
சயாம் மரண ரயில் தண்டவாள கட்டுமானத் திட்டத்தில் உயிர்நீத்தவர்களுக்கு மே 31, ஞாயிற்றுக்கிழமை தாய்லாந்தின் காஞ்சனாபுரியில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
எங்கிருந்தோ இங்கு வந்தவர்கள் எந்த சம்பந்தமும் இல்லாத தோட்டப் பாட்டாளித் த்மிழர்களை வலுக்கட்டாயமாக துப்பாக்கி முனையில் கடத்தி தங்களின் இராணுவ நடவடிக்கைக்காக ரயில் தண்டவாளம் அமைக்க அழைத்துச் சென்று, அப்படியே வரலாற்றில் மறைக்கப்பட்டு, மறக்கப்பட்டு, நினைவிடத்தில் மட்டும் சங்கமமாகிவிட்ட தியாகியரின் குடும்பத்தினர் சிறியோரும் பெரியோருமாக அணிதிரண்டு தாய்லாந்திற்கு ‘நினைவுகூர் பயணம்’ மேற்கொண்டுள்ளனர்.
இரண்டாம் உலகப் போர் காலக்கட்டத்தில், ஜப்பானிய ஆக்கிரமிப்பின்போது மலேசியாவிலிருந்தும் சிங்கப்பூரிலிருந்தும் அழைத்துச் செல்லப்பட்டு, சக்கையாகப் பிழிந்து வேலைவாங்கப்பட்டனர். அப்படி பாதிக்கப்பட்டு காணாமல்போனவர்களின் பிள்ளைகள், பேரக்குழந்தைகள், கொள்ளுப்பேரக் குழந்தைகள் என முப்பது பேர் கொண்ட குழுவினர் நான்கு தினங்களுக்கு முன்பு காஞ்சனாபுரிக்குப் புறப்பட்டனர்.

80 ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானிய ஆக்கிரமிப்பின்போது அழைத்துச் செல்லப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில், சயாம்-பர்மா மரண ரயில் கட்டுமானத்தின்போது பாதிக்கப்பட்டவர்களின் வழித் தோன்றலினர், தாய்லாந்தின் காஞ்சனபுரிக்குத் தங்கள் பயணத்தைத் தொடங்க கோலாலம்பூரின் பாரம்பரிய அடையாளங்களுள் ஒன்றான பழைய ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டனர்.
மலேசிய சயாம் மரண ரயில் ஆர்வலர்க் குழுவினரால் இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது.
சயாம் ரயில் பாதையை அமைக்க அனுப்பப்பட்ட தொழிலாளர்கள் பயணித்த அதேவழியை பின்பற்றும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த 24 மணி நேரப் பயணத்திற்காக, இந்தக் குழுவின் உறுப்பினர்கள் கடந்த வெள்ளிக்கிழமை மே 29-ஆம் நாள் காலையில் ரயிலில் புறப்பட்டதாகத் தெரிவித்த இக்குழுவின் தலைவர் பி. சந்திரசேகரன், “போருக்குப் பிறகு பல ஆசியத் தொழிலாளர்களின் உடல்கள் சேகரிக்கப்பட்டு அடக்கம் செய்யப் பட்டதாக நம்பப்படும் காஞ்சனாபுரியில் உள்ள ஒரு கல்லறையையும் தங்கள் குழுவினர் பார்வையிடுவர்” என்று ஏற்கெனவேத் தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில் நேற்றைய முன்தினம் காஞ்சனாபுரி நினைவிடத்தில் மரியாதை செலுத்தி, நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தினர். இதன் தொடர்பில், மலேசியாவில் இருந்து ஒரு அர்ச்சகரையும் அழைத்துச் சென்றனர். அவரின் தந்தையும் இந்த மரண ரயில் திட்டத்தில் பங்கேற்று தன் இன்னுயிரை ஈகம் செய்தவர். இந்த அர்ச்சகர், கடைசிவரை, தன் தந்தையின் முகத்தைப் பார்க்கவே இல்லையென சந்திரசேகரன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், காஞ்சனாபுரி மாகாண ஆளுநர் சார்பில் இரு மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டதை மிகவும் பெருமையாகக் கருதும் அதேவேளை, இதற்கான ஏற்பாட்டை ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஜெனரல் டாக்டர் சுரிஞ் ஜன்பியான் செய்ததாகவும் சந்திரசேகரன் தெரிவித்தார்.
நேற்று ஜூன் முதல் நாள், தாய்லாந்து-மியன்மார் எல்லையை அடைந்தோம் என்றும் சந்திரசேகரன் கூறினார்.

இதே காஞ்சனாபுரியில் அண்மையில் நடந்த கலந்துரையாடல்மூலம், நேச நாடுகளின் போர்க் கைதிகளின் கல்லறைக்கு அருகில் அமைந்துள்ள ஒரு சீனக் கல்லறைக்கு ஆசியத் தொழிலாளர்களின் உடல்கள் மாற்றப்பட்டதாகக் தெரிவிக்கப்பட்டது என்று சந்திரசேகரன் மேலும் சொன்னார்.
“போருக்குப் பிறகு, ஆயிரக்கணக்கான உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அந்த உடல்களை சேகரித்து ஒரேக் கல்லறையில் அடக்கம் செய்தனர். இந்த ஆன்மாக்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை மரியாதை செலுத்துவதற்காக அதன்மீது ஒரு பகோடாவை(நினைவுச் சின்னம்) அமைத்துள்ளனர்,” என்றும் அவர் கூறினார்.
“இந்தப் பயணத்தை மேற்கொண்டவர்களில் 86 வயதான எஸ். கோவிந்தசாமியும் ஒருவர். அவரின் தந்தை 1941-ல் கோவிந்தசாமி பிறந்த சிறிது காலத்திலேயே ஜப்பானியர்களால் கடத்தப்பட்டு, பின்னர் திரும்பவே இல்லை”.
“கோவிந்தசாமி தன் தந்தையின் முகத்தைப் பார்த்ததே இல்லை என்றும் சிறு வயதிலேயே ஆதரவற்ற நிலைக்கு ஆளாகி, பின்னர் உறவினர்களால் வளர்க்கப்பட்ட நிலையில், தற்பொழுது தாய்லாந்தில் நடைபெறும் வருடாந்திர நினைவுப் பிரார்த்தனையில் பங்கேற்பது, தான் அறியாத தந்தையை நெருக்கமாக உணர வைப்பதாக கோவிந்தசாமி குறிப்பிட்ட தகவல் மனதை நெருடுவதாக இருந்தது”.

மலேசியாவின் ‘மரண ரயில் பாதை ஆர்வக் குழு’ (The Death Railway Interest Group Malaysia), கோவிட்-19 ஊரடங்கு சமயத்தைத் தவிர, 2018 முதல் ஆண்டுதோறும் இத்தகைய நினைவுப் பயணங்களை ஏற்பாடு செய்து வருகிறது. மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான அங்கீகாரம் கோரி மலேசிய, இந்தியப் பிரதமர்களுக்கு கடிதங்களை அனுப்பியுள்ளதாகவும் சந்திர சேகரன் கூறினார்ர்.
“பெரும்பாலும் ஆவணப்படுத்தப்படாமல் மறக்கப்பட்ட ஆசியத் தொழிலாளர்களின் துன்பத்தையும் ஈகத்தையும் உயிர்ப்புடன் வைத்திருப்பதே இந்த வருடாந்திரப் பயணத்தின் நோக்கம்,” என்று சந்திரசேகரன் கூறினார்.
“ஒவ்வோர் ஆண்டும் நினைவிடங்கள், கல்லறைகள் மற்றும் வருடாந்திர நினைவு விழாக்கள் இடம்பெறுவதால், நேச நாடுகளின் போர்க் கைதிகளைப் பற்றியும் பொதுமக்கள் அறிந்துகொள்ள முடிகிறது.
“குறிப்பாக, நாங்கள் எந்தத் தரப்பினர் மீதும் புகார் கூற விரும்பவில்லை; ஆனால், எங்கள் முன்னோர் எங்கே? “ஏறக்குறைய ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என்பது நம் அனைவருக்கும் தெரியும், ஆனால் அவர்கள் எங்கே என்று யாருக்கும் தெரியவில்லை” என்று சந்திரசேகர் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

அதிகாரப்பூர்வ பதிவுகள் இல்லாததால் துல்லியமான விவரங்கள் இல்லை; இருந்தாலும், 3 லட்சம் வரையிலான ஆசியத் தொழிலாளர்கள் அந்த சயாம் ரயில் தண்டவாள கட்டுமானத்தில் வேலை செய்ய அழைத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று மதிப்பீடுகள் குறிப்பிடுவதாகவும் சந்திரசேகரன் கூறினார்.
மேற்கத்திய போர்க் கைதிகளுக்காகக் கட்டப்பட்ட நினைவிடங்களைப் போலவே, ஆசியர்களுக்கான குறிப்பாக தமிழர்களுக்கான ஒரு நினைவுச்சின்னத்தையும் தகவல் மையத்தையும் நிறுவ வேண்டும் என்று மலேசிய, இந்திய மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களை கேட்டுவருவதாகாவும் சந்திரசேகரன் கூறினார்.
இந்தக் குழுவினருடன், கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரக முதல்நிலை செயலாளர் ராஜேஷ் எச். மணியிள் என்பவரும் இணைந்து கொண்டார்.


