
மலேசிய இந்திய வர்த்தக – தொழில் முனைவோர் மேம்பாட்டிற்காக 220 மில்லியன் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ள-தற்காக மலேசிய இந்திய வர்த்தக தொழிற்சங்க சம்மேளனத்தின்-MAICCI சார்பில் ‘MAICCI – MUDRA Roadshow 2026’ என்னும் பெயரில் பிரச்சார நடவடிக்கையை நாடு முழுவதும் மேற்கொள்ள இருப்பதாக அதன் தலைவர் டத்தோஸ்ரீ நா. கோபாலகிருஷ்ணன் அறிவித்தார்.
இந்தத் திட்டம், தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் (KUSKOP) கீழ் செயல்படுத்தப்படும் MUDRA 2026 பொருளாதார ஊக்கத் திட்டத்தின் ஓர் முக்கிய முயற்சியாகும்.
இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை வெ.220 மில்லியன் மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை மைக்கி முழுமையாக வரவேற்பதாக அவர் மேலும் கூறினார்.
இந்த ரோட்ஷோ மூலம் நாடு முழுவதும் உள்ள 3,000-க்கும் மேற்பட்ட இந்திய தொழில்முனைவோருக்கு நிதி உதவி, பயிற்சி, தொழில் வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் வணிகக் கட்டமைப்பு தொடர்பான தகவல்கள் வழங்கப்படவுள்ளதாக இதன் தொடர்பு இன்று மைக்கை தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும், சிறு-குரு நடுத்தர தொழில் நிறுவனங்கள், இளைஞர் தொழில்முனைவோர், பெண்கள் தொழில்முனைவோர் மற்றும் இந்திய கூட்டுறவுச் சங்கங்களை அணுகும் வகையில் முக்கிய தளமாக இந்தத் திட்டம் அமையும் எனவும் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் கூறினார்.
முத்ரா- MUDRA திட்டத்தின்கீழ் முகமை நிறுவனங்களாக SPUMI-TEKUN National, VANIGHAM- SME Bank, BRIEF-i-Bank Rakyat,PENN 2.0- Amanah Ikhtiar Malaysia(AIM), BAKTI MADANI, Tabung Modal Pusingan(TMP), Suruhanjaya Koperasi Malaysia(SKM) ஆகியவை நியமிக்கப்பட்டுள்ளன.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள வர்த்தக- வாணிப மானியத்திற்காக விண்ணப்பம் செய்வோம் மேற்கண்ட நிறுவனங்களின் மூலம் நேரில் விண்ணப்பம் செய்யலாம் அல்லது தங்களையும் அணுகலாம் என்று கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தின் முதல் நிகழ்ச்சி கடந்த மே 10ஆம் நாள், பினாங்கு புக்கிட் மெர்தாஜாமில் நடைபெற்றது.
தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் ஸ்டீவன் சிம் இந்நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு உள்ளூர் தொழில்முனைவோர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததாகவும், MUDRA திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி மற்றும் தொழில் மேம்பாட்டு வாய்ப்புகள் குறித்து பலர் ஆர்வம் காட்டியதாகவும் தெரிவித்தார்.
இத்திட்டத்தின்கீழ் ஒதுக்கப்பட்டுள்ள வெ.220 மில்லியனில் இதுவரை வெ.70 மில்லியன் தொழில் முனைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த மானியத்திற்கு விண்ணப்பம் செய்வதற்கு தொழில் முனைவர்களுக்கு மைக்கி உதவி செய்யவும் தயாராக உள்ளதாக அவர் சொன்னார்.


