராட்ட வடிவம் மாறியிருக்கின்றது.. காலம் பல கடந்தாலும் தமிழீழ மக்களின் ஈகத்திற்கு விடிவொன்று கட்டாயம் பிறக்கும் எனும் நம்பிக்கை மட்டும் மனத்தில் என்றென்றும் உயிர்ப்பாய்த் துடித்துக் கொண்டுள்ளது..

பகையானவன் தொடர்ந்து பல்வகை வடிவுகளில் ஈழமக்களின் எழுச்சி உருவாகாமல் பார்த்துக் கொள்வதில் கண்ணுங்கருத்துமாகவே உள்ளான். அடுத்துவரும் தலைமுறை வரலாறறியாத, தமிழின உணர்வற்ற, சிற்றின்ப வேட்கையுடையதாக இருத்தல் வேண்டும் அல்லது போலியான தமிழ்த்தேசிய வளையத்துக்குள் சிக்கி காயடிக்கப்படுதல் வேண்டும் எனும் நோக்கில் எதிரியானவன் திட்டமிட்டு இயங்கிக் கொண்டிருக்கின்றான். போலியான வெற்று அரசியல் கூச்சலுக்கும் சாதி, மத வெறிமிக்க வலச்சாரி கோட்பாடுக்குள்ளும் தள்ளப்பெற்று தமக்குள்ளாகவே அடிமைப்போக்கை உருவாக்கி ஒன்றுக்கும் உதவாத ஏய்த்துப் பிழைக்கும் போலித் தலைமைகளின் பின்னால் செல்பவர்களாக இளையோரை எதிரியானவன் திட்டமிட்டு நகர்த்தியுள்ளான். கூர்த்த அறிவில்லாமல் உணர்ச்சிக்கு ஆட்படுவார் எது மெய் எது பொய் என அறியமாட்டார். போலிமைகளை நம்பி காலத்தைக் கடத்தி விடுவார்.

ஈழத்தமிழினம் இச்சிக்கலுக்குள் ஆட்படாமல் இனியாவது விழிப்பாய் இருத்தல் வேண்டும். உலகெங்கனும் தனித்தன்மையோடு விளங்கி ஒற்றை நோக்கோடு ஒருங்கிணைய வேண்டும்.

ஈழப்போரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட விடுதலை மறவர்க்கும் தமிழீழ மக்கட்கும் எம் வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்..

சிதைத்தீப் பறவையாய் ஏழாரோ?

முள்ளிவாய்க்கால் கடலருகே என்
கால்கள் பதிந்த காலத்திலே
முல்லைவீரர்தம் முகமறிந்தேன் எம்
முந்தையர் ஆற்றிய அறம் விதைத்தேன்

அன்றைய நாளினில் நிரோசன் எனும்
அருந்தமிழீழக் கடல் தளத்தில் நான்
தென்றமிழ்ச் சொல்லெடுத் துரைக்கையிலே எந்
தென்னவர் கடல்படை வேட்பறிந்தேன்

எத்தனை எத்தனை மறவர்படை எம்
முத்தமிழ்த் தலைமகன் விடுதல்படை
செந்தமிழ் நாட்டினைப் படைப்பதற்கே அவர்
வெந்தணல் போரினில் உயிரீந்தார்

குமரிப்பெருநிலக் கடற்பரப்பில் எந்
திமிரும் தோள்புடைத் தெழுந்திடவே
முல்லைக் கடலலை கதைத்திடவே
எல்லையிலா உணர்ச்சியில் மெய்மறந்தேன்

திடுமென என்னுளப் பெருங்களிப்பு பெருங்
கொடுமையில் எம்மினம் அழிந்ததுவால்
சொல்லொணாத் துன்பினில் ஆழ்ந்த தம்மா.
அல்லலுற் றெம்மனம் சிதைந்தம்மா

எம்மரும் மக்களின் அவலக் குரல் எம்
வெம்புண் செவிகளில் ஒலிகின்றதே
ஐயவோ அம்மவோ என் செய்வேன்
பொய்யென் றாகாதோ பேரழிவு

மெய்யென் றாகாதோ தமிழீழம் எஞ்
செயலருந் தலைவனின் பெருங்கனவு ..
விதையாய் விதைந்தவர் விளைவாரோ ஒரு
சிதைத்தீப் பறவையாய் ஏழாரோ?

இரா. திருமாவளவன்

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை