Saturday, June 6, 2026

மர்லின் மன்றோவும் ஜான் எஃப் கென்னடியும்!

மனித வாழ்க்கையில் எத்தனையோ நிகழ்ச்சிகளுக்கு விடை தெரிவதில்லை. ஒருசில சம்பவங்களுக்கு காலம் கடந்தாவது விடை கிடைக்கும். ஆனால், ஏராளமான நிகழ்ச்சிகளை நாம் கடந்துதான் செல்ல வேண்டியுள்ளது. அறிவியல் வளர்ச்சியின் உச்சத்தில் நாம் வாழ்ந்தாலும் இதுதான் உண்மை நிலை.

மலேசியர்களைப் பொறுத்தவரை இரண்டு அண்மைய சம்பவங்களைச் சுட்டலாம்; ஒன்று மலேசிய போக்குவரத்து விமானம் எம்.எச்.370 அல்லது புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி சீன சதர்ன் ஏர்லைன்ஸ் விமானமான CZ748 ஆகும். 227 பயணியர் – 12 பணியாளர்களுடன் கோலாலம்பூரில் இருந்து புறப்பட்ட இந்த விமானம், 2014 மார்ச் 9-ஆம் நாள் காலை 6:00 மணி அளவில் பெய்ஜிங் பன்னாட்டு முனையத்தில் இறங்கியிருக்க வேண்டும்; ஆனால், இந்த போயிங் 777 வகை விமானம் காணாமல் போனது; அதைப்போல, விஜயலெட்சுமி என்ற சுற்றுப்பயணி, கோலாலம்பூர் மஸ்ஜிட் இந்தியா பகுதி நடைபாதையில் காணாமல் போனார்;

அப்படித்தான், அமெரிக்காவின் 35-ஆவது அதிபர் ஜான் எஃப் கென்னடியின் மரணமும் அவருடன் நட்பில் இருந்த மர்லின் மன்றோவின் மறைவும்!.

உலக அளவில் தலைவர்கள், மேதையர், அறிஞர் பெருமக்கள் உள்ளிட்டோர் தத்தம் கையெழுத்தை தம் அடையாளமாகவும் ‘முகமாகவும்’ கொண்டிருந்தனர்.

தேச தந்தை துங்கு அப்துல் ரஹ்மான், பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி, ஆசிய சோதி ஜவஹர் லால் நேரு, நேருவின் உற்ற நண்பர் ஜான் எஃப் கென்னடி, ஐரிஷ் மொழிக்காரராக இருந்தாலும் காலமெல்லாம் உலக அளவில் சிந்தித்த தத்துவ அறிஞர் பெர்னாட்ஷா, தந்தை பெரியார், சர். ஏ.டி. பன்னீர் செல்வம், எம்ஜிஆர், துன் மகாதீர் போன்றோரின் கையெழுத்தில் தாங்கள் எப்படி அழைக்கப்(படுகின்றரோ) பட்டனரோ அல்லது தங்களின் இயற்பெயர் என்னவோ அந்தப் பெயரில் உள்ள அனைத்து எழுத்துகளும் தெரியும்படி கையெழுத்திடுவது வழக்கம்.

ஜார்ஜ் பெர்னாட்ஷாவின் வாழ்க்கையில் இடம்பெற்றதாக ஒரு சுவையான சம்பவத்தை பலரும் பலவேளைகளில் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

அழகான பெண்ணொருத்தி, அவரை அணுகி, நாம் இருவரும் மணம்புரிந்து கொண்டால், உங்களைப் போல அறிவும் தன்னைப் போல அழகும் வாய்த்த குழந்தை பிறக்கும் அல்லவா என்று வினவியதும் சற்றும் யொசிக்காமல் சட்டென பெர்னாட்ஷாவும் இன்னொரு கேள்வியையே பதிலாகத் தந்தாராம்.

“நீ சொல்லும் வண்ணம் நிகழ்ந்தால் இருவருக்கும் நல்லதுதான்; ஒருகால், உன்னைப் போல அறிவும் என்னைப்போல அழகும் கொண்ட குழந்தை பிறந்தால் என்ன செய்வது?” என்பதுதான் அந்த பதில் வினா.

உண்மையில் இப்படி நடந்திருக்குமா என்பது ஐயமே; எந்த வேளையிலும் எவரிடத்தும் நாகரிகக் குறைவாகவோ அல்லது முகத்தில் அடித்தாற்-போன்றோ பேசாதவர் ஜார்ஜ் பெர்னாட்ஷா. அப்படிப்பட்ட மேதை, ஒரு பெண்ணிடம் உனக்கு அறிவு குறைவு என்னும் கருத்துடப்பட, நேருக்கு நேர் பேசியிருப்பாரா என்பது சிந்தனைக்குரியது.

ஆனாலும் அழகும் அறிவும் ஒருங்கே வாய்க்கப்பெற்று பிறந்தார் ஒரு தாரகை; அவர்தான் மர்லின் மன்றோ. அவருக்கு இன்று பிறந்த நாள்; ஜூன் 01.

1926-ஆம் ஆண்டில் இதே நாளில் பிறந்த மர்லின் மன்றோ, ஹாலிவுட் நட்சத்திர நாயகியாக ஏறக்குறைய 15 ஆண்டு வலம் வந்தவர். அவர் வெளிப்படுத்திய நாகரிகக் கவர்ச்சி, அறிவார்ந்த கருத்து, சுதந்திரமான சிந்தனை யாவும் இன்றும் உலக அளவில் உயிர்ப்புடன் உள்ளன.

மன்றோ தன் வாழ்க்கையை ஒரு தொழிற்சாலைத் தொழிலாளியாகத் தொடங்கி, பின்னர் ஒரு புகைப்படக் கலைஞரின் பார்வையில் பட்டு மாடல் அழகியாக உருமாறி, அந்த வெளிச்சத்தின் அடிப்படையில் ஹாலிவுட் நடிகையாக உயர்ந்தார்.

Gentlemen Prefer Blondes, Niagara, The Seven Year Itch போன்ற படங்கள் அவரை உலகின் மிகப்பெரிய நட்சத்திர நாயகியாக மாற்றின.

அமெரிக்கத் திரை உலகின் அழகிய சின்னமாக விளங்கிய மர்லின் மன்றோ, அரசியல் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளிலும் பொது விவாதங்களிலும் கலந்து கொண்டு அவர் வெளிப்படுத்திய கருத்தும் முதிர்ச்சியும் பெருந்தலைவர்களையே வியப்பில் ஆழ்த்தின.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் பிறந்த அவர், 36 ஆண்டுகள், 2 மாதங்கள் 4 நாட்கள் மட்டுமே வாழ்ந்திருக்கிறார். 1962 ஆகஸ்ட் திங்கள் 4ஆம் நாள் முன்னிரவு அல்லது அடுத்த நாள் காலையில் மறைந்ததாக தெரியவந்தது.

64 ஆண்டுகளை எட்டியபின்னும் அவரின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பது இன்றுவரை தெரியவில்லை.

மர்லினின் நடிப்புத் திறமைக்கு Bus Stop (1957), Some Like It Hot (1959) ஆகிய படங்கள் தக்கசான்றாகும். ‘Some Like It Hot’ படத்திற்காக அவர் ‘Golden Globe’ என்னும் உயரிய விருதைப் பெற்றார். Marilyn Monroe Productions என்ற பெயரில் திரைப்பட நிறுவனத்தை சொந்தமாகவும் நடத்தி வந்தவர் மர்லின் மன்றோ.

இந்தச் சூழலில், 1962 மே 19-இல், Madison Square Garden வளாகத்தில் அதிபர் கென்னடிக்காக நடைபெற்ற பிறந்தநாள் விழாவில், மன்றோ “Happy Birthday, Mr. President” என பாடிய தருணம், அமெரிக்க அரசியலின் மிகவும் முத்திரைப் பதித்த நிகழ்வாகும். அந்த நிகழ்ச்சி, கென்னடியுடன் அவர் கொண்டிருந்த நெருக்கமான தொடர்பு குறித்து, பல்வேறு ஊகங்களை எழுப்பின.

மேலே தெரியும் ஜான் எஃப் கென்னடி, பெர்னாட் ஷா, ஜவஹர்லால் நேரு ஆகியோரின் கையெழுத்துகளைப் போலவே மர்லின் மன்றோவின் கையெழுத்திலும் அவரின் பெயரில் உள்ள எழுத்துகள் யாவும் தெரியும்.

மன்றோவின் பெயர், ஜான் எப். கென்னடி மட்டுமல்லாமல், அவரின் சகோதரர் ராபர்ட் கென்னடி உள்ளிட்ட கென்னடி குடும்ப உறுப்பினர்களுடனும் சம்பந்தப்படுத்தப்பட்டது. இது அமெரிக்க திரை உலகம்-ஹாலிவுட் மற்றும் அரசியல் உலகம் இரண்டிற்கும் இடையே உள்ள பாலமாக அப்போது பார்க்கப்பட்டது.

அதைவிட, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அதிபர் கென்னடி, தன்னுடைய அரசியல் பயணத்தில் சமதருமம் என்னும் இடச்சாரிப் போக்கைக் கொண்டிருந்தார்; இன்றைய அதிபர் டோனால்ட் டிரம்ப் எதையும் இன-மத அடிப்படையில் சிந்திப்பதையும் செயல்படுவதையும் நோக்கமாகவும் கடும்போக்காகவும் கொண்டவர்; இவர் மட்டுமல்ல; இருகட்சி அரசியல் நிலைகொண்டுள்ள அமெரிக்காவில், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நிக்சன், ஜார்ஜ் புஷ் உள்ளிட்ட எல்லாத் தலைவர்களும் இப்படித்தான்.

மர்லின் மன்றோவும் மெல்லிய இடச்சாரிப் போக்கு கொண்டவர். அவர், கென்னடியுடன் நெருக்கமாக இருந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

மொத்தத்தில், கென்னடி-மன்றோ இருவரின் மரணத்திலும் நீடிக்கும் மர்மம், இன்றுவரை அவிழ்க்கப்படாத முடிச்சுகளாகவே உள்ளன.

காலம் பதில் சொல்லுமா?

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை